அரசியல்
அலசல்
Published:Updated:

பருவ இதழா இந்திய அரசியல் சட்டம்?

பருவ இதழா இந்திய அரசியல் சட்டம்?
பிரீமியம் ஸ்டோரி
News
பருவ இதழா இந்திய அரசியல் சட்டம்?

சுதந்திர இந்தியாவுக்கு அரசமைப்புச் சட்டம் தேவை என்பதற்காக முதலில் குரல் எழுப்பியது எம்.என்.ராய் என்ற இந்திய கம்யூனிஸ்ட் ஒருவரே.

பாரிஸ் நகரத்தின் புத்தகக் கடைக்குச் சென்ற ஒருவர், ‘பிரான்ஸ் நாட்டின் அரசியல் சட்டப் புத்தகம் கிடைக்குமா?’ என்று கேட்டதற்கு அங்கிருந்த விற்பனையாளர், ‘நாங்கள் பருவ இதழ்களை விற்பதில்லை’ என்று கூறினாராம். அந்நாட்டு அரசியல் சட்டம், அரை நூற்றாண்டில் 23 முறை திருத்தப்பட்டது என்பதே அந்தக் கோபமான பதிலுக்குக் காரணம். இந்திய அரசியல் சட்டம் 103 முறை திருத்தப்பட்டும், நாம் இன்றும் அச்சட்டத்தைப் பெருமையாக மதிக்கிறோம். கடந்த 70 ஆண்டுகளில், நமது அண்டை நாடுகள் கடந்து சென்ற பாதையைப் பார்க்கும்போது நமது பாதை எவ்வளவோ மேல் என்று நம் சட்டம் உலகுக்கு உணர்த்தியுள்ளது!

பருவ இதழா இந்திய அரசியல் சட்டம்?

‘மதச்சார்பின்மை’ நீக்கம்?

கடந்த மாதம், ‘இந்து துறவியர்கள் மாநாடு’ வாரணாசியில் கூடி, ஒரு புதிய இந்து அரசியல் சட்டத்தை உருவாக்க முயன்றுவருவதாகத் தகவல்கள் வெளியாகின. அவர்கள் தயாரித்த சட்ட வரைவில் இந்தியாவை இந்துக்களுக்கான நாடு என்றும், இதர மதத்தினர் வேண்டுமென்றால் இங்கு வியாபாரம் செய்துகொள்ளவும், கல்வி கற்கவும் தடையில்லை என்றும் அறிவித்துள்ளனர். இது போதாதென்று கடந்த வாரம் சுப்பிரமணியன் சுவாமி தனக்கே உரித்தான பாணியில் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலுள்ள ‘சோசலிசம்’, ‘மதச்சார்பின்மை’ என்ற இரு வார்த்தைகளையும் நீக்குவதற்காக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மேலும், கர்நாடக மாணவிகள் சீருடை வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஹேமந்த் குப்தாவும் தனது பங்குக்கு, ‘1976-ம் வருடம் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தில் நுழைக்கப்பட்ட அவ்விரு வார்த்தைகளும் கொள்கைப் பிரகடனம் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

பருவ இதழா இந்திய அரசியல் சட்டம்?

இப்படி ஆளாளுக்கு அரசமைப்புச் சட்டத்தைப் பங்கு போடுவதை அனுமதிக்க முடியுமா... அரசமைப்புச் சட்டம் ஒரு புனித நூலா... என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டுவருகின்றன. நமக்குப் பின்னால் உருவான வங்கதேச அரசமைப்புச் சட்டம், அச்சட்டத்தை அவமதிப்பவர்கள் (அ) அவதூறு செய்பவர்களுக்கு மரண தண்டனைகூட விதிக்கலாம் என்கிறது. ஆனால், நமது அரசமைப்புச் சட்டத்தில் அதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்ட தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை. ஏற்கெனவே, 103 முறை திருத்தப்பட்டுள்ளது. ‘அரசமைப்புச் சட்டத்தையும், அதிலுள்ள அடிப்படை உரிமைகளையும்கூட நாடாளுமன்றம் திருத்தலாம். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற முடியாது’ என்று கேசவானந்த பாரதி வழக்கில் 13 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். ஆனால், ‘அடிப்படைக் கட்டமைப்பு’ என்றால் என்ன என்பதை அவர்கள் விளக்க முன்வரவில்லை.

அரசமைப்புச் சட்டமும் திருத்தமும்..!

சுதந்திர இந்தியாவுக்கு அரசமைப்புச் சட்டம் தேவை என்பதற்காக முதலில் குரல் எழுப்பியது எம்.என்.ராய் என்ற இந்திய கம்யூனிஸ்ட் ஒருவரே. அதற்குப் பின்னரே காங்கிரஸ் கட்சியும் சுதந்திர இந்தியாவுக்கென தனியாக ஓர் அரசமைப்புச் சட்டம் உருவாக்குவோம் என்ற தங்களது கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டது.

ஒருவழியாக, அரசமைப்புச் சட்ட மாதிரி வரைவை உருவாக்கும் குழுவின் தலைவராக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் விவாதத்துக்குப் பிறகு, அச்சட்டத்தின் இறுதி வடிவம் 26.11.1949 அன்று அவையினரால் நிறைவேற்றப் பட்டது. இறுதி வடிவத்தை அறிமுகப்படுத்தி அன்று அம்பேத்கர் பேசிய உரை சரித்திரப் புகழ் வாய்ந்தது.

அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இறையாண்மை பெற்ற இந்திய ஜனநாயகக் குடியரசு 26.1.1950-ல் நடைமுறைக்கு வந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ இதழான, ‘ஆர்கனைசர்’ என்ற இதழில், புதிய அரசியல் சட்டத்தில் மனுஸ்மிருதி பற்றி குறிப்பிடப் படாததைப் பற்றி அங்கலாய்த்திருந்தனர். இப்படிப் பலரும் தங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் மீது உண்டான ஆதங்கங்களை அவ்வப்போது வெளியிட்டேவந்தனர்.

1969-ம் வருடம் இந்திரா காந்தி கொண்டுவந்த தனியார் வங்கிகள் தேசியமயம், மன்னர் மானிய ஒழிப்புச் சட்டங்களை, உச்ச நீதிமன்றம் சொத்துரிமை மீறப்பட்டதாகக் காரணம் காட்டி ரத்துசெய்தது. சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்காகக் கொண்டுவரப்பட்ட சட்டங்களை ரத்துசெய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையை மாற்றுவதற்காக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது (24 மற்றும் 25-வது திருத்தங்கள்). அப்போது பெருமுதலாளிகளின் ஆதரவைப் பெற்ற சுதந்திரா கட்சியைத் தவிர, இதர கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தை திருத்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்தின.

எம்.என்.ராய்
எம்.என்.ராய்

நெருக்கடிகாலச் சட்டத் திருத்தம்!

ரேபரேலி தொகுதியில் வெற்றிபெற்ற இந்திரா காந்தியின் தேர்தலை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக `உள்நாட்டு நெருக்கடி’ என்று நெருக்கடி நிலைமையை இந்திரா காந்தி 1975-ம் வருடம் பிரகடனப்படுத்தினார். நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு 42-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் பல திருத்தங்களை இந்திரா அரசு கொண்டுவந்தது. நெருக்கடி நிலைமைக்குப் பிறகு வெற்றிபெற்ற எதிர்க்கட்சிகளின் கலவையான ஜனதா அரசு, அந்தக் கறுப்புச் சட்டத் திருத்தங்களை மாற்றுவதற்காக 44-வது சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, நெருக்கடி நிலைமையிலும் ஒரு குடிமகன் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறுவதைத் தடுக்க முடியாது என்றும், நெருக்கடி நிலைமையை மத்திய அரசின் ஆலோசனைப்படி குடியரசுத் தலைவர் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது என்றும் சட்டம் திருத்தப்பட்டது.

அதேநேரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பு வரிகளில் புதிதாகச் சேர்க்கப்பட்ட ‘சோசலிசம்’, ‘மதச்சார்பின்மை’ என்ற இரு வார்த்தைகளையும் இன்று வரை எந்த அரசும் நீக்க முன்வரவில்லை. 2015-ம் வருடம் ஒன்றிய அரசு வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் அரசமைப்புச் சட்டத்தின் முதல் பக்கத்தை வெளியிட்டபோது அதில் ‘சோசலிசம்’, ‘மதச்சார்பின்மை’ என்ற இரு வார்த்தைகள் இல்லை. இதை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. விளக்கமளித்த செய்தித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘அந்த வெளியீடு கவனக்குறைவு. அரசுக்கு அவ்விரு வார்த்தைகளை நீக்கும் எண்ணமில்லை’ என்று அறிவித்தார். ஆனால், சிவசேனா கட்சி மட்டும் கவனக்குறைவை நிரந்தரமாக்கும்படி கோரிக்கைவைத்தது.

மதச்சார்பின்மையை ‘நம்பும்’ பா.ஜ.க?!

1991-ம் வருடம் பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக ரத யாத்திரை நடத்திய பா.ஜ.க தலைவர் அத்வானி, நீதிமன்றத்தால் மக்கள் பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்க முடியாது என்றும், அரசமைப்புச் சட்டம் அனைத்து மக்கள் பிரச்னைகளையும் தீர்த்துவிடாது என்றும் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். அச்சமயத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தைத் திருத்திய காங்கிரஸ் அரசு, அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட அங்கீகாரம் பெறுவதற்கு, தங்களது கட்சி அமைப்புச் சட்டத்தில் ‘சோசலிசம்’ மற்றும் ‘மதச்சார்பின்மை’யை கட்சி நம்புவதாகத் திருத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலில் நிற்பதற்குத் தகுதியிழப்பு செய்யப்படும் என்று சட்டம் கொண்டுவந்தது. அதையொட்டி, பா.ஜ.க கட்சிகூட தனது கட்சி அமைப்புச் சட்டத்தில் ‘சோசலிசம்’ மற்றும் ‘மதச்சார்பின்மை’யை நம்புவதாகத் திருத்தியே தேர்தலில் நின்றுவருகின்றனர். ஆக, இந்தியாவில் மதச்சார்பின்மையையும், சோசலிசத்தையும் நம்பாதவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்பதே உண்மை.

கட்சிகளுக்குத்தானே சட்டத் திருத்தம் தேவை. அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கிப்பிடிப்பேன் என்று சொல்லிப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவிகளில் அமர்ந்த நீதிபதிகளுக்கு அது தேவையில்லையே... `இந்தியா ஒரு சோசலிச நாடு அல்ல’ என்றும், `சோசலிசம் என்பதான நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் வேறுபடும்’ என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்புகளில் பதிவிட்டுள்ளனர். அது போதாதென்று அரசுப் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதற்கு பட்டுக் கம்பளம் விரித்துள்ளனர்.

பருவ இதழா இந்திய அரசியல் சட்டம்?

சுப்பிரமணியன் சுவாமி வழக்கு!

சமீபத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவிகூட ‘மதச்சார்பின்மை என்ற சொல் தெளிவற்றது, அதற்குப் போதிய விளக்கத்தை நீதிமன்றங்கள் கொடுக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் 1994-ம் வருடமே எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ‘அரசு, மதங்களுக்கு அப்பாற்பட்டு நிற்பதுடன், எல்லா மதங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்பதே மதச்சார்பின்மையின் உண்மையான அர்த்தமாகும்’ என்று குறிப்பிட்டிருந்ததை ஆளுநர் மறந்துவிட்டது விசித்திரமே.

இது போதாதென்று 2000-ம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஆலோசனை வழங்கும்படி ஓய்வுபெற்ற இந்தியத் தலைமை நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் ஆணையம் ஒன்றை பா.ஜ.க அரசு அமைத்தது. அந்த ஆணையமும் 31.3.2002 அன்று 2,000 பக்கங்கள் அடங்கிய தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அதன் பிறகு வெற்றிபெற்ற காங்கிரஸ் அரசோ அல்லது பதவிக்கு வந்து, தொடர்ந்து ஆட்சிபுரியும் பா.ஜ.க அரசோ அந்த அறிக்கையை ஏறிட்டும் பார்க்கவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்குப் பல தரப்பிலும் குரல்கள் தொடர்ந்து எழுந்துவந்தாலும், சு.சுவாமி போன்ற ‘வண்டு முருகன்கள்’ வழக்கு தொடர்ந்தாலும் இதுவரை அச்சட்டத்தை மாற்றுவதற்கு யாரும் முனையவில்லை. அது முடியாத காரியம் என்று அனைவருக்கும் தெரியும். மேலும் அரசமைப்புச் சட்டத்தில் எழுதியுள்ள வரிகள்தான் இறுதியானவை அல்ல, அதை வியாக்கியானம் செய்யும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளே இறுதியானவை என்று கூறப்படும் சூழ்நிலையில், இன்று அரசமைப்புச் சட்டம் சார்ந்த பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் முன்னால் நிலுவையிலுள்ளன.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு திருத்தச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், நலிந்த பிரிவினர் இட ஒதுக்கீடு சட்டம், உபா சட்டம், சபரிமலையில் பெண்கள் வழிபாடு... இப்படிப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளிக்கப்போகும் தீர்ப்புகள் சரித்திர முக்கியம் வாய்ந்தவை. அவற்றில் சு.சுவாமி தொடுத்துள்ள வழக்கு ஒரு காமெடி பீஸ் மட்டுமே!