Published:Updated:

சட்டசபை: `அது அம்மாவின் வீடு அல்ல’ - கொடநாடு வழக்கில் ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க - தி.மு.க - ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

``'கொடநாடு பங்களா' முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொந்த வீடு அல்ல" - சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி.

Published:Updated:

சட்டசபை: `அது அம்மாவின் வீடு அல்ல’ - கொடநாடு வழக்கில் ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி!

``'கொடநாடு பங்களா' முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொந்த வீடு அல்ல" - சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி.

அ.தி.மு.க - தி.மு.க - ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் உள்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, சட்டம் - ஒழுங்கு பற்றிய கேள்வியை கிளப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது பதியப்பட்ட வழக்குகளின் நிலை என்ன... கொடநாடு வழக்கையும் தி.மு.க அரசுதான் விசாரித்துவருகிறது” என்றார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கொடநாடு வழக்கு குற்றவாளிகளைச் சிறையில் அடைத்தது அ.தி.மு.க அரசு. ஆனால், அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது தி.மு.க அரசு. குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியுடன் தி.மு.க முதலமைச்சர் அருகில் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார். கேரளாவில் உள்ளவருக்கு இங்கு இருக்கும் வழக்கறிஞர் எப்படி ஜாமீன் பெற்றார். தொடர்ந்து கடத்தல், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கொடும்குற்றம் புரிந்தவர்களுக்கு தி,மு,க-வைச் சேர்ந்தவர்கள் எப்படி ஜாமீன்தாரர்களாக இருந்தார்கள். அவர்களுடன் தி.மு.க-வுக்கிருக்கும் தொடர்பு என்ன... அவர் விடுதலை செய்ய வாதாடிய தி.மு.க வழக்கறிஞரை, நீலகிரி சார்பு நீதிபதியாக நியமித்திருக்கின்றனர். இதில் மர்மம் இருக்கிறது. இது பற்றி முழுமையான விசாரணை மேற்கொள்வதற்கு வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர்வோம்” என்றார்.

அ.தி.மு.க - தி.மு.க - ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க - தி.மு.க - ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், ``அந்தச் சம்பவம் நடந்த பிறகு நான்காண்டு காலம் ஆட்சியிலிருந்தது அ.தி.மு.க. அவர்கள் விசாரணையில் மெத்தனப்போக்கைக் காட்டியதால், இப்போது விசாரணையில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு தவறு செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும்” என்றார்.

 இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, அது கொரோனா காலம்.  நீதிமன்றம் விடுமுறையில் இருந்தது. அதனால் சாட்சியங்களை விசாரிக்க முடியவில்லை. அதனால்தான் காலதாமதம் ஏற்பட்டது.  நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஐ.ஜி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தீர்கள். அவர்களும் 700 பக்கம் கொண்ட அறிக்கை தாக்கல் செய்தனர். 90% விசாரணைகள் முடிந்த பிறகு அது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது ஏன்?” என்னும் கேள்வியை முன்வைத்தார்.

கொடநாடு
கொடநாடு

இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ”இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்” என்றார்.

அதன் பிறகு விரிவான விளக்கத்தை முதலமைச்சர் அவையில் பேசினார். “கொடநாடு வழக்கின் குற்றவாளியான சயான், 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விடுதலையானார். அவர் அ.தி.மு.க-வினரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதைச் சிறையிலுள்ள காவலர்களிடம் தெரியப்படுத்தினார். இது குறித்து சில உண்மைத் தகவல்களைக் கூற வேண்டும் என்று அவர் சார்பாக மனு வழங்கப்பட்டது. அது ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் குற்றவாளி சயானை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த மேல்விசாரணைக்கு எதிராக, ’அம்மா பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அனுபம் ரவி  தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைப் புலன் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தனிப்படை, புதிய சாட்சியங்களை விசாரித்து குற்றவாளியைக் காப்பாற்றியதற்காகவும் சாட்சியங்களை மாற்றியதற்காகவும் கனகராஜன், அவரின் சகோதரர் தனபால், ரமேஷ் ஆகியோர் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைதுசெய்யப்பட்டனர். தற்போதுவரை 306 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கொடநாடு பங்களா
கொடநாடு பங்களா

இந்த நிலையில் இந்த வழக்கு குற்றப்புலனாய்வுக்கு (சி.பி.சி.ஐ.டி) மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. சம்பவம் நடந்தபோதே சரியாக விசாரணை மேற்கொண்டு சாட்சியங்களை விசாரித்து தடயங்களைச் சேகரித்திருந்தால், இந்த வழக்கை விரைந்து முடித்திருக்க முடியும். ஆனால், ஆண்டுகள் பல கடந்துவிட்டதால், முழுமையான உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது. ஆனாலும், முன்னாள் முதலமைச்சரின் வீட்டில் நடந்த விவகாரம் என்பதால், இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் மிகுந்த கவனத்துடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உண்மைக் குற்றவாளி கண்டுபிடிக்கப்படுவார்கள்” என்றார்.

இதை மறுத்துப்பேசிய எதிர்க்கட்சித் தலைவர், “முதலமைச்சர் தெரிவித்ததுபோல, ’அது ஜெயலலிதாவின் வீடு அல்ல. அந்த வீடு வேறு ஒருவருடையது. அது அம்மாவின் வீடு அல்ல” என்றார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், ``முன்னாள் முதலமைச்சர் அங்கு இருந்தாரா இல்லையா... அது ஒரு ’கேம்ப் ஆபீஸ்’ போல செயல்பட்டதும் அதிகாரிகள் அங்கு சென்று கையெழுத்து வாங்கிய நிகழ்வும் எல்லோருக்கும் தெரிந்த நிகழ்வுதான்” என்றார்.

மறைந்த ஜெயலலிதா
மறைந்த ஜெயலலிதா

இந்தப் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர், “விசித்திரமான பதிலை முதலமைச்சர் கூறுகிறார். முதலில் அது அவரது (ஜெயலலிதா) வீடு என்றார். தற்போது அவர் வாழ்ந்த வீடு என்கிறார். அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு அது தனியார் வசம் சென்றுவிட்டது. அது அவரின் சொந்த இடம் கிடையாது. நீங்கள்தானே அரசாங்கம், அது யாருடைய வீடு என விசாரித்துக்கொள்ளுங்கள்... முதலமைச்சர் குறிப்பிட்ட நபர்கள்,  வெளிப்படையாகச் செய்தியாளர்களிடமே என்ன நடந்தது என்பதை விளக்கிவிட்டனர். இதில் மறைத்துப் பேச வேண்டிய விஷயம் என எதுவும் இல்லை. இப்படியெல்லாம் கூறி, எங்களை மிரட்டிப் பார்க்க வேண்டும் என எண்ணுகிறார்கள். ஆனால், அது நடக்காது. அ.தி.மு.க அரசைப் பொறுத்தவரையிலும் நேர்மையான வழியில் ஆட்சி நடத்தினோம். ’மடியிலே கனமில்லை வழியிலே பயமில்லை’ என முடித்துக்கொண்டார்

தொடர்ந்து அவைக் கூச்சலுடன் இந்த விவகாரம் நிறைவடைந்தது!