Published:Updated:

“காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க வெற்றி பெறாது!’’

கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
News
கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி வெடித்த பின்னணி என்ன?

‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பை டெல்லி தீர்மானிப்பதில்லை, அறிவாலயம்தான் தீர்மானிக்கிறது. அப்புறம் எப்படிங்க கட்சி உருப்படும்?’’ ஒவ்வொரு முறை காங்கிரஸ் - தி.மு.க உரசல் ஏற்படும்போதெல்லாம், காங்கிரஸ் சீனியர்களிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்து விழும். அறிவாலயத்தின் நலனைத் தாண்டி சத்தியமூர்த்தி பவனில் இருக்கும் தலைவர்கள் பெரிதாகப் பேசுவதுமில்லை. இந்தச் சூழலில்தான், ‘தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல், தி.மு.க-வால் வெற்றிபெற முடியாது' என வெடியைக் கொளுத்திப்போட்டிருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. இது அரசியல் வட்டாரத்தில், பல தலைவர்களின் புருவங்களை உயர்த்தியிருக்கிறது. ஆனால், ‘‘அவரு புரட்சி பண்ணலை. காங்கிரஸ் நலனுக்காகவும் பேசலை. தன் பதவியைவெச்சு அரசியல் பண்றாரு’’ என வெடிக்கிறார்கள் கதர்ச் சட்டைகள்.

“காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க வெற்றி பெறாது!’’

இது குறித்து நம்மிடம் சில காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் விரிவாகப் பேசினர். ‘‘2024 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் கூடுதல் இடங்களை எதிர்பார்க்கிறது காங்கிரஸ். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை வெற்றியால் தேசிய அளவில் கட்சி கவனம் பெற்றதையும், இமாச்சலில் வெற்றிபெற்றிருப்பதையும் காரணமாக முன்னிறுத்துகிறோம். ஆனால், அதை தி.மு.க ஏற்பதாகத் தெரியவில்லை. கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு, கடந்த முறை ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையிலேயே சீட் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஒற்றை இலக்கத்தில், காங்கிரஸ் கட்சியுடனான சீட் பங்கீட்டை முடிக்கப் பார்க்கிறது அறிவாலயம். இது தொடர்பான தகவல்கள் அரசல் புரசலாகத் தெரியவந்ததால், காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்திருக்கிறது.

இந்தச் சூழலில்தான், சமீபத்தில் பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, `கூட்டணியின்றி எந்த கட்சியும் வெல்ல முடியாது. காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க-வால் வெற்றிபெற முடியாது. `காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கொடுத்தால் வெற்றி பெற மாட்டார்கள்’ என்கின்றனர். இதை 2019-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும், 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலிலும் முறியடித்துவிட்டோம். எனவே, 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில், அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம்' என்றிருக்கிறார். இது ஒருபுறம் காங்கிரஸுக்கு நன்மை செய்வதுபோல் இருந்தாலும், மறுபுறம் தனது பதவியைவைத்து அவர் செய்யும் அரசியலும் ஒளித்திருக்கிறது.

சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் டெல்லிக்குச் சென்ற ஒரு குழு, `அழகிரியை மாற்ற வேண்டும்’ எனப் புகார் அளித்திருக்கிறது. பதிலுக்கு அழகிரியும் தனது ஆதரவாளர்களை அனுப்பி, செல்வப்பெருந்தகை தரப்பு மீது புகாரளிக்க வைத்திருக்கிறார். அப்போது, ‘கே.எஸ்.அழகிரி இருந்தால் மட்டுமே, தி.மு.க கூட்டணியில் கூடுதல் இடங்களைப் பெற முடியும். ஒவ்வொரு தொகுதியிலும் 100 கொடிக்கம்பங்களை நடும் நிகழ்வைத் தொடங்கியிருக்கிறார் அழகிரி. கட்சி பலமாகிவருகிறது. அது தி.மு.க-வுக்கும் தெரிகிறது. இந்தச் சூழலில், அழகிரியை மாற்றுவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு நல்லதல்ல' எனப் பேசவைத்திருக்கிறார். ஆனால், டெல்லி தலைமை எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.

“காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க வெற்றி பெறாது!’’

தன்னுடைய பேச்சு தி.மு.க கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது அழகிரிக்கு நன்கு தெரியும். ஒருவேளை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் புதியவர் நியமிக்கப்பட்டால், தி.மு.க-வுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அவர்தான் நடத்தவேண்டியிருக்கும். அப்போது, அழகிரி பேசிய வார்த்தைகளால் பின்னடைவு ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடியவில்லையென்றால், பழி அந்தப் புதிய தலைவர்மீது விழும். ‘அழகிரியே பரவாயில்லை' என்கிற பேச்சு உருவாகும். ஒருவேளை, கே.எஸ்.அழகிரியே தலைவராகத் தொடர்ந்தால், தன்னுடைய பேச்சுக்கு அறிவாலயத் தலைவர்களிடம் நேரடியாகச் சரணாகதி அடைந்துவிடுவார். எப்படியோ, அழகிரி பற்றவைத்திருக்கும் நெருப்பு தி.மு.க - காங்கிரஸ் உறவுக்குள் உரசலை ஆரம்பித்து வைத்திருக்கிறது’’ என்றனர் விரிவாக.

அறிவாலயத்துடன் அரசியல் செய்த கதர் கட்சிக்காரர்கள், இப்போது அறிவாலயத்தை வைத்தே அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். முன்னேற்றம்தான்!