மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்: ஒரு மனிதனின் கடைசி விருப்பம் உயில்!

 ஒரு மனிதனின் கடைசி விருப்பம் உயில்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு மனிதனின் கடைசி விருப்பம் உயில்!

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

செல்வந்தர் தன் அந்திமக்காலத்தில் மூச்சு நிற்கும் முன்பாக வழக்கறிஞரை அழைத்து தனது சொத்துகள் யார் யாருக்குச் சேர வேண்டும் என்பதை உயிலாக எழுதும் காட்சியை நமது கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களில் பார்த்திருப்போம். இங்கே உயிலின் சட்ட நுணுக்கங்கள் பற்றி விரிவாக விளக்கம் அளிக்கிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

வாழும் காலத்திலேயே உயில் அமலுக்கு வருமா?

உயில் பற்றிப் பலரும் பயம் கலந்த மாற்றுக் கருத்துகளைக் கொண்டுள்ளனர். உண்மையில், உயில் மிக எளிமையானது. சொத்துகளின் உரிமையை மற்றவர்கள் பெயரில் மாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் பல்வேறு வழிகளில் உயிலும் ஒன்று. தங்கள் வாரிசுகள் வருங்காலத்தில் சொத்துக்காகச் சண்டையிட்டுக்கொள்ளக் கூடாது என்பதற்காக, பெற்றோர் வாழும் காலத்திலேயே அவர்களுக்குச் சொத்தை பங்கிட்டுக் கொடுத்துவிடுகின்றனர். சொத்து கைக்குக் கிடைத்துவிட்டதும் பெற்றோரின் வயதான காலத்தில் வாரிசுகள் அவர்களைப் பராமரிப்பதில்லை. இந்த நிலை உருவாகாமல் இருக்க, சொத்தை வாரிசுகளுக்கு எழுதி வைக்க, மற்ற ஆவணங்களைவிட சிறந்தது உயில். இது எழுதுபவருக்கும் பாதுகாப்பை அளிக்கிறது.

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டம் ஆகிய சட்டங்களில் உயில், அதன் வரையறை, யாரெல்லாம் எழுதலாம், விதிகள் மற்றும் பயனாளிகளுக்கான கட்டுப்பாடுகள் உட்பட அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளன.

இந்திய இறங்குரிமை (வாரிசுரிமை) சட்டம் 1956 பிரிவு 30

இந்தச் சட்டம், இந்துவாக வாழ்பவர்களைக் கட்டுப்படுத்தும். இந்துவாகப் பிறந்த ஒருவரின் விருப்பத்துக்கேற்ப அவர் எழுதிய உயிலின் மூலம் அவரின் சொத்துகளைப் பங்கிட்டுக் கொள்வது; இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925-ல் தெரிவிக்கும் உயில் பற்றிய கட்டுப் பாடுகள்; இந்துக்களுக்குப் பொருந்தும்வகையில் அமலில் உள்ள மற்ற சட்டங்களின்படி சொத்தின் உரிமை மாற்றத்தை உயிலின் தன்மையைக்கொண்டு எவ்வாறு செய்வது ஆகியவற்றை இதில் தெரிந்துகொள்ளலாம்.

இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925

 • இந்தச் சட்டப் பிரிவு 57 மற்றும் 58 ஆகிய பிரிவுகளில் இந்து ஒருவர் எழுதும் உயில் மற்றும் அதன் தன்மை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

 ஒரு மனிதனின் கடைசி விருப்பம் உயில்!
ஒரு மனிதனின் கடைசி விருப்பம் உயில்!
 • ஆரோக்கியமான மனநிலையில் இருக்கும் எவரும் உயில் எழுதத் தகுதி உடையவரே.

 • திருமணமான பெண் அவர் சம்பாதித்த சொத்தை உரிமை மாற்றம் செய்ய உயில் எழுதிவைக்கலாம்.

 • வாய் பேச முடியாதவர்கள், காது கேளாதவர்கள், பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் உயில் எழுதி வைக்கலாம். உயில் எழுதுவதால் என்ன நிகழப்போகிறது என்பதை அவர்கள் தெரிந்துவைத்திருப்பது அவசியம்.

 • நோயால் பாதிக்கப்பட்டு, தான் என்ன செய்கிறோம் என்பதை உணராதவர் உயில் எழுதி வைக்க முடியாது.

 • ஒருவர் சாதாரண கேள்விகளுக்குப் பதில் சொல்லும் அளவுக்குப் பக்குவப்பட்டிருப்பார். ஆனால், அவரது சொத்துகளைப் பற்றிய விவரங்களை அறியாமலும், அவை யாரைச் சென்றடைய இருக்கின்றன என்பது பற்றித் தெரியாமலும் இருந்தால் அவர் எழுதும் உயில் செல்லாததாகி விடும்.

 • இந்தச் சட்டப் பிரிவு 62-ன்படி உயிலை மாற்றி எழுதவோ, எழுதியதை ரத்து செய்யவோ எழுதியவருக்கு உரிமை உண்டு.

 • ஒருவர் உயிருடன் இருக்கும்போது எழுதிய உயில், எழுதியவரின் உயிர் பிரிந்த பின்பே அமலுக்கு வரும்.

 • 1இறக்கும்முன் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் உயிலை மாற்றி எழுதலாம்.

 • ஒருவர் சுயமாகச் சம்பாதித்த சொத்துகளை உறவினர்களுக்குத்தான் எழுதி வைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அவர் விரும்பும் யாருக்கும் உயில் எழுதி வைக்கலாம்.

 • உயிலில் உள்ள ஷரத்துகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றி எழுதலாம். அதை ரத்தும் செய்யலாம். இறப்பதற்கு முன்பு கடைசியாக அவர் எழுதிய உயில்தான் எடுத்துக்கொள்ளப்படும்.

 • உயிலை எழுதிய பின்னர் அவர் மீண்டும் சொத்து வாங்கியிருந்தால் அல்லது அவர் வசமிருக்கும் சொத்துகளில் வேறு சிலவற்றையும் கொடுக்க விரும்பினால் சொத்தின் விவரத்தை எழுதி, அது யாருக்கு சென்றடைய வேண்டும். என்பதையும் எழுதி, முன்பு எழுதிய உயிலுடன் இணைக்கலாம். இது உயில் இணைப்பு எனப்படுகிறது.

 • ஓர் உயில் எழுதிய பிறகு அதை நீக்கவும், திருத்தம் செய்யவும், புதிதாக இணைக்கவும், ரத்து செய்யவும் என எல்லாவிதமான வசதிகளும் உயில் எழுதுவதில் உண்டு.

 • இப்படியான வடிவத்தில்தான் எழுத வேண்டும் என்கிற வரைமுறை உயில் எழுதுவதில் கிடையாது.

 • உயில் எழுதிய பிறகு இரண்டு சாட்சிகள் கையெழுத்திட வேண்டியது மிகவும் முக்கியம்.

 • உயிலை எழுதியவர் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் உயிலைப் பதிவு செய்யலாம். சட்டப்படி உயிலைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. உயிலை எழுதி, வீட்டில் வைத்திருந்து எழுதியவருக்கு வேண்டாதவர் அதைக் கிழித்து எறிந்துவிட்டால் இறந்தவர் உயில் எழுதிய விவரமே யாருக்கும் தெரியாமல் போய்விடும். அது மட்டுமல்ல... சொத்துகளின் சொந்தக்காரரான அவர் விரும்பாத நபரும் வாரிசுரிமைச் சட்டப்படி சொத்தின் பங்கை அனுபவிக்கும் நிலை உருவாகிவிடும். இது போன்ற அசம்பாவிதங்களைத் தடுக்கவே உயில் எழுதுபவர்கள் அதைப் பதிவு செய்ய விரும்புகின்றனர். உயிலைப் பதிவு செய்தபின் அது முறையான ஆவணமாக மாறுகிறது.

 • உயில் எழுத முத்திரைத்தாள் தேவை இல்லை. சாதாரண தாளில் எழுதி, இரண்டு நபர்கள் சாட்சிக் கையெழுத்துப் போட்டாலே போதுமானது. யாருக்கு சொத்து எழுதி வைக்கிறாரோ அவரே சாட்சிக் கையெழுத்தும் போட்டிருக்கும்பட்சத்தில் அந்த உயில் செல்லாததாகிடும்.

 • உயில் சொத்து சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் அமைந்திருந்தால் உயிலை `புரொபேட்' செய்வது அவசியமாகும்.

உயிலை எழுதியவர் இறந்த பின்னர் அவர் எழுதிய உயிலை நடைமுறைப்படுத்துவதற்கு உயில் புரொபேட் அவசியம். அது பற்றி அடுத்த இதழில் அறிவோம்!