மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்... முதுமைக்கு கரம் கொடுக்கும் சட்டம் - 35

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

வாரிசுகளை வளர்த்து ஆளாக்குவதிலேயே மனிதனின் ஆயுளில் பாதி கரைந்துவிடுகிறது. தனக்காகவும் வாழலாம் என்று யோசிக்கையில் முதுமை அவர்களை ஆட்கொண்டுவிடுகிறது. வளர்த்தவர்கள் யாரும் உதவ மறுக்க, பராமரிக்க யாருமில்லாமல் ஆதரவு தேடும் முதியவர்களுக்குச் சட்டம் எவ்விதம் துணை நிற்கிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

சட்டம் பெண் கையில்... முதுமைக்கு கரம் கொடுக்கும் சட்டம் - 35

இளமைக் காலத்தில் தங்கள் குழந்தை களுக்காக உழைத்த பெற்றோர், முதுமைக் காலத்தில் உழைக்க சக்தி இல்லாமல் வீட்டில் உட்காரும்போது, அவர்கள் பார்த்துப் பார்த்து வளர்த்த குழந்தைகளின் உதவியை நாடுகின்றனர். குழந்தைகளோ வளர்ந்து அவர்களுக்கான வேலை, குடும்பம் என்று இயந்திர வாழ்க்கைக்குள் மூழ்கிவிடுகின்றனர்.

முதுமையில் வருமானம் மற்றும் பொருளாதாரப் பின்புலம் எதுவும் இல்லாமல், அடுத்த வேளை உணவுக்கும் மருத்துவச் செலவுக்கும் தங்கும் இடத்துக்கும் யாரையேனும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலைக்குப் பெற்றோர்களில் பலர் தள்ளப்படுகின்றனர்.

இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் 1956 பிரிவு 20, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 125 (1d), பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம் 2007... இந்தச் சட்டங்களில் மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காகவும் பராமரிப்புச் செலவுக்காகவும் யாரை அணுகுவது, அவர்களைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள் யார் என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

சட்டம் பெண் கையில்... முதுமைக்கு கரம் கொடுக்கும் சட்டம் - 35

தேவையான உணவு அளிக்காமல், மருத்துவச் செலவுக்குப் பணம் கொடுக்காமல் உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், உரிமையுடன் அவர்களைச் சார்ந்தவர்களிடம் இருந்து பொருளாதார உதவியைப் பெற்றுக்கொள்ள இந்தச் சட்டப் பிரிவுகளில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.

இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் 1956 பிரிவு 20 இந்தச் சட்டப் பிரிவு

20-ல் குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர் பராமரிப்பைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது. இந்துவான ஆணோ பெண்ணோ அவர்களுக்குப் பிறந்த குழந்தையை, அது மேஜராகும் வரை பராமரிக்கவேண்டியது கடமை. அதேபோல பெற்றோர்களின் முதுமைக் காலத்தில் அவர்களைப் பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பதையே இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.

வயதான அல்லது நடமாடும் நிலையில் இல்லாத பெற்றோர் அவர்களின் சொத்து மற்றும் அவர்களின் சுய சம்பாத்தியத்தை வைத்து அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள இயலாத நிலையில், அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமையே. பெற்றோர் பட்டியலில் குழந்தை இல்லாத மாற்றாந்தாயும் சேர்க்கப்பட்டுள்ளார்.

சொத்துகள் தங்கள் வசம் வந்ததும் வயதானவர்களைக் கவனிக்காமல் நிராகரிப்போரிடமிருந்து சொத்துகளைத் திரும்பப் பெறுவதற்குத் தீர்ப்பாயம் உதவும்.

இஸ்லாம் வலியுறுத்துவது இதுதான்...

இஸ்லாமிய மதச் சட்டப்படியும் ஏழ்மை நிலையில் உள்ள வயதான பெற்றோரைப் பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என்றே சொல்லப் பட்டுள்ளது. மகன் ஏழ்மை நிலையில் இருந்தாலும் எதுவுமே சம்பாதிக்காத அப்பாவுக்கு அவன் சம்பாத்தியத்திலிருந்து சிறிதளவு கொடுத்து உதவ வேண்டும். வயதான அம்மாவைப் பொறுத்தவரை மகன் கஷ்டத்தில் இருக்கும் போதும் ஏழ்மையான அம்மாவைப் பராமரிக்க வேண்டும். பிள்ளைகள் எந்த நிலையில் இருந்தாலும் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும் என்பதைத்தான் இஸ்லாமிய மதச்சட்டம் வலியுறுத்துகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 125(1d)

இந்தச் சட்டம் அனைத்து மதத்தின ருக்கும் பொதுவானது. கிறிஸ்துவர்களைப் பொறுத்தவரை மூத்த பெற்றோரைப் பராமரிக்க வேண்டும் என்ற தனிப்பட்ட சட்டங்கள் எதுவுமில்லை. கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெற்றோர் இந்தச் சட்டப் பிரிவின் கீழ் நிவாரணம் பெறலாம்.

சட்டம்
சட்டம்

தங்களைப் பராமரித்துக்கொள்ள இயலாத மனைவி, பிள்ளைகள், பெற்றோர் ஆகியோர் ஜீவனாம்சம் அல்லது பராமரிப்புத் தொகையைப் பெறுவது பற்றி இந்தச் சட்டம் விவரிக்கிறது. `ஒதுக்கிவைக்கப்பட்ட அல்லது கவனிப்பாரற்ற பெற்றோர் தங்களை கவனித்துக்கொள்ள தங்கள் செலவுக்குத் தேவையான பணத்தை நீதிமன்றத்தின் மூலம் வழக்கு பதிவு செய்து பெறலாம். மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் என்று அவர்களின் பிள்ளைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிடும். பராமரிப்புத் தொகை கேட்டு விண்ணப்பம் செய்த பிறகோ, வழக்கின் தீர்ப்புக்குப் பின்னரோ ஜீவனாம்சமாக நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை உரியவரிடம் கொடுக்க வேண்டும்.

உரிய காரணமில்லாமல் நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாவிட்டால் நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்ததற்காக அவர்களைக் கைது செய்யும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும். அபராதத்துடன் பராமரிப்புத் தொகையைச் செலுத்தும் காலம் வரையோ, அதிகபட்சமாக ஒருமாத காலமோ சிறையில் இருக்க வேண்டும்.

பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம் 2007

 • 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூத்த குடிமக்களாகக் கருதப்படுவார்கள்.

 • உணவு, உடை, இருப்பிடம், மருத்துவச் செலவு ஆகியவை பராமரிப்பில் அடங்கும்.

 • பெற்றோர் பட்டியலில் தத்துப் பெற்றோரும் அடங்குவர்.

 • தங்களது இளம் பருவத்தில் தங்களின் குழந்தைகளுக்காகவே ஓடிக்களைத்த பெற்றோர் வயதான காலத்தில் வருமானம் இல்லாமல் சொந்தங்களால் கைவிடப்பட்டு அவர்களைக் கவனிக்க ஆதரவின்றி இருக்கும்போது அவர்கள் பெற்ற பிள்ளைகள் அவர்களைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்களாகிறார்கள். அதைச் செய்யாதபோது இந்தச் சட்டப்பிரிவு 5-ன் கீழ் நிவாரணம் பெறலாம்.

 • குழந்தையில்லாத வயதான குடிமக்கள் அவர்களைக் கவனித்துக்கொள்ள இயலாத போது அவர்களின் உறவினர்கள் அவர்களைக் கவனிக்கக் கடமைப்பட்டவர்களாகின்றனர். ஊனும் உயிருமாக வளர்க்கப்பட்ட ரத்த பந்தங்களே கவனிக்கும் கடமையிலிருந்து தவறும் காலத்தில், மற்ற சொந்தங்கள் கவனிக்க வேண்டும் என்று சட்டம் சொல்வது விநோதமாகத் தோன்றலாம் ஆனால், அதற்கும் காரணம் உண்டு.

 • குழந்தையில்லாத வயதானவர்களின் பெயரில் சொத்துகள் இருந்தால்... அவர்களின் சொத்துகளை அனுபவிக்கும் சொந்தங்கள் அல்லது அவர்களின் வாழ்நாளுக்குப் பின்னர் அனுபவிக்கும் உரிமை பெற்றவர்கள், குழந்தையில்லாத வயதான சொந்தங்களின் சொத்தை அனுபோகத்தில் வைத்திருக்கும் அல்லது அவர்களின் காலத்துக்குப் பிறகு யாரெல்லாம் பங்கிட்டு எடுத்துக்கொள்ளப் போகிறார்களோ அதன் தன்மைக்கு ஏற்ப வாரிசு இல்லாத அவர்களின் உறவான மூத்த குடிமக்களைப் பராமரிக்க வேண்டும்.

 • தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் பெற்றோர் அல்லது மூத்த குடிமக்கள் இதற்காக அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் விண்ணப்பம் கொடுக்க வேண்டும்.

 • மூத்த குடிமக்களின் உறவுகள் இந்தத் தீர்ப்பாயத்தின் முன்பு விசாரிக்கப்படுவார்கள். அவர்கள் விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்.

 • பணம் வழங்க வேண்டும் என்ற உத்தரவிட்டிருந்தால் அந்த உத்தரவை மீறும் நபரைக் கைது செய்வதற்கான ஆணையைத் தீர்ப்பாயம் பிறப்பிக்கும். ஆணையம் நிர்ணயித்த தொகையை பாதியாகவோ அல்லது முழுமையாகவோ செலுத்திவிட வேண்டும். தவறும் பட்சத்தில் ஒரு மாதகாலம் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.

 • முதல் வகுப்புக் குற்றவியல் நடுவருக்கு உரிய அனைத்து அதிகாரமும் தீர்ப்பாயத்துக்கு உண்டு. மூத்த குடிமக்கள் வசிக்கும் அல்லது அவர்களின் பிள்ளைகள் அல்லது உறவுகள் வசிக்கும் இருப்பிடத்துக்கு உட்பட்ட தீர்ப்பாயத்தில் பெற்றோர் அல்லது மூத்த குடிமக்கள் மனு அளிக்கலாம்.

 • இந்தச் சட்டப்படி சமாதான அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மனுவை விசாரிப்பதற்கு முன்பாக அந்த அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் கொடுக்கும் அறிக்கையின்படி தீர்ப்பாயம் தீர்ப்பளிக்கவும் வாய்ப்புள்ளது.

 • வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளுக்கு உரிய அதிகாரிகளின் வாயிலாக சம்மன் அனுப்பி வைக்கப்படும்.

 • விண்ணப்பம் பெறுவது, எதிர்த்தரப்பை விசாரணைக்கு அழைப்பது என சிவில் நீதிமன்றத்துக்குரிய அனைத்து அதிகாரத்தையும் இந்தத் தீர்ப்பாயம் பெற்றிருக்கும்.

 • பெற்றோர் அல்லது முதியோர் செலவுக்காகக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிடும் தொகையானது 10,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் (இந்தச் சட்டத்தின் திருத்தச் சட்டம் 2019 டிசம்பர் மாதம் ஒப்புதல் பெற்றுள்ளது. திருத்தச் சட்டத்தின்படி அதிகபட்சத் தொகை 10,000 ரூபாய் என்பது மாற்றப்படும்).

 • தீர்ப்பாயம் உத்தரவிட்ட 30 நாள்களுக்குள் உரிய நபர் பராமரிப்புத் தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்.

 • தீர்ப்பாயத்தில் உரிய நீதி கிடைக்கவில்லை என்று மூத்த குடிமக்கள் கருதினால், இதற்கு அடுத்த நிலையில் இருக்கும் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

 • பராமரிப்பு அலுவலர் ஒருவரும் நியமிக்கப்படுவார்.

 • இந்தச் சட்டப்படி மூத்த குடிமக்களுக்கான மருத்துவ வசதி, முதியோர் இல்லங்கள் ஆகியவற்றுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 • அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசாங்க அங்கீகாரத்துடன் இயங்கும் மருத்துவ மனைகளில் வயதானவர்களுக்கான படுக்கை வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

 • வயதானவர்களுக்கென தனி வரிசை ஒதுக்க வேண்டும்.

 • நாள்பட்ட நோய்களை குணமாக்கும் வசதியை விரிவுபடுத்த வேண்டும்.

மூத்த குடிமக்கள் தொடர்பானதாக...

பிள்ளைகளுக்கோ உறவினர்களுக்கோ அவர்களது சொத்துகளை தானமாகவோ, வேறு மாற்றுவழியிலோ பெற்றோர் உரிமை மாற்றம் செய்துகொடுத்திருக்கும் நிலையில்... சொத்துகள் தங்கள் வசம் வந்ததும் வயதானவர்களைக் கவனிக்காமல் நிராகரிப்போரிடமிருந்து சொத்துகளைத் திரும்பப் பெறுவதற்கு இந்தத் தீர்ப்பாயம் உதவும்.

பாதிக்கப்பட்டவர் எழுதிக்கொடுத்த பத்திரத்தைத் தீர்ப்பாயம் ரத்து செய்யும். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த 2007-ம் ஆண்டுக்குப் பிறகு சொத்துப் பரிவர்த்தனை செய்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

இந்தச் சட்டத்தில் திருத்தச் சட்டம் 2019-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி வயதானவர்களைப் பராமரிக் காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகையைச் செலுத்தும் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். சிறைத்தண்டனை ஆறு மாத காலம் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மூத்த குடிமக்களின் புகார்களை எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க தனி காவல் அதிகாரி நியமனம் போன்ற மாற்றங்களும் திருத்தச் சட்டத்தின் மூலம் அமலுக்கு வர உள்ளது.

மருமகள், மருமகன்களும் வயதான உறவினரைப் பாதுகாக்கும் கடமைப் பட்டவர்களாகின்றனர். மகன், மகள், மருமகன், மருமகள் ஆகிய அனைத்து உறவுகளுக்கும் வயதான பெற்றோரைக் கவனிக்க வேண்டிய கடமையும் சட்டப்படியான பொறுப்பும் உள்ளது.