
வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
இந்து அல்லாத பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் விவாகரத்து செய்யும்போது அவர்களின் குழந்தைகளுக்கான கஸ்டடி உரிமை குறித்து விளக்கம் அளிக்கிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.
இந்திய விவாகரத்துச் சட்டம் 1869 பிரிவு 41 மற்றும் கார்டியன்ஸ் அண்டு வார்ட்ஸ் ஆக்ட் 1890
இந்த இரண்டு சட்டப் பிரிவுகளும் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவை. கிறிஸ்தவ தம்பதியர் விவாகரத்துப் பெறும் அல்லது பிரிந்து வாழும் சூழலில் குழந்தையின் கஸ்டடி உரிமையைப்பெற இந்தச் சட்டங்கள் துணை நிற்கின்றன.
கணவனும் மனைவியும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், மதங்களில் நம்பிக்கையில்லாமல் அவர்களது திருமணத்தைச் சிறப்புத் திருமணச் சட்டப்படி பதிவு செய்திருக்கலாம். இவர்கள் விவாகரத்து செய்யும்போது குழந்தையின் கஸ்டடி உரிமையைப்பெற சிறப்புத் திருமணச் சட்டம் 1954 பிரிவு 38-ல் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றலாம். இஸ்லாமியர் அவர்களது தனிப்பட்ட மதச் சட்டங்களைப் பின்பற்று கின்றனர்.
இந்திய விவாகரத்துச் சட்டம் 1869 பிரிவு 41
கணவன் மனைவி சட்டப்படி பிரிந்து வாழ்வதற்காக அல்லது அவர்களின் திருமண உறவை முறித்துக்கொள்வதற்காக விவாகரத்து வழக்கைப் பதிவுசெய்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை குழந்தையின் கஸ்டடி உரிமைக்காகக் காத்திருக்கத் தேவையில்லை.

குழந்தையின் கஸ்டடி உரிமையைக் கேட்டு இருவரில் ஒருவர் நீதிமன்றத்தில் மனு செய்தால் மைனர் குழந்தை யாரிடம் வளர்வது, பராமரிப்புச் செலவை யார் ஏற்பது, கல்வியை யார் கவனிப்பது... இவற்றுக்கான முடிவுகளை நீதிமன்றம் உடனடியாகப் பரிசீலனை செய்யும். இதுபோன்ற மனுக்களின் மீது எடுக்கும் தீர்மானத்தை எதிர்த்தரப்புக்கு அறிவிப்பு செய்த 60 நாள் களுக்குள் நீதிமன்றம் முடிவுசெய்யும்.
கார்டியன்ஸ் அண்டு வார்ட்ஸ் ஆக்ட் 1890 பிரிவு 25
இந்தச் சட்டம் மைனர் குழந்தைகளின் கார்டியன் மற்றும் கஸ்டடி உரிமை பற்றி விளக்குகிறது. சட்டப் பிரிவு 25-ல் கார்டியனுக்குக் குழந்தையின் மீதுள்ள கஸ்டடி உரிமையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
சிறப்புத் திருமணச் சட்டப்பிரிவு 1954 பிரிவு 38

மைனர் குழந்தையின் கல்வி, பராமரிப்பு, கஸ்டடி என்று வாதிடும்போது மனு செய்தவரின் எதிர்த்தரப்புக்கு அறிவிப்பு அனுப்பிய 60 நாள்களுக்குள் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறது
மேலே கூறப்பட்ட அனைத்துச் சட்டங்களும் மைனர் குழந்தையின் நலன் சார்ந்து அவர்களை வளர்க்கும் முறையை முன்னிறுத்தியே செயல்படும். இவை அனைவருக்கும் பொதுவான சட்டங்களே.
இஸ்லாமியக் குழந்தைகளின் கஸ்டடி உரிமை
இஸ்லாமியர்களின் தனிச்சட்டப்படி குழந்தைகளின் கஸ்டடி உரிமை பற்றிப் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. குழந்தைகளை கஸ்டடியில் வைத்துக்கொள்ளும் உரிமை Hizanat என்று அறியப்படுகிறது.
குழந்தை எந்தப் பாலினமாக இருந்தாலும் குழந்தையின் கஸ்டடி உரிமை என்றால் அதன் முழு உரிமையும் குழந்தையைப் பெற்ற தாய்க்குத் தான் என்கிறது Hizanat. எனினும் இஸ்லாமியப் பிரிவுகளுக்கேற்ப சில கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.

தாய் இல்லாதபட்சத்தில் அம்மாவழிப் பாட்டி, அம்மாவழிக் கொள்ளுப்பாட்டி, அத்தை, சகோதரி என இவர்களிடமும் கஸ்டடி உரிமை ஒப்படைக்கப்படும்.
ஆண் குழந்தைக்கு ஏழு வயதானால் அந்தக் குழந்தையின் கஸ்டடி தந்தையிடம் வந்துவிடும்.
பெண் குழந்தை என்றால் பருவம் அடையும் வரை அல்லது திருமணம் செய்துகொள்ளும் வரை தாயிடம் இருக்கலாம்.
தாயும் தந்தையும் பாதுகாக்கும் பொறுப்பற்ற வர்கள் என்ற நிலையில், குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தாத்தாவிடம் ஒப்படைக்கப்படும்.
என்.ஆர்.ஐ குழந்தைகளின் கஸ்டடி உரிமை
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியத் தம்பதிக்கு மணமுறிவு ஏற்பட்டால் வெளிநாட்டு வாழ் இந்தியர்களான அவர்களை எந்த நாட்டின் சட்டம் கட்டுப்படுத்தும்? வெளிநாட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரித்து இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா? வெளிநாட்டு நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை ஆதரித்து அல்லது அதற்கு எதிர்மறையான முடிவுகளை இந்திய நீதிமன்றங்கள் எடுக்குமா என்பது வழக்குகளைப் பொறுத்தே மாறுபடுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த அர்ச்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) லண்டனில் வாழ்பவரை 2009-ல் திருமணம் செய்து கணவருடன் லண்டனில் குடியேறினார். அர்ச்சனாவுக்கும் அந்த நாட்டின் குடியுரிமை பெறப்பட்டது. கணவர் குடும்ப வன்முறை செய்ததாக அவர்மீது அர்ச்சனா புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் கணவர் கைது செய்யப்பட்டார். 24 மணி நேரக் காவலுக்குப் பின்னர், நான்கு வாரங்கள் வீட்டை விட்டு வெளியே வசிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அர்ச்சனாவின் கணவர் விடுவிக்கப்பட்டார்.
இந்தக் காலகட்டத்தில் அர்ச்சனா தன் இரண்டு மகன் களுடன் இந்தியா வந்துவிட்டார். கணவர், விவாகரத்து மற்றும் குழந்தைகளுக்கான கஸ்டடியையும் கேட்டு வழக்கு தொடர்ந்தார். `இரண்டு குழந்தைகளையும் லண்டனுக்கு அழைத்து வர வேண்டும், குழந்தைகளின் கஸ்டடியைத் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று அர்ச்சனாவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அர்ச்சனா அந்த நாட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்குக் கட்டுப்படவில்லை. அதனால் இந்தியாவுக்குத் திரும்பிவந்த அர்ச்சனாவின் வழக்கு இந்திய நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இரண்டு குழந்தைகளும் லண்டனில் பிறந்து வளர்ந்தவர்கள்; அங்கே படிப்பவர்கள். அவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு அவர்களின் கஸ்டடி உரிமையைக் கணவரிடம் கொடுத்து அவர்களைத் தந்தையிடம் ஒப்படைக்கும்படி மனைவிக்கு ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குழந்தைகளைப் பார்க்க விருப்பப்படும்போது லண்டனுக்குச் சென்று வரலாம் என்று விசிட்டேஷன் உரிமையைத் தாயாருக்குக் கொடுத்தது. இதற்கு வசதியாக ஐந்து லட்சம் ரூபாயை அர்ச்சனாவின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டது.
அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக...
மூன்று மாதம் மற்றும் நான்கு வயதுக் குழந்தைகள் இருவரின் கஸ்டடியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அமெரிக்கத் தாய் இந்திய நீதிமன்றத்தில் போராடினார். கீழமை நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார்.
இரண்டு குழந்தைகளின் கஸ்டடி உரிமையையும் குழந்தைகளின் தந்தையிடம் கொடுக்க வேண்டும் என்று தாய்க்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக அவற்றை நீக்க கோரிக்கை விடுத்து இந்திய குடும்பநல நீதிமன்றத்தில் தாய் வழக்கு தொடர்ந்தார். `தாய் மற்றும் குழந்தைகள் இருவருமே அமெரிக்கக் குடிமக்கள் என்பதால் அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய உத்தரவு விவகாரத்தில் தலையிட முடியாது. இது இந்திய நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வருவதில்லை' என்று குடும்பநல நீதிமன்றம் தாயாரின் வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டது.
இதனால் அந்தத் தாய் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். கொடுமைக்காரக் கணவனிடம் இளம்குழந்தைகளை விட்டு வர அவர் அச்சப்பட்டார்.
2011-ல் உச்ச நீதிமன்றமானது குழந்தையின் கஸ்டடி விவகாரத்தில் ஜூரிஸ்டிக்ஷன் பற்றிய விதிகளைத் தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல, ருச்சி மாஜோ Vs சஞ்சீவ் மாஜோ என்ற வழக்கு விசாரணையில் குழந்தையின் கஸ்டடியைத் தாயிடம் ஒப்படைத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் மேற்கோளிட்டது.
கஸ்டடி உரிமையை அமெரிக்க நீதிமன்றம் கணவருக்குக் கொடுத்திருந்தாலும், அந்தத் தீர்ப்புக்கு எதிராக இரண்டு மைனர் குழந்தை களின் கஸ்டடி உரிமையையும் தாய்க்குக் கொடுத்தது டெல்லி உயர் நீதிமன்றம்.
சொல்வதற்கு இது சுலபமாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் ஒருவர் இதைக் கடந்து வருவதற்கு நேரம், பணம், மனநிம்மதி என ஏராளமாக இழக்கவேண்டியிருக்கும். தன் குழந்தையின் பாதுகாப்புக்காக ஒரு தாய் எந்த எதிரியையும் சமாளிக்கத் தயாராகி விடுகிறாள் என்பதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம்.
பல்வீந்திர குமார் Vs ஆஸ்மான்
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் கார்டியன்ஸ் அண்டு வார்ட்ஸ் ஆக்ட் 1890 பிரிவு 25-ன் கீழ் குழந்தையின் தந்தை வழக்கு தொடர்ந்தார். குழந்தை மனைவியிடம் வளர்வதாகவும், இச்சட்டப் பிரிவின்படி குழந்தைக்கு இயற்கையான கார்டியனான தன்னிடம்தான் குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆனால், குழந்தை அம்மாவின் கஸ்டடியில்தான் வளர வேண்டும் என்ற தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. `குழந்தைக்கு எழு வயதுதான் ஆகிறது. ஆரம்பக் காலத்திலிருந்தே குழந்தை தாயின் பராமரிப்பில்தான் வளர்கிறது. குழந்தை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது. கஸ்டடி உரிமை கேட்கும் தந்தை குடிகாரர். அதனால் குழந்தை தாயிடம் வளர்வதே சிறந்தது. கஸ்டடி உரிமை யாருக்கு என்பது குழந்தையின் நலன்சார்ந்தே முடிவெடுக்கப்படும்' என நீதிமன்றம் அழுத்தமாக அறிவித்தது.