மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்... உயிரோடு இருக்கும்போதே நடைமுறைக்கு வரும் உயில்! -37

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

வாழும் காலத்திலேயே உயில் அமலுக்கு வருமா என்பது பற்றியும், உயிலின் சட்டப்பிரிவுகள் மற்றும் சட்ட நுணுக்கங்கள் பற்றியும் சென்ற இதழில் விளக்கம் அளித்த வழக்கறிஞர் வைதேகி பாலாஜி, இந்த இதழில் மேலும் சில முக்கிய தகவல்களைச் சொல்கிறார்.

சட்டம் பெண் கையில்... உயிரோடு இருக்கும்போதே நடைமுறைக்கு வரும் உயில்! -37

உயில் புரொபேட் (Will Probate)

தான் இறந்தபின் தனக்குச் சொந்தமான சொத்தை யார் அடைய வேண்டும் என்ற விவரத்தைச் சொத்துகளின் முழு விவரத்துடன் எழுதிவைக்கும் நபர் `டெஸ்டேட்டர்' என்றும், யாருக்கு எழுதிவைக்கிறாரோ அவர் `பெனிஃபிஷியர்' என்றும் அறியப்படுகிறார்.

உயிலில் எழுதியபடி யார் யாருக்கு எந்தச் சொத்து சேர வேண்டும் என்பதைப் பிரித்துக்கொடுக்க வேண்டிய சூழலிலோ, உயிலை மூல ஆவணமாகக் காட்டி இறந்தவரின் பெயரில் உள்ள சொத்துகளை உரிமை மாற்றம் செய்ய வேண்டிய சூழலிலோ, `எக்ஸிகியூட்டர்' எனும் உயில் நிறைவேற்றாளர் ஒருவரை நியமிக்க வழி செய்து, அவர் பெயர், விலாசம் உள்ளிட்ட விவரங்களையும் உயிலை எழுதியவர் உயிலிலேயே எழுதலாம்.

சட்டம் பெண் கையில்
சட்டம் பெண் கையில்

உயில் எழுதியவர் இறந்த பின்னர் அவர் எழுதிய உயிலை `புரொபேட்' செய்வது அவசியம். உயில் நிறைவேற்றாளர்தான் டெஸ்டேட்டரின் இறப்புச் சான்றிதழுடன் சொத்தின் மதிப்பைப் பொறுத்து நீதிமன்றத்தில் புரொபேட் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். உயிலைப் பற்றி அதன் விவரங்களுடன் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும். விசாரணை மற்றும் நடைமுறைகளுக்குப் பின்னர் உயிலில் உள்ள சாராம்சங்களை ஆராய்ந்து நீதிமன்றம் ஒப்புதல் வழங்குவதே உயில் புரொபேட் எனப்படுகிறது. உயில் எழுதியவர் உயில் நிறைவேற்றாளராக ஒருவரை நியமித்திருந்தால் மட்டுமே புரொபேட் சாத்தியப்படும். அனைத்துத் தரப்பு உயிலையும் புரொபேட் செய்ய வேண்டியதில்லை.

இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925 பிரிவு 213-ல் உயில் நிறைவேற்றாளரின் உரிமைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

`லிவிங் வில்' (Living Will)

கால மாற்றங்களுக்கேற்ப உயில் எழுத வேண்டிய முறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய சூழலில் எந்த நோய், எந்த வயதில் மனிதரைத் தாக்கும் என்பது அறியப்படாத ஒன்று. இறக்கும்நிலையில் மருத்துவமனையில் சுய நினைவு இல்லாமல் படுத்திருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற நிலையில், அவரின் உறவுகளின் ஒப்புதலின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சட்டம் பெண் கையில்
சட்டம் பெண் கையில்

ஒருவரின் உடல் சார்ந்து எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரின் ரத்தபந்தங்களே முடிவெடுத்திருந்தாலும், அத்தகைய சிகிச்சைகள் தேவையா என்பதை அந்தத் தனிப்பட்ட நபரே முடிவெடுக்க வேண்டும். ஆனால், அவர் ஒப்புதல் அளிக்க இயலாத நிலையில் அவரின் பெற்றோர் அல்லது உறவினர்கள் அந்த முடிவை எடுக்கின்றனர். அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ள இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகவே `லிவிங் வில்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது அவருக்கு சுய நினைவு இல்லாமல் போனால், தனக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை அவர் முன்கூட்டியே உயிலாக எழுதி வைக்கலாம். அதற்கேற்ப அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதையே `லிவிங் வில்' என்கிறோம்.

சட்டப்பிரிவில் இதற்கென தனியான பிரிவுகள் ஏதுமில்லை. தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பாக பிரசாந்த் பூஷண் என்பவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு 2018-ல் வழங்கப்பட்டது இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்டதுதான் `லிவிங் வில்'. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் கீழ் ரைட் டு லிவ் (Right to live) என்பது பற்றிச் சொல்லப்படுகிறது. இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் சுதந்திரமாக வாழ்வது அவர்களின் அடிப்படை உரிமை என்பதையே இந்தப் பிரிவு வலியுறுத்துகிறது.

வாழ்வதற்கு உரிமை உள்ளதைப் போலவே இறப்பதற்கும் உரிமை வேண்டும் என்பதே பிரசாந்த் என்பவரின் கோரிக்கை. அதாவது Right to die with dignity என்பதே அவரது விண்ணப்பம். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் வாயிலாக `மரியாதையோடு இறப்பதற்கும் உரிமை வேண்டும்' என்பது `லிவிங் வில்' மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நமது உடல் நமது உரிமை. தீராத நோயால் பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் செயலிழந்து செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சையில் உள்ள ஒருவருக்கு அந்த வென்டிலேஷன் தேவையா என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். அவரின் குடும்ப உறுப்பினர்களோ, மருத்துவரோ அல்லர். ஆனால், உடலின் உரிமையாளர் சுயநினைவு இல்லாத காரணத்தால், அவர் தன் விருப்பு வெறுப்பைத் தெரிவிக்க இயலாத நிலை; செயற்கை சுவாசத்தின் உதவியோடு தான் வாழ வேண்டாம் என்று அவர் முடிவெடுத்திருந்தாலும் அதை வெளிப்படுத்த இயலாத நிலையே உள்ளது.

தீராத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டால்... `செயற்கை சுவாசத்தைப் பொருத்தி உடலை வருத்திக்கொண்டு மருத்துவமனையில் கிடக்க எனக்கு விருப்பம் இல்லை. செயற்கையாக சுவாசிக்க உதவும் மருத்துவ உபகரணங்களை நீக்குவதற்கு அல்லது சிகிச்சையை தொடராமல் நிறுத்துவதற்குச் சம்மதம்; மருத்துவ உபகரணங்களோடு உடலை வருத்திக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை' என்பதை `லிவிங் வில்' மூலம் எழுதி வைக்கலாம்.

அவ்வாறு எழுதும் `லிவிங் வில்' படிவத்தில் இருவர் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டும். அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் முதல்நிலை மாஜிஸ்திரேட் `லிவிங் வில்'லில் மேலொப்பம் செய்வார். அப்படி அவர் எழுதும் உயிலை யாரும் கட்டாயப்படுத்தி எழுதச் செய்யக் கூடாது.

`லிவிங் வில்'லில் அவரின் விருப்பத்தை நிறைவேற்ற அல்லது மருத்துவரிடம் தெரிவிக்க அவரின் குடும்ப நபர்களில் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும். `லிவிங் வில்' எழுதுவதால் மட்டுமே கருணைக் கொலை செய்துவிட மாட்டார்கள். மருத்துவக் குழுவின் அறிக்கை, நீதிபதியின் இசைவு, மாவட்ட ஆட்சியரின் இசைவு என இதில் பலதரப்பின் சம்பந்தம் உள்ளது. சட்டப்படியாக இத்தனை பேரின் சம்மதத்தைப் பெற்ற பிறகும் மருத்துவமனையின் தரப்பில் இதற்கு இசைவு தெரிவிக்கவில்லை என்றால், `லிவிங் வில்' எழுதியவரின் உறவுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஒருவர் எழுதிய உயில் அவர் உயிரோடு இருக்கும்போதே நடைமுறைக்கு வருவது `லிவிங் வில்'லில் மட்டும்தான்!

உயில் பற்றி மேலும் தகவல்கள் அடுத்த இதழில்...