இன்றுடன் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்து 63 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. 1956 வரை திருவாங்கூா் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகவே இருந்துவந்தது அது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் 1945 முதல் 1956 வரையிலான காலகட்டம் அதன் தற்காலிக வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல போராட்டங்களுக்குப் பின்னரே கன்னியாகுமரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் சேர்ந்தது. இதை நினைவுகூரும் விதமாக குமரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

திருவாங்கூா் மாகாணத்தில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து `ஒருங்கிணைந்த கேரள மாநிலம்' உருவாக்குவதற்காக ஒரு தீா்மானம் திருவாங்கூா் மாநில காங்கிரசால் நிறைவேற்றப்பட்டது. திருவாங்கூா் மாகாணத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்மொழி அதன் அங்கீகாரத்தை இழந்து மலையாளம் மட்டுமே மாநிலத்தின் ஆட்சி மொழியானது. இதை மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருந்த தமிழா்கள் அவமானமாகக் கருதினா். பெண்கள் மார்பு சேலை அணியவும், கோவிலுக்குள் நுழையவும் பலநூறு ஆண்டுகளாய் உரிமை மறுக்கப்பட்டிருந்ததும் தமிழர்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தங்களுக்கான இடத்தை விட்டுக்கொடுக்க அவர்கள் முன்வரவில்லை. தாய்த் தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைக்கப்படுவதற்காக பலகுரல்கள் எழுப்பப்பட்டன. அதனால் அவர்களை நசுக்க திருவாங்கூர் அரசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. போராட்ட வீரர்கள் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார்கள். தீண்டாமை உச்சகட்டமாக தலைவிரித்தாடிய அக்காலத்தில் இதற்காகப் போராடியவர்கள் பலர் கொலைக்களம் அனுப்பப்பட்டனர். சமூகநீதி, பெண்ணுரிமை ஆகியவற்றுக்காகத் தொடங்கிய போராட்டம் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டமாக வலுப்பெற்றது.
இதில் நாராயணகுரு, குமரித் தந்தை மார்ஷல் நேசமணி போன்றோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்களைப் போலவே குமரி மாவட்ட மக்கள் முன்னேற வேண்டுமென்று போராடியவர்கள்தான் குஞ்சன் நாடார், அப்துல் ரசாக், சிதம்பரநாதன் நாடார், எம்.வில்லியம், டி.டி. டேனியல், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், சிதம்பரம் பிள்ளை, சிவதாணு பிள்ளை, ராமசாமி பிள்ளை போன்றோர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
1946 ஜூன் 30-ல், `அனைத்து திருவாங்கூா் தமிழ் காங்கிரஸ்' உருவானது. கன்னியாகுமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான இயக்கத்தை மார்ஷல் நேசமணி வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றார். இதன் வெற்றியாக 1947-ல் திருவாங்கூர், இந்திய யூனியனின் ஒரு பகுதியானது.

1948-ல் திருவாங்கூா் தமிழ்நாடு காங்கிரஸ், குமரி மாவட்டத்தை முந்தைய மெட்ராஸ் மாகாணத்துடன் இணைப்பதற்கான அழுத்தம் கொடுத்ததால் அப்போதைய இந்திய யூனியனின் துணைப்பிரதமரான சா்தார் வல்லபாய் படேல் அக்கோரிக்கையை ஏற்று மொழி அடிப்படையிலான மாநில மறுசீரமைப்பின்போது இதை நடைமுறைப்படுத்துவதாக உறுதி அளித்தார். 1949-ல் கொச்சின் மற்றும் திருவாங்கூா் மாகாணத்தை இணைக்க எடுத்த முயற்சிக்கு எதிராக மிகக் கடுமையான போராட்டங்கள் நடந்த போதிலும் 1949 ஜூன் முதல் நாளன்று இரண்டு மாநிலங்களும் இணைக்கப்பட்டன.
ஆனால், 1952–ல் சட்டசபையில் மாநில காங்கிரஸுக்கு அளித்துவந்த ஆதரவை திருவாங்கூா் தமிழ் காங்கிரஸ் விலக்கிக்கொண்டதால் அமைச்சரவை கவிழ்ந்தது. தமிழ் பேசும் பகுதிகளில் உள்ள 12 தொகுதிகளிலும் திருவாங்கூா் தமிழ் காங்கிரஸ் வெற்றிபெற்று அதன் பலத்தை உயா்த்திக்கொண்டது. அதன்பின், திருவாங்கூா் மாநில காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்து ஏ.நேசமணி தலைமையில் ஒரு பிரிவும் பி. தாணுலிங்க நாடார் தலைமையில் ஒரு பிரிவுமாக செயல்பட்டனா். அதன்பின் நடந்த சூழ்ச்சியால் மீண்டும் அரசு கவிழ்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவாங்கூா், கொச்சின் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1955 முதல் திருவாங்கூா் தமிழ் காங்கிரஸின் தலைவராக ஏ.நேசமணி பொறுப்பேற்றார். பின், 1956-ல் மாநில சீரமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. இது திருவாங்கூா் மாநிலத்தின் தெற்கு தாலுகாக்களான தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை ஆகியவற்றை மெட்ராஸ் மாநிலத்துக்கு மாற்ற இந்தக் குழு முடிவுசெய்தது.
இவ்வாறு, பலபோராட்டங்களுக்குப் பின் 1956-ல் நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு நவம்பா் முதல் நாளன்று தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய நான்கு தாலுகாக்கள் ஒன்றிணைக்கப்பட்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

வடக்கெல்லைப் போராட்டம்
``தாங்கள் தடையை மீறி சிறை புகுவதற்கு முடிவு செய்துவிட்டதாக அறிகிறேன். அது தேவையற்ற முயற்சி. அந்த முயற்சியைக் கைவிட்டு, உடனே சென்னை வந்து என்னைப் பார்க்கக் கோருகிறேன்" இது வடக்கு எல்லைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயத்தில் ம.பொ.சி-க்கு ராஜாஜி எழுதிய கடிதம். ராஜாஜியின் வேண்டுகோளை நிராகரித்த ம.பொ.சி,
' வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம்' என்ற வரிகளை தொல்காப்பியத்தில் இருந்து ஆதாரங்காட்டி இமயம் முதல் குமரி வரை தமிழ் நிலமாக அறிவிக்கக் கோரி போராடினார்.
மொழிவாரியான எல்லை பிரிப்பில் ஏராளமான குளறுபடி இருப்பதைக் காணமுடிகிறது. அவற்றில் ஒன்று பெரும்பான்மை தமிழ்ப்பகுதியாக இருந்த சித்தூரை ஆந்திரத்துடன் இணைத்தது. இதனால் வட பெண்ணாறு, ஆரணியாறு, பொன் வாணியாறு போன்ற நீர்வளங்களை நாம் பறிகொடுக்க வேண்டியதாயிற்று.
தலைநகர் மீட்புப் போராட்டம்
வட எல்லையைப் பொறுத்தவரையில் அது மீட்புப் போராட்டம். ஆனால், தலைநகர் சென்னை என்று வரும்போது அது உரிமைப் போராட்டமாகிறது.
பூவா தலையா போடுவதுபோல தமிழகமும் ஆந்திரமும் சென்னையைத் தலைநகராக்கிக் கொள்வதற்காக தொடர்ந்து போராடின. சென்னையைக் குறித்து ஆராய்வதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி வாஞ்சிக் குழு சென்னையை ஆந்திரத்தின் தற்காலிக தலைநகராக அறிவித்ததும் போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இதற்கு 82 நாள் உண்ணாவிரதமிருந்து சென்னையை ஆந்திரத்தின் தலைநகராக்க வேண்டுமென போராடி உயிரைவிட்ட தெலுங்குதேசத்துக்காரர் பொட்டி ஶ்ரீராமுலுவின் மரணமும் ஒரு காரணம்.

ம.பொ.சி போன்றோரால் `தலையைக் கொடுத்தேனும் தலைநகரை மீட்போம் ' என்ற கோஷத்துடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பெரியார், காமராசர் போன்ற தலைவர்களும் சென்னையை தமிழகத் தலைநகராக்கக் கோரினர். இதற்கிடையில், சென்னையை ஆந்திரத்தின் தலைநகராகவோ தமிழக-ஆந்திர இருமாநிலத் தலைநகராகவோ நேரு அறிவிப்பார் எனில் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதைவிட வேறு வழியில்லை என ராஜாஜி கூறிவிட்டார்.
முடிவாக `ஆந்திரத்தின் தலைநகரானது ஆந்திரத்திற்குள்ளாகவே தேர்வு செய்யப்படும் ' என்று நேரு அறிவித்தபின் போராட்டம் ஓய்ந்தது. இப்படியாக பல சிறைவாழ்வையும் தடியடியையும் கடந்துதான் ஆங்கிலேயர் பிடியிலிருந்த `மதராஸ் ராஜதானி' தமிழ்நாடாகவும் மொழிவாரி மாநிலங்களாகவும் உருப்பெற்றுள்ளது.