`ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மொழி வரிசையில், `ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை நாடு முழுக்க அமல்படுத்துவதில் தீவிரமாகியிருக்கிறது, மத்திய பி.ஜே.பி அரசு. அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்திவரும் தமிழக அரசு, `ஒரே குடும்ப அட்டை' திட்டத்தில் இணையக் கூடாது எனக்கோரி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மாநில உணவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டுள்ளதையடுத்து, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, "பெயரளவுக்குக்கூட இந்தத் திட்டத்தைத் தமிழக அரசு எதிர்க்கவில்லை. இது, வட மாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் வலிந்து குடியேற்றுவதற்குத்தான் உதவும்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு அமைச்சர் காமராஜிடம் பேசினோம்...
"நாங்கள் தெளிவாக இருக்கிறோம்... வைகோதான் குழப்பத்தில் இருக்கிறார். `ஒரே நாடு; ஒரே ரேஷன்' திட்டம் வட இந்தியர்கள் அதிகளவில் இங்கே குடிபெயர்வதற்கு வழிவகுத்துவிடும் என்ற அவர்களது கருத்து ஏற்புடையதல்ல.

ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை, பொது விநியோகத் திட்டம் மற்றும் விலையில்லா அரிசி ஆகியவற்றைச் சிறப்புற வழங்கிவரும் மாநிலமாக இருக்கிறது. இந்தச் சேவைக்கு எந்தப் பங்கமும் ஏற்படாதவாறுதான் தமிழக அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கும்.
கிராமப்புறங்களில் வாழ்ந்துவரும் 75 சதவிகிதத்தினர் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் 50 சதவிகிதத்தினருக்கு மட்டும்தான் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்படி உணவு தானியங்களை வழங்க முடியும். ஆனால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் `அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை' மிகச் சிறப்பாகச் செயல்படுத்திவருகிறோம்.

இதுமட்டுமல்லாமல், சிறப்புப் பொது விநியோகத்தின்கீழ் பருப்பு, பாமாயில் போன்ற உணவுப் பொருள்களையும் மானிய விலையில் அளித்துவருகிறோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், உணவு பாதுகாப்புத் துறையில் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டன. எனவே, ரேஷன் அட்டைதாரர்கள் தமிழ்நாட்டிலுள்ள எந்தவொரு ரேஷன் கடையிலும் பொருள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற விதிமுறை விரைவில் அமல்படுத்தப்படும்.

ஆனால், இந்தியா முழுக்க கணினி மயமாக்கப்பட்ட பிறகே, ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியும்.
மேலும், 'ஒரே நாடு; ஒரே ரேஷன்' திட்டத்தின்படி ஒரு குடும்பத்துக்கு ஓர் அட்டை மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். அந்த ஓர் அட்டையை வைத்திருக்கும் குடும்பம் எந்த மாநிலத்தில் வசித்து வருகிறதோ, அங்கே மட்டும்தான் அதை உபயோகப்படுத்துவார்கள்.

மற்றபடி எந்தவொரு தனி நபரும் அட்டையை உபயோகப்படுத்திவிட முடியாது. எனவே, வேலை செய்வதற்காகத் தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே அட்டை வைத்துக்கொள்ள முடியாது.
இந்நிலையில், வெளி மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்குள் வருகிறவர்கள் தொழிலாளியாக இருந்தாலும் சரி; முதலாளிகளாக இருந்தாலும் சரி... யாராக இருந்தாலும், இங்கே குடும்ப அட்டையைப் பெற வேண்டுமானால், முதலில் அவர்களுடைய சொந்த மாநிலத்தில் அவர்களுடைய குடும்ப அட்டையை சரண்டர் செய்யவேண்டும்.

பின்னர், சரண்டர் செய்யப்பட்டதற்கான சான்றிதழை இங்கே வந்து கொடுக்கவேண்டும். அந்தச் சான்றிதழ் மற்றும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் இருப்பிடம் போன்ற விவரங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்தபின்னரே அவருக்கு குடும்ப அட்டை வழங்கப்படும். இதுதான் தற்போதைய நடைமுறையாக இருக்கிறது'' என்றார் விளக்கமாக.