அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: துரத்தும் வழக்குகள்... தவிக்கும் அமைச்சர்கள்!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

பதவியைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் இந்தப் பதுங்கல். ‘அமைச்சரவை மாற்றம்...’ என்று எப்போது தகவல் கிளம்பினாலும், சில சீனியர் அமைச்சர்கள் கலால்துறையைக் கேட்டு முதல்வரிடம் முட்டி மோதுகிறார்களாம்

“ஒரே வார்த்தையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியைப் பதறி, பம்ம வைத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்” என்றபடி என்ட்ரி கொடுத்த கழுகாருக்கு திருநெல்வேலி அல்வாவும், பூண்டு மிக்ஸரும் கொடுத்தோம். அதை ருசித்த கழுகார்,

“கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வென்றதால், புதுவை தி.மு.க-வினருக்கு காங்கிரஸ் மீதான மரியாதையே போய்விட்டது. கூட்டாக நடத்தும் போராட்டங்களில்கூட காங்கிரஸுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லையாம். அந்தக் கடுப்பில், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ‘மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நடக்கும் போராட்டங்களுக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் நாம் பங்கேற்கவேண்டிய அவசியமில்லை. கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் மட்டும் நாம் இல்லை’ என்று தி.மு.க-வைத் துவைத்து எடுத்திருக்கிறார். திருமணவிழாவுக்காக புதுவைக்கு வந்த மு.க.ஸ்டாலின் அதற்கு பதிலடியாக, ‘தமிழ்நாட்டைப்போல் புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி மலரும்’ என்று பேசியிருக்கிறார். உடனே செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, ‘கட்சியினரை ஊக்கப்படுத்தவே ஸ்டாலின் அப்படிக் கூறியிருப்பார். தமிழகத்தைப்போல இங்கும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தொடரும்’ என்று தடாலடியாகத் தவழ்ந்துவிட்டாராம்.”

“நாராயணசாமியை விடுங்கள். தமிழ்நாட்டில் அமைச்சர்களே தடுமாறிக்கொண்டிருக்கிறார்களே?!”

ஐ.பெரியசாமி - அனிதா ராதாகிருஷ்ணன் - செந்தில் பாலாஜி
ஐ.பெரியசாமி - அனிதா ராதாகிருஷ்ணன் - செந்தில் பாலாஜி

“எல்லாம் வழக்கு படுத்துகிற பாடுதான். கடந்த தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி, அமைச்சர் ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்திருப்பதால், மீண்டும் வழக்கு அபாயத்தில் சிக்கியிருக்கிறார் ஐ.பி. அதேபோல, அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கையும் விரைவில் அமலாக்கத்துறை கையில் எடுக்கும் என்கிறார்கள். அதேநேரத்தில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு கோர்ட் தடை விதிக்க வாய்ப்பிருக்கிறதாம்.”

“சொந்தக் கட்சிக்கு எதிராகப் போராடிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோர்ட் படியேறியதை விட்டுவிட்டீரே?”

கா.ராமச்சந்திரன்
கா.ராமச்சந்திரன்
மிஸ்டர் கழுகு: துரத்தும் வழக்குகள்... தவிக்கும் அமைச்சர்கள்!

“சொல்கிறேன்... 2006-ல் கதர் வாரியத்துறை அமைச்சராகவும், 2011-ல் தி.மு.க எம்.எல்.ஏ-வாகவும் இருந்த கா.ராமச்சந்திரன், 2016-ல் சீட் கிடைக்காத ஆத்திரத்தில் சொந்தக் கட்சிக்கு எதிராகவே போராட்டத்தில் இறங்கினார். சமாதானம்‌ பேசவந்த ஆ.ராசாவை அவமதித்ததோடு, அவர் பங்கேற்க வந்த நிகழ்ச்சியிலேயே கட்சித் தலைமையை எதிர்த்து மனிதச் சங்கிலிப் போராட்டமும் நடத்தியிருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு போட்டிருக்கிறது ஊட்டி கோர்ட். வெளியே தெரியாமல், கோர்ட்டுக்குப் போய்விட்டு வந்துவிடத் திட்டமிட்டிருக்கிறார் அமைச்சர். ஆனால், அவரது உதவியாளர்களோ, ‘அமைச்சரின் பயணத் திட்டம்’ என்று அவர் கோர்ட்டில் ஆஜராவதையும் ஆர்வக்கோளாறில் வெளியிட்டுவிட்டார்கள். ‘அட அப்ரசின்டுகளா..!’ என்று உதவியாளர்களைக் கடிந்துகொண்ட அமைச்சர், கடைசியில் தான் உள்ளே இருப்பதே தெரியாத அளவுக்கு கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டிய காரில் கோர்ட்டுக்குப் போய், வெளியில் தலைகாட்டாமல் காருக்குள் இருந்தபடியே கையெழுத்திட்டுச் சென்றிருக்கிறாராம். அந்த காரும் அவருடையதில்லையாம். ‘தளபதி’யே மறந்த இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பதால், தவிப்பில் இருக்கிறாராம் அமைச்சர்.”

“நல்ல வேடிக்கைதான்... அமைச்சர் செந்தில் பாலாஜியின் சத்தத்தையே காணோமே?”

மிஸ்டர் கழுகு: துரத்தும் வழக்குகள்... தவிக்கும் அமைச்சர்கள்!

“பதவியைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் இந்தப் பதுங்கல். ‘அமைச்சரவை மாற்றம்...’ என்று எப்போது தகவல் கிளம்பினாலும், சில சீனியர் அமைச்சர்கள் கலால்துறையைக் கேட்டு முதல்வரிடம் முட்டி மோதுகிறார்களாம். அப்படித்தான் உதயநிதிக்காக அமைச்சரவை மாற்றம் என்றதும் வழக்கம்போல அவர்கள், கலால்துறையைக் கேட்டு முதல்வரிடம் தலையைச் சொறிய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த விவகாரம் செந்தில் பாலாஜிக்கு எட்டியதால்தான், ‘இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டுப் போயிடணும்டா!’ என்று சைலன்ட் மோடுக்குப் போய்விட்டாராம்.”

“டெல்லிக்கு எடப்பாடி... குஜராத்துக்கு ஓ.பி.எஸ்... பா.ஜ.க-வின் கணக்குதான் என்ன?”

“ஒரு வித்தியாசம் இருக்கிறது. ‘அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளர்’ என்று குறிப்பிட்டு ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டத்துக்கு எடப்பாடியை அழைத்த பா.ஜ.க., குஜராத் பா.ஜ.க முதல்வர் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு ஓ.பி.எஸ்-ஸை அழைத்தபோது வெறுமனே ‘முன்னாள் முதல்வர்’ என்று மட்டுமே விளித்திருக்கிறது. ஆனாலும், ‘எப்படியோ அழைத்தார்களே...’ என்று மகிழ்ச்சியாக குஜராத்துக்குப் போய்விட்டு வந்திருக்கிறார் அவர். இதே விழாவுக்கு எடப்பாடிக்கும் அழைப்பு வந்திருக்கிறது. ஆனால், வாழ்த்துகளை மட்டும் சொல்லிவிட்டு இங்கேயே இருந்துகொண்டார் எடப்பாடி” என்ற கழுகார், டி.வி-யில் ஓடிக்கொண்டிருந்த புரோ கபடியைப் பார்த்தார். சட்டென நினைவு வந்தவராக பா.ஜ.க செய்திக்குத் தாவினார்.

“பா.ஜ.க-வைச் சேர்ந்த மீஞ்சூர் சலீம் என்பவர், கட்சியின் விளையாட்டுப் பிரிவுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டிமீது ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். ‘ `மோடி கபடி லீக்’ போட்டிகள் நடத்துவதற்காக, கட்சியின் ரசீதைப் பயன்படுத்தாமல், சொந்தமாக ரசீது அச்சடித்து கோடிக்கணக்கில் வசூல் செய்துவிட்டார் அமர் பிரசாத். இதில், பெரிய முறைகேடு அரங்கேறியிருக்கிறது. அடித்த கொள்ளை போதாதென, அடுத்ததாக பாரா விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் தயாராகிறார்’ என்பதே அவர் போட்ட குண்டு.”

மிஸ்டர் கழுகு: துரத்தும் வழக்குகள்... தவிக்கும் அமைச்சர்கள்!

“ஓஹோ...”

“இன்னொரு புகாரிலும் சிக்கியிருக்கிறார் அவர். பண மோசடிப் புகாரில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆருத்ரா நிறுவன இயக்குநர்களில் ஒருவரான ஹரீஷுக்கு விளையாட்டுப் பிரிவில் மாநிலப் பொறுப்பை வாங்கிக்கொடுத்திருந்தார் அமர் பிரசாத். ‘மோசடி வழக்கில் சிக்கியவரை பதவி கொடுத்து பாதுகாக்கவேண்டிய அவசியமென்ன... அதுவும் பிரதமர் வருகையின்போது, ஹரீஷை வரவேற்புக் குழுவில் சேர்க்கும் அளவுக்கு முக்கியத்துவம் ஏன் தந்தார்?’ எனப் பல கேள்விகள் இப்போது அவரை நோக்கி வீசப்படுகின்றன. `இவையெல்லாம் அண்ணாமலைக்குத் தெரியாமலா நடந்திருக்கும்?’ எனச் சீறும் சீனியர்கள், இந்த விவகாரங்கள் அனைத்தையும் டெல்லிக்குப் புகாராக அனுப்பிவிட்டார்களாம்” என்ற கழுகார்...

“அரசு கேபிளை கவனித்துவந்த தனியார் நிறுவனத்தை மாற்றிவிட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்த புதிய நிறுவனத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தப் புதிய நிறுவனத்திடம் கேபிள் சேவையை வழங்குவதற்கான சாஃப்ட்வேர் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லையாம். இதனால், ஏற்கெனவே சேவை வழங்கிவந்த நிறுவனத்திடமிருந்து சாஃப்ட்வேரை வாங்க அதன் உரிமையாளரை அணுகியிருக்கிறார் உயரதிகாரி ஒருவர். அதற்கு உரிமையாளர் ஒப்புக்கொள்ளாததால் தற்போது அவரை போலீஸை வைத்து மிரட்டுகிறாராம் அந்த அதிகாரி” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றதை யொட்டி மாநகராட்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை, முதல்வரின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறைக்கு மாற்றும் முடிவில் இருக்கிறதாம் மேலிடம்.

* ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவடையப்போவதால், தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் இருக்கிறது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானவுடன் இந்த மாற்றம் இருக்கும் என்கிறார்கள்.