அரசியல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: திராவிட முன்னேற்ற கம்பெனி

உதயநிதி ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி ஸ்டாலின்

லேசான தூறல் மழையில் நனைந்து வந்திருந்த கழுகாருக்கு இஞ்சி டீ கொடுத்து உபசரித்தோம். உற்சாகமான அவர் செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்...

‘‘சத்தமின்றி முடிந்துவிட்டது, சட்டமன்றக் கூட்டத்தொடர். இப்போது எல்லோர் கவனமும் நாடாளுமன்றம் பக்கம் போய்விட்டது. அங்கே உடன்பிறப்பு உறுப்பினர்களுக்குள் உரசல் ஆரம்பமாகிவிட்டது.’’

‘‘விவரமாகச் சொல்லும்?’’

‘‘தி.மு.க சின்னத்தில் வென்றவர்கள் 22 பேர். இதில் பலர் சீனியர்கள். இவர்களில் சீனியர் மோஸ்ட் என்கிற முறையில் டி.ஆர்.பாலுவுக்கு தி.மு.க நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. அப்போதே கனிமொழி தரப்பில் முணுமுணுப்பு கிளம்பியதாம். தலைமை அதைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிட்டதாம். அந்த முணுமுணுப்பு, இப்போது புகைச்சலாக நிலைகொண்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் அங்கம் வகிப்பது யார் என்பதிலும் தி.மு.க உறுப்பினர்களிடையே யுத்தம் துவங்கிவிட்டது.’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம். நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் பதவி என்பது மத்திய இணைஅமைச்சர் அந்தஸ்துக்கு இணையான பவர்ஃபுல் பதவி. வீடு, வாகனம், பணியாட்கள் என சகலவசதிகளும் உண்டு. இந்தப் பதவியைக் கைப்பற்ற தி.மு.க-வின் ஐவர் படை தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது. ‘மூத்த உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராக இருந்தவர் என்கிற முறையில் தனக்கு வேண்டும்’ என்று டி.ஆர்.பாலு காய் நகர்த்துகிறாராம். அவருக்கு ஏற்கெனவே நாடாளுமன்றக் கட்சியின் குழுத்தலைவர் பதவி தரப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, தனக்குத்தான் அந்தப் பதவி வேண்டுமென்று கனிமொழி கேட்கிறாராம். ஆ.ராசா, தயாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஆகியோரும் அதற்குக் குறி வைத்திருக்கிறார்களாம்.’’

‘‘யாருக்குக் கிடைக்கும்?’’

‘‘கனிமொழிக்குக் கிடைக்க வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். இதைத் தவிர மேலும் சில பவர்ஃபுல் குழுக்களில் தி.மு.க உறுப்பினர்கள் இடம்பெற இருக்கிறார்கள். இதில் எல்லாம் மூத்த உறுப்பினரான ஜெகத்ரட்சகனை கட்சித் தலைமை கண்டுகொள்ளவே இல்லையாம். ‘கட்சிக்கு நிதி வேண்டும் என்றால் என்னிடம் வருகிறார்கள். பொறுப்பு என்றால் உதறி விடுகிறார்கள். டம்மி குழுவுக்கு என் பெயரைப் பரிந்துரை செய்கிறார்கள். கட்சியில் சீனியர் களுக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. இளவட்டங்கள் ஆடும் ஆட்டத்துக்கு நாங்கள் எல்லாம் பலிகடாக்களா’ என்று அவர் புலம்பிக் கொண்டிருப்பதாகக் கேள்வி. மூத்த உறுப்பினர்களுக்குள் இந்தப் புகைச்சல் என்றால், புதிய உறுப்பினர்கள் வேறு காரணத்துக்காகப் புலம்புகிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: திராவிட முன்னேற்ற கம்பெனி

‘‘அது எதற்காம்?’’

‘‘முன்பெல்லாம் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் பணியை முரசொலி மாறன் செய்துவந்தார். நீண்ட காலத்துக்குப் பிறகு அதிக அளவிலான தி.மு.க உறுப்பினர்கள் இப்போது நாடாளுமன்றத்துக்குள் சென்றிருக்கிறார்கள். அவர்களை யார் கட்டுப்படுத்துவது என்பதில் போட்டி ஆரம்பித் திருக்கிறது. ‘நாடாளுமன்றக் குழுத்தலைவர் நான்தான். என் கட்டுப்பாட்டில்தான் நீங்கள் செயல்பட வேண்டும்’ என்கிறாராம் டி.ஆர்.பாலு. கனிமொழியோ, ‘தலைவரின் மகளான எனக்கு மரியாதையில்லையா?’ என்கிறாராம். ‘நான்தான் அதிக ஆண்டுகள் அமைச்சராக இருந்திருக்கி றேன். என்னிடம் ஆலோசனை கேளுங்கள்’ என்று தனியாக ரூட் போடுகிறாராம் ஆ.ராசா. இதனால், புதிய உறுப்பினர்கள் குழம்பிக் கிடக்கிறார்கள்.’’

‘‘அய்யோ... பாவம்!’’

‘‘தேர்தலுக்காகப் பெரிய அளவில் செலவு செய்துள்ள சில புதிய உறுப்பினர்கள், கரைத்த காசை மீட்டெடுக்க பி.ஜே.பி-யுடன் இணக்கமாகப் போய்விடலாமா என்று தனியாக மீட்டிங் போட்டுப் பேசினார்களாம். இந்த விவகாரம் தெரிந்து தி.மு.க தலைமை அவர்களை எச்சரித்திருப்பதாகத் தகவல்!’’

‘‘தி.மு.க தலைமை ‘வீக்’காகிக் கொண்டிருக் கிறதோ?’’

‘‘காரணம் இருக்கிறது. கட்சியின் தலைவராக ஸ்டாலின் ஆன பிறகு, தனி நபராக இல்லாமல் ஒரு கமிட்டிதான் தலைமையைப்போல செயல் படுகிறது என்று குமுறுகிறார்கள், தி.மு.க-வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள். சமீபகாலமாக தி.மு.க தலைமையின் முடிவுகள் என்று வெளி வருபவை, கட்சித் தலைவரான ஸ்டாலினிடம்கூட ஆலோசனை செய்யாமல் எடுக்கப்படுகிறதாம். எங்கேயோ எடுக்கப்பட்ட முடிவை, கட்சி முடிவு என்று நிர்வாகிகளிடம் அறிவிக்கும் வேலையை மட்டுமே செய்கிறாராம் ஸ்டாலின்.’’

‘‘அதென்ன எங்கேயோ எடுத்த முடிவு என்று ‘க்’ வைக்கிறீர்?’’

‘‘ஆமாம்... பல முக்கிய முடிவுகளை அவர் சுயமாக எடுப்பதில்லையாம். சொல்லப்போனால் எடுக்க முடிவதில்லை என்கிறார்கள். அவரின் குடும்ப உறுப்பினர்கள் மூவர்தான் அவரையே இயக்குகிறார்களாம். கருணாநிதி தலைவராக இருந்தபோது, கட்சி குறித்து எந்த முடிவாக இருந்தாலும் அதை முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தே எடுப்பார். அவர் விரும்பும் ஒரு விஷயத்தைக்கூட ஆற்காடு வீராசாமி போன்ற யாரையாவது ஒருவரைச் செயற்குழுவில் பேசவைத்து அதை நிறைவேற்றுவார். ஆனால், ஸ்டாலினிடம் இப்போது யாருமே எந்தக் கருத்தை யும் ஓப்பனாகச் சொல்ல முடிய வில்லையாம்.’’

மிஸ்டர் கழுகு: திராவிட முன்னேற்ற கம்பெனி

‘‘என்ன காரணமாம்?’’

‘‘அவரிடம் முக்கிய விஷயம் பேசவேண்டும் என்று முக்கிய நிர்வாகிகள் தலைமைக் கழகத்தில் உள்ள தலைவர் அறையின் முன்பாகக் காத்திருக்கிறார்கள். ஆனால், ஸ்டாலின் வந்தவுடன் யாரையும் ஏறிட்டுக்கூட பார்க்காமல் அறைக்குள் சென்றுவிடுகிறார். அங்கு தனக்கு வேண்டியவர்களை மட்டும் அழைத்துப் பேசுகிறார். தப்பித்தவறி யாராவது சந்தித்துப் பேசினாலும் ஏதாவது புகார் கொடுத்தாலும், அந்தத் தகவல் அடுத்த சில மணித்துளிகளில் ஆழ்வார்பேட்டை வீட்டுக்குச் சென்றுவிடுகிறதாம்.’’

‘‘நிஜமாகவா?’’

‘‘இளைஞரணிச் செயலாளராக உதயநிதி வந்த பிறகு, சென்னையில் இளைஞரணி நிர்வாகிகள் மாற்றம் நடந்தது. ‘மாவட்டச் செயலாளரான எனக்கே தெரியாமல் மாற்றம் நடந்துள்ளது’ என சென்னையைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் ஒருவர் ஸ்டாலினிடம் புகார் கூறியிருக்கிறார். அதற்கு ஸ்டாலின், எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் காரில் ஏறிப்போய் விட்டாராம். அடுத்த சில நிமிடங்களில் ஸ்டாலினின் மனச்சாட்சியான ஒரு நபர், அந்த மாவட்டச் செயலாளரைக் கூப்பிட்டு, ‘தம்பி மீது எதற்காகப் புகார் சொல்கிறீர்கள்?’ என்று கேட்க, ஆடிப்போய் விட்டாராம் அந்த மாவட்டம்.’’

‘‘அடேங்கப்பா!’’

‘‘தலைவரின் அறிக்கை முன்பெல்லாம் அறிவாலயத்திலிருந்தே வெளிவரும். இப்போது ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்தே வெளியாகிறது. குறிப்பாக, மறைமுகமாக தி.மு.க-வை இயக்கும் நபராக துர்கா ஸ்டாலின் மாறிவருகிறார் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. உதயநிதிக்கு செப்டம்பர் மாதத்துக்கு மேல் பொறுப்பு வழங்கலாம் என்று ஸ்டாலின் சொன்ன ஆலோசனையை ஏற்க மறுத்து, ‘நல்லநேரம் இப்போதுதான். அறிவிப்பு செய்துவிடுங்கள்’ என்று அழுத்தம் கொடுத்ததே கிச்சன் கேபினட்தானாம். உதயநிதியின் தினசரி அரசியல் நிகழ்வுகள் குறித்து, அன்பில் மகேஷ் உள்ளிட்டோருக்கு உத்தரவு தருவதே துர்காதான் என்கின்றனர். மருமகன் சபரீசன், கட்சியின் அனைத்து மட்டங்களையும் கண்காணிக்கும் வேலையைச் செய்துவருகிறாராம். ஆக துர்கா ஸ்டாலின், சபரீசன், உதயநிதி மூவர் எடுக்கும் முடிவுகள்தான் இப்போது கட்சி எடுக்கும் முடிவு என்பதைப்போல மாறியிருக்கிறது என்று கட்சியினர் பலரும் புலம்புகிறார்கள்.’’

‘‘கழகமே ஒரு குடும்பம் என்பார்கள். இதுதானா, அது?’’

‘‘தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவரின் புலம்பல்தான் தற்போது அறிவாலயம் எங்கும் எதிரொலிக்கிறது. சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்த கையோடு முன்னாள் அமைச்சரான அந்தப் பெரியவர், தன் மாவட்டத் துக்குப் போய்ச் சேர்ந்தார். வரவேற்க வந்த மூத்த கட்சிக்காரர்களிடம் மனம்வருந்தி புலம்பினாராம். ‘கழகம் என்பது கிட்டத்தட்ட கம்பெனியாகவே மாற்றப்பட்டுவிட்டது. துர்கா ஸ்டாலின்-கம்பெனி டைரக்டர், சபரீசன் - கம்பெனி சி.இ.ஓ (சீஃப் எக்ஸிக்யூட்டிவ் ஆபீஸர்) உதயநிதி - கம்பெனியின் எம்.டி (மேனேஜிங் டைரக்டர்) என்றே செயல்படுகிறார்கள். பாவம், ஸ்டாலின்... கம்பெனியின் சேர்மன் போல், மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வேடிக்கை மட்டும் பார்க்கிறார். இப்படியே போனால், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் குதிரைக் கொம்புதான்’ என்று சொல்லியிருக்கிறார் அந்தப் பெரியவர்.’’

‘`அதுதான் நாடாளுமன்றத் தேர்தலில் அசத்தலாக வெற்றிபெற்றுள்ளனரே?’’

‘‘இதையேதான், பெரியவரிடம் மூத்த கட்சிக்காரர்கள் கேட்டுள்ளனர். ‘அதற்குப் பிறகுதான், கிட்டத்தட்ட கம்பெனியாகவே கழகம் மாறிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் குடும்ப உறுப்பினர்களில் ஒரு சிலர்தான் தலையிட்டனர். இப்போது ஒட்டுமொத்த குடும்பமும் தலையிடுகிறது. ஒரு பேச்சுக்குக்கூட யாரும் கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. போயஸ் தோட்டத்தில் சசிகலா வைத்ததுதான் சட்டம் என்றிருந்ததுபோல, இன்றைக்கு துர்கா, உதயநிதி மற்றும் சபரீசன் வைத்ததுதான் சட்டமாகவே இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றி, இவர்களுக்காகக் கிடைத்த வெற்றி என்று நினைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள். அது மோடிக்கு எதிரான அலையில் கிடைத்த வெற்றி என்பதை உணரவில்லை. காலம்தான் அதை இவர்களுக்கு உணர்த்தும்’ என்றும் நொந்துபோய் சொன்னாராம் அந்தப் பெரியவர்.’’

‘‘ஸ்டாலின் அணுகுமுறையிலும் நிறையவே மாற்றம் தெரிகிறது என்கிறார்களே?’’

‘‘அதுவும் உண்மைதான்... முன்பெல்லாம் எல்லோரையும் அழைத்துப் பேசுவார், கலந்தாலோசிப்பார். இப்போது யாரையுமே கண்டுகொள்வதில்லையாம். தலைமைக் கழகத்திலும் சரி, கோட்டையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையிலும் சரி, அவரைப் பார்த்து வணங்கவும் பேசவும் காத்திருந்தாலும் ஒரு மரியாதைக்கு வணக்கம்கூட வைக்காமல் கடந்துபோகிறாராம்.’’

‘‘இதில் வேலூர் தேர்தலுக்குப் பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் போகப்போகிறாராமே ஸ்டாலின்?’’

‘‘அது பழைய செய்தி. அதேபோல, உதயநிதியும் மாநிலச் சுற்றுப்பயணம் கிளம்புகிறாராம். அவருக்கும் ஸ்டாலினுக்குத் தருவதைப்போலவே வரவேற்பு தரவேண்டும் என்று உத்தரவு போயிருக்கிறதாம். எட்டு வருடங்களாக வருமானமே இல்லாமல் இருக்கும் நாங்கள், எத்தனை முறைதான் செலவு செய்வது என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.’’

‘‘யாரும் இதையெல்லாம் எதிர்க்கவில்லையா?’’

‘‘நடக்கிற காரியமாகப் பேசும். அதுதான் ஸ்டாலின் குடும்பத்தின் பலமே. மூத்த நிர்வாகிகள் பலரும் தங்கள் வாரிசுகளைக் களத்தில் இறக்க வேண்டும் என்பதற்காக, இதை வேடிக்கை பார்க்கிறார்கள். ஸ்டாலின் குடும்பத்தினர் ஆதிக்கம் ஒருபுறமிருக்க, அவரின் கூடவே இருப்பவர்களுக்கும் தி.மு.க-வின் பாரம்பரியம் என்ன, யார் யார் முக்கியமானவர்கள் என்பதெல்லாம் தெரியவில்லை.’’

‘‘ஏன் அப்படிச் சொல்கிறீர்?’’

‘‘முன்னாள் மத்திய அமைச்சரான ‘காரோட்டி’ கண்ணப்பனைப் பற்றி புத்தகம் எழுதியுள்ள தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், பேராசிரியர் அன்பழகனிடம் அவர் ஓரளவுக்கு நன்றாக இருந்தபோதே அணிந்துரை வாங்கிவிட்டாராம். கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலினிடம் வாழ்த்துரை வாங்க, ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறாராம். ஸ்டாலினிடம் கேட்டு வாங்கித்தர வேண்டிய பொறுப்பில் இருப்பவர், ‘கண்ணப்பன்தான் தனியாகக் கட்சி நடத்துகிறாரே... அவரைப் பற்றி தலைவரிடம் ஏன் வாழ்த்து கேட்கிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். ‘காரோட்டி’ கண்ணப்பனுக்கும் ராஜகண்ணப்பனுக்குமான வித்தியாசம்கூட தெரியாதவராக இருப்பவரைத்தான் தன் அருகில் வைத்துள்ளார் ஸ்டாலின். ஒரு காலத்தில் தி.மு.க ஒரே குடும்பம் போலிருந்தது. இப்போது ஒரே குடும்பத்தின் கையில் தி.மு.க போய்விட்டது என்று சொந்தக் கட்சியினரே நொந்துகொள் கிறார்களாம்!’’

‘‘கருணாநிதியை நினைத்துப் பார்ப்பார்களே?’’

‘‘ஆமாம். ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் வருகிறது. அன்று முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழா நடக்கவிருக்கிறது. மம்தா பானர்ஜிதான் சிலையைத் திறந்துவைக்கிறார். பின்பு, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்போகிறார்கள். காஷ்மீரில் இருந்து ஃபரூக் அப்துல்லா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி என முக்கியமான பலரும் பேசவிருக்கிறார்கள். அதில் அழைப்பிதழில் பெயர் அச்சிடாமலே உதயநிதியைப் பேசவைக்கவும் திட்டம் இருக்கிறதாம். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திருவாரூர் அல்லது ஆயிரம் விளக்குத் தொகுதியில் உதயநிதியை நிறுத்தவேண்டும் என்று கிச்சன் கேபினட்டில் முடிவாகி இருக்கிறதாம்.’’

‘‘ஓ.பி.எஸ்-ஸின் டெல்லி பயண ரகசியம்?’’

‘‘அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மகனின் மத்திய அமைச்சர் கனவு, கட்சிக்குள் தனக்கிருக்கும் சிக்கல்கள் குறித்து மனம்விட்டுப் பேசினாராம். அநேகமாக மூன்று அமைச்சர்களுக்கு விரைவில் சிக்கல்கள் தொடங்கும் என்கிறது டெல்லி வட்டாரம்’’ என்ற கழுகார் சட்டென்று சிறகு விரித்தார்.

துரைமுருகனா, கொக்கா?

மானியக் கோரிக்கை விவாதத்துக்காகக் கூட்டப்பட்ட பேரவைக் கூட்டம் ஜூலை 30-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், வேலூர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அவசரமாக அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி, ஜூலை 20-ம் தேதியுடன் கூட்டத்தொடரை முடித்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க பொருளாளர் துரைமுருகனுக்கு ஏகத்துக்கும் சலாம் வைத்த அமைச்சர்கள் சிலர், ‘‘உங்களுக்காக என்னவெல்லாம் செய்யறோம் பாருங்க’’ என்று கண்சிமிட்டியிருக்கிறார்கள். வழக்கமான சிரிப்பை உதிர்த்த துரைமுருகன், ‘‘அப்படியே என் மகனையும் ஜெயிக்க வைச்சு தந்தீங்கன்னா புண்ணியமாப்போகும்’’ என்று கிண்டாலாகச் சொல்வதுபோல் வேண்டுகோள் வைத்தாராம்.

நாடாளுமன்றத்தில் கால் பதித்த வைகோ!

23 வருடங்களுக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினராக ஆகியிருக்கும் வைகோ, ஜூலை 25-ம் தேதி பதவியேற்கிறார். முன்னதாக நாடாளுமன்றத்தைச் சுற்றிப்பார்க்க ஜூலை 22-ம் தேதி டெல்லி சென்ற வைகோ, வளாகத்தில் இருக்கும் அண்ணாவின் உருவச்சிலையைத் தொட்டு வணங்கினார்.

மிஸ்டர் கழுகு: திராவிட முன்னேற்ற கம்பெனி

அப்போது வைகோ எம்.பி-யாவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி எம்.பி அந்த வழியே வர, இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். இருவரும் கரம் பற்றி போஸ் கொடுத்த போட்டோதான் அன்றைய தினம் வைரல்!

கவுன்சிலிங் கலெக்‌ஷன் ஜோரு!

மிழக சுகாதாரத் துறை செவிலியர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் அவருக்குத் துணையாக நால்வரும் இருக்கிறார்கள். இந்த ஐவர் படையின் தயவின்றி எந்தச் செவிலியரும் பணி இடமாறுதல் பெற முடியாதாம். விரைவில் 300 இடங்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறுகிறது. ‘மொத்த இடங்களுக்கும் இடமாறுதலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என கோட்டைப் பிரமுகரிடம் பேரம் பேசி முடித்துவிட்டார்களாம்.

இதேபோல பதிவுத் துறையிலும் சார்பதிவாளர்கள் பணியிடங்களுக்கு பெரிய அளவில் பேரங்கள் நடக்கின்றன. அமைச்சரைவிட இந்த விஷயங்களை ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவர்தான் முடிவுசெய்கிறாராம். இதற்காகவே அண்ணா நகரில் ஒரு ஆபீஸ் போட்டிருக்கிறாராம். வருவாய் அதிகமுள்ள சார்பதிவாளர் பணியிடத்துக்கு, ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசுகிறாராம்.