தமிழகம் மற்றும் கர்நாடக இடையே நதிநீர் பிரச்னை காலம்காலமாக நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக காவிரி பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று இறுதியாக காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இரு மாநிலங்களுக்கு இடையேயான காவிரி பிரச்னை ஓரளவுக்கு தீர்த்து வைக்கப்பட்டது. இதையடுத்து தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே யர்கோல் என்னும் இடத்தில் அணை கட்டும் பணியைத் தொடங்கியது கர்நாடக அரசு.

இந்த வழக்கில் முதலில் மத்திய அரசை அணுக வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனால் மத்திய அரசிடம் சென்ற தமிழக அரசுக்கு முறையான எந்தப் பதிலும் கிடைக்காததால் மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்கே சென்றது தமிழக அரசு. இதையடுத்து 2 வருட நீண்ட விசாரணைக்குப் பிறகு, நடுவர் தீர்ப்பாயம் குறித்து முடிவெடுக்க உள்ளதாக மத்திய நதிநீர் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த விசாரணையில் இதற்கு மத்திய அரசு கால அவகாசம் கோரியிருந்தது.
இந்த வழக்கில் புதிய திருப்பமாகத் தற்போது நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக ஆறு மாதங்கள் கால அவகாசம் தேவை எனவும், மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசுக்கு கால அவகாசம் தரக்கூடாது எனத் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இறுதியில் இந்த விவகாரத்தில் நான்கு வாரங்களில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.