தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் `ஜல்லிக்கட்டு மாநிலத்தின் கலாசாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி எனத் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசு இது கலாசாரம் என்று சட்டம் இயற்றியுள்ளது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். அதை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. தொன்மையான கலாசார ரீதியிலான விஷயங்களில் நாங்கள் தலையிட முடியாது' எனக் கூறி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுத்துள்ளது உச்ச நீதிமன்றம். கர்நாடகாவில் எருமைகளைக் கொண்டு நடைபெறும் கம்பளா போட்டிக்கும் தடை விதிக்க மறுத்துவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பீட்டா இந்தியா அமைப்பு தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பீட்டா இந்தியாவின் மூத்த சட்ட ஆலோசகர் அனுஷா மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஜல்லிக்கட்டு போட்டியால் தொடர்ந்து விலங்குகள், மனிதர்கள் மற்றும் குழந்தைகள் துன்பத்தையும் மரணத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நிகழ்வு உலக நாடுகளின் மத்தியில் நமது நாட்டை பின்னோக்கி பார்க்க வைக்கிறது. 2017-ம் ஆண்டு மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்த பிறகு இதுவரை 104 ஆண்கள் மற்றும் குழந்தைகள், 33 காளைகள் மற்றும் ஒரு பசு இறப்பு நிகழ்ந்துள்ளன. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பிற பகுதிகளில் இதே போன்று விலங்குகளை துன்புறுத்துவது, அவற்றை சர்க்கஸுக்காகப் பயன்படுத்துவது போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காளைகள் மற்றும் எருதுகளை துன்புறுத்தும் இது போன்ற நிகழ்சிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.