Published:Updated:

திருந்தாத பொன்முடி, திசைதிருப்பும் பிரேமலதா; இதுதானா திராவிட சுயமரியாதை? #VoiceOfAval

பொன்முடி, ஸ்டாலின்

அவர்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்தை அளிக்கும் அரசின் சேவையை சந்தர்ப்ப அரசியலாக்கி, `இலவசம் வேண்டாம் என்று சொல்லுங்கள், புறக்கணியுங்கள்’ என்று பெண்களைத் தூண்டுவதும், அவர்களைக் குழப்புவதும் உண்மையில் பெண் முன்னேற்றத்துக்கு எதிரான செயல்களாகவே அமையும்.

Published:Updated:

திருந்தாத பொன்முடி, திசைதிருப்பும் பிரேமலதா; இதுதானா திராவிட சுயமரியாதை? #VoiceOfAval

அவர்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்தை அளிக்கும் அரசின் சேவையை சந்தர்ப்ப அரசியலாக்கி, `இலவசம் வேண்டாம் என்று சொல்லுங்கள், புறக்கணியுங்கள்’ என்று பெண்களைத் தூண்டுவதும், அவர்களைக் குழப்புவதும் உண்மையில் பெண் முன்னேற்றத்துக்கு எதிரான செயல்களாகவே அமையும்.

பொன்முடி, ஸ்டாலின்

ஏற்கெனவே, பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துத் திட்டத்தை 'ஓசி' என்று கொச்சைப்படுத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், கேள்வி கேட்ட ஒன்றிய பெண் கவுன்சிலரை கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல், `ஏய்... உட்காரு’ என்று ஒருமையில் பேசி, மிரட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பொன்முடி, தொடர்ச்சியாக இதுபோல பேசிவருவது, `இதுதான் திராவிட மடல் தி.மு.க கற்பிக்கும் சுயமரியாதையா?' என்கிற கேள்வியை இயல்பாகவே எழ வைக்கிறது.

இதற்கு நடுவே, `இலவச பேருந்து பயணத்தையே பெண்கள் புறக்கணிக்க வேண்டும்' என்று பிரச்னையையே வேறுபக்கம் திருப்பப் பார்த்திருக்கிறார் தே.மு.தி.க கட்சியின் பொருளாளரான பிரமேலதா விஜயகாந்த்! இது, அதிர்ச்சியைக் கூடுதலாக்குகிறது. 

பிரேமலதா
பிரேமலதா

பெண்களுக்கான கட்டணமில்லாத பேருந்துத் திட்டத்தை, `ஓசி’ என்று குறிப்பிட்டு மேடையில் நக்கலும் எகத்தாளமுமாக பொன்முடி பேசிய வீடியோ பதிவு வெளியாகி, தமிழகம் கடந்தும் எதிர்ப்புகளைக் கிளப்ப, பல்வேறு கட்சியினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதைப்பற்றி சற்றும் அலட்டிக்கொள்ளாத பொன்முடி, `அது விளையாட்டா பேசினது. அதை ஏன் பெரிசு படுத்தறாங்க' என்று எளிதில் கடந்து கொண்டிருக்கிறார். செய்தியாளர்கள் இதைப்பற்றிக் கேட்டால், `அது முடிஞ்சுபோன கதை' என்று சொல்லி, மடை மாற்றுகிறார்.

உண்மையில் பார்த்தால், இதற்காக பொன்முடி மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். அவருக்கு `உயர் கல்வித்துறை' எனும் உயரிய பொறுப்பைக் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பொன்முடி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், `அது விளையாட்டா சொன்னது' என்று கிராமத்து மிட்டாமிராசு போல கடைவாயால் சிரிக்கிறார் பொன்முடி. பதவிப் பிரமாணம், ரகசியக்காப்புப் பிரமாணமெல்லாம் எடுத்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பையும் வகிக்கும் இவர் போன்றவர்களே இப்படி `விளையாட்டாக'ப் பேசினால், இந்தத் திட்டத்தை ஆரம்பகாலம் தொட்டே கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கும் ஆணாதிக்கவாதிகளும், எதற்காக இந்தத் திட்டம் என்று புரியாமல் `கோஷ்டிகானம் பாடும்' ஆண் பிள்ளைகளும் பேசுவதில் தவறும் இல்லை என்றுதானே தோன்றும்?

கட்டணமில்லா பயணம்
கட்டணமில்லா பயணம்
மாதிரிப்படம்

சரி ஒரு தடவை விளையாட்டாகப் பேசினார் என்றே வைத்துக் கொள்வோம். இதோ, காந்தி ஜெயந்தி நாளிலும் ஒரு பெண் கவுன்சிலரை, கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் ஒருமையில் விளித்திருக்கிறார். இது விளையாட்டா... அல்லது வினையா? `மாண்புமிகு அமைச்சர்' என்று உச்சபட்ச மரியாதையுடன் அழைக்கப்படும் மக்கள் பிரதிநிதியான பொன்முடி, சக மக்கள் பிரதிநிதியான ஒன்றிய கவுன்சிலருக்கும் உரிய மரியாதை கொடுத்திருக்க வேண்டும்தானே! ஆனால், அதற்கு தான் லாயக்கே இல்லை என்பதுபோலத்தான் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறார். இதைப்பற்றி கடைசியில் பார்ப்போம்.

இதற்கு நடுவே இந்த விஷயத்தை வைத்து, பிரச்னையை திசை திருப்பும் வகையில் பேசியிருக்கும் பிரேமலதா பற்றி கொஞ்சம் பேசிவிடுவோம்.``இலவசப் பேருந்துப் பயணத்தை ஓசி என்று கொச்சைப்படுத்துவதால், அதைப் பெண்கள் புறக்கணிக்க வேண்டும்“ என்று கூறியிருக்கிறார் அவர். இது அடிப்படையான அரசியல் தெளிவற்ற கருத்து.   

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து என்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திட்டம். கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் தொடங்கி, சொற்ப சம்பளத்துக்காக அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் மற்றும் அனைத்துப் பெண்களுக்கும் மிகவும் பயனுள்ள திட்டமாகவே தற்போது இது நீடித்து வருகிறது. இப்படியான சூழலில், எகத்தாளமாக பொன்முடி பேசிவிட்டாரே என்று ஒட்டுமொத்தமாகத் திட்டத்தையே புறக்கணிக்க வேண்டும் என்று பிரேமலதா கூறுவது, மிகமிகத் தவறான வழிநடத்தல்!

சாமானியர்கள் உணர்ச்சிவயப்படலாம். ஆனால், ஒரு கட்சியின் பொருளாளராக இருப்பவர், அதிலும் பெண்ணாக இருப்பவர், பெண்கள் பிரச்னையில் இப்படி பேசலாமா?

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி
தே.சிலம்பரசன்

இது ஜனநாயக நாடு. அந்த முறைப்படி தேர்வு செய்யப்பட்டு ஆட்சிக்கு வருகிறவர்கள், மக்கள் நலன் சார்ந்து கொண்டு வரும் திட்டங்கள் ஒன்றும் பெருமை அல்ல, அது அவர்கள் செய்யவேண்டிய கடமை. அதைத் தவறாமல் பெறுவது மக்களின் உரிமை. மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதிலும் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து என்பது பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு வரப்பிரசாதமான ஒன்று. அப்படிப்பட்ட திட்டத்தைக் கொச்சைப்படுத்திய பொன்முடிக்கு எதிராக, தமிழகம் முழுக்க உள்ள பெண்களைத் திரட்டி கடுமையாக போராடும் அறிவிப்பைத்தான் பிரேமலதா வெளியிட்டிருக்க வேண்டும். இதுபோல யார் கொச்சைப்படுத்தினாலும் அவர்களுக்கு எதிராக கொந்தளிப்போம் என்று அறைகூவல் விடுத்திருக்கவேண்டும். ஆனால், `புறக்கணிப்போம்' என்று பேசலாமா?

நியாய விலைக்கடைகளில் அரசாங்கம் தரும் சலுகை விலைப் பொருள்களை வாங்குவதற்கு, நம் மக்கள் படும்பாடு தெரியுமா? அங்கே பணியாளர்களாக இருப்பவர்கள், தாங்கள் சொத்திலிருந்து இலவசமாகக் கொடுப்பதுபோலத்தான் பார்க்கிறார்கள், பேசுகிறார்கள். அப்படி என்றால், ரேஷன் பொருள்களை வாங்காதீர்கள் என்று புறக்கணிக்கச் சொல்ல முடியுமா?

சாதியப் படிநிலையில் பின்னுக்குத் தள்ளப்பட்டு கல்வியறிவு பெறாத சமூகத்தை, சமநிலைக்குக் கொண்டு வருவதற்காகச் செயல்படுத்தப்பட்ட இடஒதுக்கீடு, பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றிக்கூட இந்த சமுதாயத்தில் கேலி, கிண்டலாகத்தான் பலரும் பேசுகிறார்கள். அதற்காக இடஒதுக்கீட்டை புறக்கணியுங்கள் என்று சொல்ல முடியுமா?

பாலின சமத்துவம்
பாலின சமத்துவம்

காலம் காலமாக ஆணாதிக்கத்தில் இருக்கும் பெண்கள், உண்மையில் தங்களின் தேவை என்ன, உரிமை என்ன என்பதையே அறியாத அறியாமையில் வைக்கப்பட்டிருந்தார்கள். பல புரட்சியாளர்கள் முதல், செயற்பாட்டாளர்கள் வரை தங்களது இடையறாத போராட்டங்களால், கள நடவடிக்கைகளால், விழிப்புணர்வால், `இது அடிமைத்தனம், இதுதான் சுயமரியாதை’, ‘இது சலுகை அல்ல, உங்களின் உரிமை’ என்பதையெல்லாம் பெண்களுக்கு எடுத்துச் சொல்லி புரியவைத்து, அவர்களின் தேவைகளை, உரிமைகளை அவர்களைக் கேட்கவைத்து, பெற்றுக் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், அவர்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்தை அளிக்கும் அரசின் சேவையை சந்தர்ப்ப அரசியலாக்கி, `இலவசம் வேண்டாம் என்று சொல்லுங்கள், புறக்கணியுங்கள்’ என்று பெண்களைத் தூண்டுவதும், அவர்களைக் குழப்புவதும் உண்மையில் பெண் முன்னேற்றத்துக்கு எதிரான செயல்களாகவே அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

பெண்களின் நகர்வு சுருக்கப்பட்ட சமுதாயம் இது. காரணம், பொதுவாகவே அவர்களின் எல்லா கட்டணப் பங்கேற்புகளும் சுருக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், பெண்களுக்கு மாதம் தோராயமாக 1,000 ரூபாய் சேமித்துக் கொடுக்கும் இந்தத் திட்டம், அவர்களின் சமூக - பொருளாதார நகர்வுக்கான மிக முக்கியமான முன்னெடுப்பு. அப்படி ஒரு திட்டத்தை பற்றி, `இதை ஓசி என்று சொல்லது குற்றம், இது அரசின் கடமை, பயன்படுத்தி முன்னேறுவோம்’ என்று பெண்களுக்கு நேர்மறை நம்பிக்கை அளிக்காமல்,  மாறாக பெண்களிடம் எதிர்மறையான கருத்துகளை உருவாக்குவதும், அந்தப் பெண்களையே, `எங்களுக்கு இலவசம் வேணாம்’ என்று சொல்ல வைக்க முயல்வதும் அரசியல் அல்ல; அரசியல் குற்றம்.

கட்டணமில்லா பேருந்து என்பது அரசின் திட்டமே தவிர, எந்தத் தனிப்பட்ட நபரின், கட்சியின் சாதனையல்ல. ஆனால், இதெல்லாம் பெண்களுக்கு தாங்கள் போடும் பிச்சை என்பதுபோல பேசி, பெண்களைக் கொச்சைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, தான் சார்ந்த தி.மு.க-வையும், ஏழை எளியவர்களுக்காக எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்த மறைந்த முதல்வர் கருணாநிதியையும், பெண்களுக்காக பாடுபட்ட பெரியாரையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார் பொன்முடி.

`ஊனமுற்றோர்' என்கிற சொல்லுக்கு மாற்றாக 'மாற்றுத்திறனாளிகள்' என்கிற சொல்லை புழக்கத்துக்குக் கொண்டு வந்தவர் கருணாநிதி. `விதவை' என்கிற சொல்லுக்கு மாற்றாக, கைம்பெண் என்று அழைக்க வேண்டும் எனக் கூறியவர் கருணாநிதி. சமூகத்தில் நிலவிய தரமற்றச் சொற்களுக்கு மாற்றான சொற்களை புழக்கத்துக்குக் கொண்டு வந்ததில் தி.மு.க-வுக்கு நிறையவே பங்கு இருக்கிறது. நிவாரணத்தொகை என்கிற சொல்கூட தவறு, அது அவர்களுக்கான ‘உரிமைத்தொகை’ என்று மாற்றிய கட்சி தி.மு.க. அப்படிப்பட்ட கட்சியைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் வாயிலிருந்து காந்தி ஜெயந்தி நாளிலும் `திமிர்' வெளிப்பட்டிருக்கிறது.
சுயமரியாதை, சமூகநீதி ஆகியவையே திராவிடக் கட்சியான தங்களின் ஆதாரக்கொள்கை என்கிறது தி.மு.க. அனைவரும் சமம் என்கிற சமத்துவ சிந்தனையோடு யாரையும் மரியாதைக் குறைவாக நடத்தக் கூடாது, தனது மரியாதையையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதே சுயமரியாதைச் சிந்தனை.

பொன்முடி
பொன்முடி

அப்படியிருக்கையில், `ஓசி' இவர் சொல்லியிருப்பது கட்டணமில்லாமல் பயணிக்கும் அத்தனை பெண்களின் சுயமரியாதைக்கும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. புண்பட்ட பெண்கள், ‘இலவசமாகப் பயணிக்க விரும்பவில்லை. பணம் வாங்கிக்கொள்ளுங்கள்’ என நடத்துனரிடம் முறையிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகின்றன. இவ்வளவு நடந்தும் மன்னிப்புக் கோராத பொன்முடி, மீண்டும் திமிர் வார்த்தைகளை வீசியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க-வைச் சேர்ந்த ரேவதி, 'ஒன்றிய கவுன்சிலரான தன்னை மதிக்கவில்லை' என்று முறையிடுகிறார்.

``நீ... ஒன்றிய கவுன்சிலரா... நீ? உட்கார். நீ போய் பி.டி.ஓ-கிட்ட கேளு... உட்கார்'' என்கிறார் அமைச்சர்.

``அங்க என்ன சொல்றாங்க. 'நீ ஏடிஎம்கே... உனக்கு நிதி எதுவும் கிடையாது'னு சொல்றாங்க'' என்கிறார் ரேவதி.

``ஒ.. அப்படியா நீ. அதனாலதான் இப்படி பேசுறபோல. உட்கார்'' என்று வார்த்தைக்கு வார்த்தை ஒருமையைத் தவிர, உயர்கல்வித்துறை அமைச்சர் வாயிலிருந்து உயரிய வார்த்தைகள் எதுவும் வரவே இல்லை.

ரேவதி, தன்னுடைய புகாரைச் சொல்வதற்கான மேடை இது இல்லை என்றுகூட வைத்துக் கொள்வோம். அதை, மாண்புமிகு அமைச்சர் இப்படித்தான் தெளிவுபடுத்துவதா?
இதுதான் தி.மு.க கற்பிக்கும் சுயமரியாதையா?

- அவள்

#VoiceOfAval: இது பெண்களின் வாதத்தை பொதுச் சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்து வைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!