அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

அடாவடி வசூல் அள்ளிக்குவிக்கும் கரூர் கம்பெனி!

செந்தில் பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
செந்தில் பாலாஜி

கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா எதிரே இருக்கும் டாஸ்மாக் கடைதான், கரூர்வாசிகளின் ‘தாகம்’ தீர்க்கும் தடாகமாக மாறியிருக்கிறது

சமீபத்தில், நமது அலுவலகத்துக்குத் திருப்பூரிலிருந்து பெண்மணி ஒருவர் கடிதம் அனுப்பியிருந்தார். அதில், “இங்கே 24 மணி நேரமும் மதுபானம் விற்கிறது. நூறு, இருநூறு சம்பாதிக்கும் கூலித் தொழிலாளர்கள் பலரும் குடித்துக் குடித்து மனநோயாளியாகிவிட்டார்கள். பெண்கள் நிம்மதியாக வேலைக்குச் சென்று வீடு திரும்ப முடியவில்லை. ராத்திரி, பகல் என எல்லா நேரங்களிலும் மதுபானம் கிடைப்பதால், காலையிலும் நள்ளிரவிலும்கூட பலர் குடித்துவிட்டு சாலைகளில் ரகளையில் ஈடுபடுகிறார்கள். பல குடும்பங்கள் இதனால் நாசமாகின்றன. கொஞ்சம் விசாரித்து நடவடிக்கை எடுக்க உதவுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான விசாரணையில் இறங்கினோம். நள்ளிரவிலும் அதிகாலையிலும் சரக்குகள் கனஜோராக விற்கப்படுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

தமிழகம் முழுக்க சட்டவிரோத மது விற்பனைகள் குறித்து நாம் விசாரித்த வேளையில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, ‘கரூர் கம்பெனி’ என்ற நிறுவனம் பற்றிய தகவல்களையும் கொட்டினார்கள் டாஸ்மாக் ஊழியர்கள். தமிழ்நாடு முழுக்க இந்த ‘கரூர் கம்பெனி’தான் சட்டவிரோத மது விற்பனையைப் பல்வேறு இடங்களில் ‘அதிகாரபூர்வமாக’ நடத்துவதாகவும், டாஸ்மாக் மது விற்பனையில் தலையிட்டு அடாவடி கமிஷன் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் நமக்குக் கிடைத்த ஆதாரங்களும் ‘பகீர்’ ரகம்!

அசோக்குடன் அமைச்சர் செந்தில் பாலாஜி
அசோக்குடன் அமைச்சர் செந்தில் பாலாஜி

கோட் வேர்டு ‘பிளாக் டீ’ சூடான இட்லி... மீன் குழம்பு... வியாபாரத்துக்கு ஆஃபர்!

ராமநாதபுரம் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே, 6927, 6865 ஆகிய எண் கொண்ட இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இங்கே இரவு 10 மணிக்குப் பிறகு, ஓவர் டைம் மது விற்பனை சூடுபறக்கிறது. விசாரணைக்காக நாம் அங்கே சென்றபோது, பூட்டிய டாஸ்மாக் கடையின் வாசலில் நின்றிருந்த நபர் ஒருவர், ஒரு மதுபான பிராண்ட் பெயரைச் சொல்லி, “120 ரூபாய் சரக்குதான் இருக்கு. ஆனா 150 ரூபாய் ஆகும்... தரவா?” என்றார் நம்மிடம். வேண்டாம் என்று மறுத்துவிட்டு நாம் சற்று நகர்ந்ததும், அந்த நபரை ஏராளமான மதுப்பிரியர்கள் அந்த நள்ளிரவிலும் மொய்க்கத் தொடங்கிவிட்டனர். நேரம் செல்லச் செல்ல ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மது பாட்டிலின் விலையை 20 ரூபாய் வீதம் கூட்டிக்கொண்டே போனார் அந்த நபர். ஆனாலும், விற்பனை தங்குதடையில்லாமல் பரபரப்பாக நடந்தது.

தூத்துக்குடியில், கள்ளச்சந்தை மது விற்பனையின் கேந்திரமாக மாறியிருக்கிறது தாளமுத்துநகர். கடற்கரையோரமுள்ள டீக்கடைகளிலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. ‘ஸ்பெஷல் பிளாக் டீ’ என்பதுதான் இவர்களின் கோட் வேர்டு. ரூபாய் 130 மதிப்புள்ள ஒரு குவாட்டர் பாட்டிலை, 200 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். சரக்குகளின் ரகத்தைப் பொறுத்து பாட்டிலுக்கு 120 ரூபாய் வரை கூடுதல் விலையில் விற்பனை நடக்கிறது. மீன்பிடித் துறைமுகத்தில், இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மீன்கள் ஏலம் நடக்கும். அந்த நேரத்தில், மீன் வியாபாரிகளைப்போலக் கூடையில்வைத்துச் சரக்கு விற்பனையும் ஜரூராக நடக்கிறது. சிதம்பரநகர் மயானத்தில், நள்ளிரவு நேரத்திலும்கூட குறிப்பிட்ட சில கல்லறைகளின் அருகிலேயே ‘நீராட்டு’ காட்டுகிறார்கள் இந்தச் சரக்கு பாட்டில் வியாபாரிகள்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தை ஒட்டியிருக்கிறது 10241 எண் டாஸ்மாக் கடை. அதிகாலையில், பூட்டப்பட்ட கடை வாசலில் சாதாரணமாக நின்றுகொண்டிருந்தாலே போதும். கடைக்கு எதிரே இருக்கும் ஏஜென்ட்டுகள் சிக்னல் கொடுத்து நம்மை அழைக்கிறார்கள். ‘இன்னென்ன சரக்குகள் இருக்கின்றன. எது வேண்டும்’ என்று கடகடவென ஒரு லிஸ்ட்டை ஒப்பித்து, காசை வாங்கிக்கொண்டு சரக்கு பாட்டிலைக் கையில் கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். பிராண்டைப் பொறுத்து ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூபாய் 50 முதல் 100 ரூபாய் கூடுதல் விலைவைத்து மதுபானம் விற்கப்படுகிறது.

கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா எதிரே இருக்கும் டாஸ்மாக் கடைதான், கரூர்வாசிகளின் ‘தாகம்’ தீர்க்கும் தடாகமாக மாறியிருக்கிறது. அந்த டாஸ்மாக்கை ஒட்டியிருக்கும் பாரில், இரவு 11 மணியைக் கடந்தும் சரக்கு விற்பனை சக்கைபோடு போடுகிறது. நேரில் நாம் சென்று, ‘குவார்ட்டர் வேண்டும்’ என்றோம். ‘220 ரூபாய்’ என்றார் இளைஞர் ஒருவர். ‘விலை உயர்ந்த மது’ என நினைத்து வாங்கிப் பார்த்த நமக்கு, தலை கிறுகிறுத்தது. எம்.ஆர்.பி விலை 130 ரூபாய் என்றிருந்தது. 90 ரூபாய் வரை விலையைக் கூடுதலாக வைத்து விற்பனை செய்கிறார்கள். கரூர் மாநகரத்தின் இதயமான பகுதியிலேயே நள்ளிரவில் வெளிப்படையாக, சட்டவிரோத மது விற்பனை நடக்கிறது.

திருப்பூர் நொச்சிபாளையம் பிரிவிலுள்ள கடை எண் 1947, தென்னம்பாளையம் காய்கறிச் சந்தை அருகேயுள்ள கடை எண் 1945, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகேயிருக்கும் கடை எண் 1990 ஆகிய டாஸ்மாக் கடைகளின் பார்களில், இரவு 10 மணிக்கு மேல் நள்ளிரவு 12 மணி வரை விறுவிறுக்கிறது சட்டவிரோத மது விற்பனை. இவர்களின் ‘ஓவர் டைம்’ வியாபாரத்தில் 80 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்கப்படும், குவாட்டர் பாட்டிலுக்கு கிளாஸும் வாட்டர் பாக்கெட்டும் இலவசம் என்கிறார்கள். 12 மணிக்கு ஓர் இடைவேளைவிட்டு, அதிகாலை 4 மணிக்கெல்லாம் மீண்டும் ‘பார்’ ஓப்பனாகிவிடுகிறது. அந்த நேரத்தில் வரும் குடிமகன்களைக் கவர இட்லி, மீன் குழம்பு, பணியாரம், தக்காளி சாதம் என்று சுடச்சுட உணவுப் பதார்த்தங்களும் உண்டு. கூடுதலாக, முந்தைய நாளில் மீதமான இறைச்சி தொடங்கி, மாங்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய் என்று சுகாதாரமற்ற விதவிதமான சைட் டிஷ்களும் பரிமாறப்படுகின்றன.

அடாவடி வசூல் அள்ளிக்குவிக்கும் கரூர் கம்பெனி!

“நாங்க கரூர் கம்பெனி சார்... தெரிஞ்சுமா வர்றீங்க?”

தமிழ்நாடு முழுக்க மொத்தம் 5,387 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. அவற்றில் 3,220 கடைகளுக்கு மட்டும் பார் வசதி இருக்கிறது. இவை தவிர கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகரங்களில் அரசு அனுமதியின்றி சட்டவிரோத பார்களும் இயங்குகின்றன. நாம் விசாரித்த வரையில், இந்த பார்கள் மூலமாகவே பெருமளவு சட்டவிரோத மது விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. தமிழகத்திலுள்ள பெரும்பாலான பார்களை நடத்துவது, அனுமதிக்கப்பட்ட நேரங்களைத் தாண்டி கள்ள வியாபாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால், பிரமாண்டமாக ஒலிக்கும் பெயர் ‘கரூர் கம்பெனி.’ இந்த நிறுவனம் கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த சிலரால் நடத்தப்பட்டுவருவதும் நம் விசாரணையில் தெரியவந்தது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருக்கும் ஏழு டாஸ்மாக் கடைகளில் பார் வசதி இருக்கிறது. இவற்றில், ஐந்து பார்கள் ‘கரூர் கம்பெனி’யைச் சேர்ந்த கரூர் ரமேஷ் என்பவரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இந்த பார்களிலெல்லாம், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி மதுபான விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. கலால்துறை மற்றும் லோக்கல் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரைக் கையில் போட்டுக்கொண்டு, புதுச்சேரியிலிருந்து 50 ரூபாய் மதிப்புடைய மது பாட்டில்களைக் கொண்டுவருகிறார்கள். அவற்றை இரவு 10 மணிக்கு மேல் 200 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்து, கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். நேர்மையான கலால்துறை அதிகாரிகள் யாராவது சந்தேகப் பார்வையுடன் பார்களை வலம்வந்தால், “சார், நாங்க கரூர் கம்பெனி சார். தெரிஞ்சுமா வர்றீங்க?” என்று ஏளனமாகப் பேசி, அவர்களைத் திருப்பி அனுப்புவதும் நடக்கிறது.

கோவை மாவட்டத்தில் இயங்கும் 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்களில், 150 பார்களுக்குத்தான் உரிமம் இருக்கிறது. இங்கேயும் சட்டவிரோத மது விற்பனை அனல் பறக்கிறது. நம்மிடம் பேசிய டாஸ்மாக் ஊழியர்கள் சிலர், “சராசரியாக, டாஸ்மாக் மூலம் அரசுக்கு நாளொன்றுக்கு 120 கோடி ரூபாய் வசூலாகிறது. இது அல்லாமல், நாளொன்றுக்கு 18 கோடி ரூபாய் அளவுக்குச் சட்டவிரோத மது விற்பனை நடக்கிறது. பார்களைக் கட்டுப்படுத்தும் ‘கரூர் கம்பெனி’ ஆட்கள்தான், இந்தச் சட்டவிரோத மது விற்பனையில் பெருமளவில் ஈடுபடுகிறார்கள். ஒருசில டாஸ்மாக் கடை ஊழியர்கள், இவர்களின் சட்டவிரோதச் செயல்களுக்கு ஒத்துழைக்காதபோது, அவர்களை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய உத்தரவு பறக்கிறது. கோவை சின்னியம்பாளையத்திலுள்ள கடை எண் 1840-ஐ போய்ப் பாருங்கள். விடிய விடிய அங்கே சரக்கு ஓட்டிக்கொண்டிருக் கிறார்கள்” என்று ஷாக் கொடுத்தனர்.

அடாவடி வசூல் அள்ளிக்குவிக்கும் கரூர் கம்பெனி!

யார் இந்த கரூர் கம்பெனி?

டாஸ்மாக் வட்டாரங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ‘கரூர் கம்பெனி’யின் பெயரே ஒலிக்கும் நிலையில், ‘கரூர் கம்பெனி’யின் பின்னணி குறித்து விசாரித்தோம். நம்மிடம் பேசிய தமிழ்நாடு டாஸ்மாக் பார் மற்றும் கட்டட உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் அன்பரசன், “கரூர் கம்பெனி என்பது ஓர் இளம் நடிகரின் பெயர்கொண்ட ஒரு ஃபைனான்ஸ் நிறுவனம்தான். இந்த கம்பெனியைச் சேர்ந்தவர்களை வைத்துத்தான், முறைகேடாக பார்களை இயக்குகிறார் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அமைச்சரின் சகோதரர் அசோக், கார்த்தி, ரமேஷ் ஆகிய மூவர்தான் கரூர் கம்பெனியை முன்னின்று நடத்துபவர்கள். சென்னை மண்டலத்தின் பார் வசூலை சசிகுமார், கோபால், மதுரை காசி, கந்தவேல் பாண்டியன் ஆகியோர் கவனித்துக்கொள்கிறார்கள். கோவைக்கு ஈஸ்வரமூர்த்தி, மதுரைக்கு புகழேந்தி, அதலை செந்தில், ஜி.பி.ராஜா, ஈரோடுக்கு பெரியசாமி, தூத்துக்குடிக்கு பாலசந்திரன், ஆகாஷ், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டைக்கு இளங்கோவன் என மாவட்டத்துக்கு மாவட்டம் ஆட்களை நியமித்து வசூல்வேட்டை நடத்துகிறது ‘கரூர் கம்பெனி.’ இந்த ‘கரூர் கம்பெனி’ கேட்கும் பணத்தைக் கொடுக்க மறுத்தால், பார்களை மூடிவிடுகிறார்கள். இதனால், லைசென்ஸ் பெற்று பார் நடத்துபவர்களும் கரூர் கம்பெனிக்குக் கப்பம் கட்டித்தான் பாரை நடத்துகிறார்கள். இவர்கள் அடிக்கும் கொள்ளையால், அரசுக்கு மாதம் 60 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது” என்றார் ஆதங்கத்துடன். இதே கருத்தைத்தான் விலாவாரியாக நம்மிடம் முன்வைத்தார், தமிழ் மாநில டாஸ்மாக் பார் மற்றும் கட்டட உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கி, சி.பி.ஐ வரையில் புகார்களை அனுப்பியிருக்கிறார் பா.ஜ.க-வின் ஐடி விங் மாநிலத் தலைவர் நிர்மல் குமார். “தமிழ்நாடு முழுவதுமுள்ள டாஸ்மாக் பார்களில் சட்டவிரோத மது விற்பதில் தொடங்கி, மிக்ஸர், தண்ணீர் பாட்டில் விற்பது வரை இவர்கள் கட்டுப்பாட்டில்தான் நடக்கிறது. லைசென்ஸ் வாங்கிய பார் உரிமையாளர்கள், அரசுக்கு மாதா மாதம் டி.டி-யில்தான் பணம் செலுத்துவார்கள். அவர்கள் மாதம் எவ்வளவு கட்டுகிறார்களோ அந்தத் தொகையில் நகர்ப்புறங்களில் 33 சதவிகிதமும், கிராமப்புறங்களில் 25 சதவிகிதமும் சட்டவிரோதமாக கமிஷன் வசூல் செய்கிறது ‘கரூர் கம்பெனி.’ இந்த கரூர் கம்பெனியைக் கட்டுப்படுத்துவது செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்தான். டெல்லியில் சிலரைக் சரிக்கட்டினால் தப்பிவிடலாமென சமீபத்தில் டெல்லியில் முகாமிட்டிருந்தார் அசோக். ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை. இனி, அவர்கள் தப்பவும் வாய்ப்பில்லை” என்றார் விரிவாக.

அடாவடி வசூல் அள்ளிக்குவிக்கும் கரூர் கம்பெனி!

அள்ளிக்குவிக்கும் கரூர் கம்பெனி!

இந்த பார் வருமானத்தையும் தாண்டி, அரசின் டாஸ்மாக் கடை வசூலிலேயே ‘கரூர் கம்பெனி’ கமிஷன் கேட்பதாக, பகீர் குற்றச்சாட்டும் கிளம்பியிருக்கிறது. அதை தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ நிர்வாகிகளே எழுப்பியிருக்கிறார்கள். இது தொடர்பான புகார், முதல்வர் தொடங்கி தலைமைச் செயலாளர் வரை அனைவருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.

என்னதான் நடக்கிறது என சி.ஐ.டி.யூ-வைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். “ஒவ்வொரு கடையின் விற்பனை குறித்தும் ரிப்போர்ட்டை எங்கள் துறைக்கு அளிப்போம். அந்த ரிப்போர்ட் அதிகாரிகள் மூலமாக கரூர் கம்பெனியின் கைகளுக்குச் செல்கிறது. டாஸ்மாக் கடையின் ‘சேல்ஸ்’ தரவுகளை மொபைலில் ஏற்றிக்கொள்ளும் கரூர் கம்பெனியின் ஆட்கள், பாட்டிலுக்கு ஒரு ரூபாய் வீதம், தினசரி விற்பனையில் 1,000 முதல் 5,000 ரூபாய் வரை மாமூல் கேட்கிறார்கள். தமிழ்நாடு முழுவதுமுள்ள 5,387 கடைகளுக்கு எவ்வளவு வசூல் கொட்டும் என்பதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இப்படி இவர்கள் மேற்கொள்ளும் அடாவடி வசூல் மூலம், ஒவ்வொரு நாளும் பாட்டில் விற்பனையில் மட்டுமே கோடிக்கணக்கில் வசூலை அள்ளிக்குவிக்கிறது ‘கரூர் கம்பெனி.’ சமீபத்தில் சேலம் டாஸ்மாக் கடைப் பணியாளர்களுக்கு தி.மு.க தொழிற்சங்கத் தலைவர் சார்பில் போன் செய்த ஒருவர், ‘நான் கரூர் கம்பெனியிலருந்து பேசுறேன். ஒவ்வொரு மாசமும் இவ்வளவு மாமூல் நீங்க கொடுத்துடணும்’ என மிரட்டியிருக்கிறார். இவர்களின் மிரட்டலுக்குப் பணியவில்லையென்றால் டாஸ்மாக் ஊழியர்களைத் துறைரீதியாகப் பழிவாங்கும் செயல்களிலும் இறங்குகிறார்கள்” என்று புலம்பினார்கள்.

அன்பரசன், நிர்மல் குமார்
அன்பரசன், நிர்மல் குமார்

செந்தில் பாலாஜியின் ஈவு இரக்கமற்ற வசூல்!

கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கப் பொறுப்பாளர் வேலுசாமியிடம் பேசினோம். “கரூர் கம்பெனிக்கு ஒத்துழைக்காத கோவை டாஸ்மாக் சூப்பர்வைசரை சமீபத்தில் பணியிட மாற்றம் செய்துவிட்டனர். அவரின் டிரான்ஸ்ஃபர் ஆர்டரை, கரூர் கம்பெனி நெட்வொர்க்கில் இருக்கும் ஒருவர்தான் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்புகிறார். இதைப் பற்றி அதிகாரிகளிடம் கேட்டால், ‘எல்லாம் மேலிடம்’ எனக் கையைக் காட்டிவிட்டு `கப்சிப்’ ஆகிறார்கள். அரசு கஜானாவுக்கு வரவேண்டிய வருவாய், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் கம்பெனிக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது. சமீபகாலங்களாக டாஸ்மாக் ஊழியர்களைத் தாக்கிப் பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன. சென்னையில் ஒரு டாஸ்மாக் ஊழியர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியபோதுகூட, கண்டுகொள்ளாத துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் வசூலில் மட்டும் கொஞ்சமும் ஈவு இரக்கம் காட்டுவதில்லை. அவருக்கு டாஸ்மாக் மூலமாகக் கிடைக்கும் வருமானம் மட்டும் வேண்டும். ஊழியர்கள் நலனைப் பற்றி யோசிக்க மாட்டாரா... கடந்த ஓராண்டுக்குள் மட்டும் ‘கரூர் கம்பெனி’க்கு ஒத்துழைக்காதவர்கள் என, கோவையில் மட்டும் 150 டாஸ்மாக் ஊழியர்களுக்கு டிரான்ஸ்ஃபர் வழங்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் அநியாயமில்லையா?” என்றார் கொதிப்புடன்.

வேலுசாமி
வேலுசாமி

இது குறித்து விளக்கம் கேட்க, அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பலமுறை தொடர்புகொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவே இல்லை. அவரது எண்ணுக்குக் குறுஞ்செய்தியும் அனுப்பியிருக்கிறோம். இதுவரை பதில் இல்லை.

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்கள் என அனைத்தையும் சேர்த்து ஏறத்தாழ 30,000 பேர் பணிபுரிகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ‘கரூர் கம்பெனி’ என்றால் யார்... அவர்கள் என்ன செய்கிறார்கள்... என்ற அனைத்துத் தகவல்களும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன. கள்ளச்சந்தை வியாபாரம், மது பாட்டிலுக்கு வசூல், டி.டி-யில் கமிஷன் என ‘கரூர் கம்பெனி’ அடிக்கும் வசூல் கொள்ளை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பாக்கெட்டுக்குத்தான் செல்வதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய முறைகேட்டை செந்தில் பாலாஜி மட்டுமே தனியாகச் செய்ய வாய்ப்பில்லை. பின்புலத்தில், ஒரு பெரும் சக்தி உதவினால் மட்டுமே இது சாத்தியமாகியிருக்க முடியும். குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ‘கரூர் கம்பெனி’யால் இவ்வளவு வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் எப்படி செயல்பட முடிகிறது என்பதுதான் தலைசுற்ற வைக்கும் கேள்வியாக இருக்கிறது!