
தமிழகத்தில், நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில், சுமார் 30 லட்சம் லிட்டர் பாலைத்தான் ஆவின் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள பாலை 46 தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மாவட்டம் மாவட்டமாக, ஆவின் பாலகங்கள், பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் எனத் திரும்பிய பக்கமெல்லாம் ஆய்வில் `தடதடத்தார்’ பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர். அந்தச் சமயத்தில், “பழைய ரெக்கார்டுகளையெல்லாம் எடுக்க ஆரம்பித்திருக்கிறோம். ஆவின் நிறுவனத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதிகாரிகளோ, ஆட்சியிலிருந்தவர்களோ... யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காத்திருங்கள், விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும்” என்று ஆவேசம் பொங்கப் பேசினார் நாசர். அவர் பொங்கி ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. முறைகேடு புகாரில் சிக்கியவர்கள்மீது நடவடிக்கையும் இல்லை; அது பற்றி மேற்கொண்டு அவர் பேசவும் இல்லை. “நடவடிக்கை எடுக்காதது ஒருபுறமிருக்க, கடந்த 19 மாதங்களில் ஆவின் நிர்வாகத்தையே பாழாக்கிவிட்டார் நாசர். நிர்வாகக் குளறுபடிகள், முறைகேடுகள், கமிஷன் குற்றச்சாட்டுகள் என மொத்த ஆவின் நிர்வாகமும் ஊழலில் உடைந்து ஒழுகுகிறது” எனக் கொதிக்கிறார்கள் ஆவினில் பணியாற்றும் சில அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும். ‘என்னதான் நடக்கிறது ஆவினில்?’ விவரமறிய, களமிறங்கினோம். பொங்கி வழிந்தன குற்றச்சாட்டுகள்!

இணையம், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், தொடக்கப் பால் கூட்டுறவு சங்கங்கள் என மூன்றடுக்கு முறையில் ஆவின் நிர்வாகம் இயங்குகிறது. இதில், விவசாயிகளிடமிருந்து தொடக்கப் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகக் கொள்முதல் செய்யப்படும் பால், 27 கூட்டுறவு ஒன்றியங்களில் பதப்படுத்தப்பட்டு, வகை பிரிக்கப்பட்டு, ஆவின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. அ.தி.மு.க ஆட்சியில், ஆவின் மூலமாக ஒரு நாளைக்கு 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க ஆட்சியில் நாளொன்றுக்குச் சுமார் 30 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள். இதிலேயே மிகப்பெரிய முறைகேடு புகார் எழுந்திருப்பதுதான் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம்.
பால் கொள்முதலில் முறைகேடு!
நம்மிடம் பேசிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது அலி, “தமிழகத்தில், நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில், சுமார் 30 லட்சம் லிட்டர் பாலைத்தான் ஆவின் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள பாலை 46 தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. ஆவினின் முதுகெலும்பே அதன் நிர்வாகக் கட்டமைப்பிலுள்ள 9,376 தொடக்கப் பால் கூட்டுறவு சங்கங்கள்தான். இங்குதான் விவசாயிகள் தங்களுடைய பாலைக் கொள்முதலுக்காகக் கொடுக்கிறார்கள். இந்தக் கட்டமைப்பு எண்ணிக்கை எந்தத் தனியார்வசமும் இல்லை. ஆவின் விதிப்படி, தொடக்கப் பால் கூட்டுறவு சங்கங்களில்தான் விவசாயிகள் அளிக்கும் பாலின் தரம் ஆய்வுசெய்யப்பட வேண்டும். அதற்கான விலை நிர்ணயமும் அங்கேயே செய்யப்பட வேண்டும். ஆனால், அது நடப்பதே இல்லை.

2017-ல், இந்தப் பிரச்னை பூதாகரமானபோது, ‘தொடக்கப் பால் கூட்டுறவு சங்கங்களில்தான் பாலின் தரத்தை அறிய வேண்டும். அதற்கான மெஷின்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்’ என்று ஆவின் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆட்சி மாறிய பிறகும்கூட நீதிமன்றத் தீர்ப்பை இதுவரை அரசு அமல்படுத்தவில்லை. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை, டேங்கர் லாரிகளில் நிரப்பி, மாவட்ட ஒன்றியங்களுக்குக் கொண்டுவந்த பின்னர்தான் ஆய்வே செய்கிறார்கள். பாலின் கொழுப்புச்சத்து 4.2-ஆகவும், கொழுப்பு அல்லாத சத்து 8.5-ஆகவும் இருந்தால், அந்தப் பாலுக்கு லிட்டருக்கு 35 ரூபாய் ஆவின் கொடுக்கிறது. இந்த அளவைவிடக் குறைந்திருந்தால், கொள்முதல் விலையும் குறையும்.
டேங்கர் லாரிகளில் திருட்டு!
டேங்கர் லாரி மூலமாகப் பாலைக் கொண்டுவரும்போதே, கணிசமான அளவுக்குப் பாலைத் திருடிவிட்டு, தண்ணீரைக் கலந்துவிடு கின்றனர். தமிழகமெங்கும் இது நடக்கிறது. கலப்படம் செய்யப்பட்ட பாலில் கொழுப்புச்சத்து குறைவாகவே ஆய்வுகளில் தெரியும். இதைக் கணக்கிட்டு, பாலுக்கான கொள்முதல் விலையைக் குறைத்துக் கொடுக்கிறது ஆவின் நிர்வாகம். இதனால், பால் விவசாயிகளுக்கு உரிய கொள்முதல் விலை எப்போதுமே கிடைப்பதில்லை. பாலைத் திருடி விற்கும் கும்பலும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகளும்தான், தினந்தோறும் லட்சங்களில் கொள்ளையடிக்கிறார்கள். இது அமைச்சருக்குத் தெரியாதா அல்லது தெரிந்தும் மெளனமாக இருக்கிறாரா?
விவசாயிகளிடமிருந்து திருடப்பட்ட பால், தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக விற்கப்படுகிறது. தரமான பாலை உற்பத்தி செய்து தந்தாலும், விவசாயிகளுக்குரிய கொள்முதல் விலை கிடைப்பதில்லை. தவிர, கால்நடைத் தீவன மானியத்தையும் அரசு ரத்துசெய்துவிட்டது. பாலில் எவ்வளவு கொழுப்புச்சத்து இருந்தாலும் சரி, லிட்டருக்கு 30 ரூபாய் வரை கொடுத்து எடுத்துக்கொள்கின்றன தனியார் நிறுவனங்கள். இதனால், தனியார் பால் நிறுவனங்களை நோக்கி பால் விவசாயிகள் மாற ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றார் விரிவாக.

திணிக்கப்படும் தனியார் பால்... ஆவின் தலையில் பில்!
சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 17,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கணக்கு காட்டியிருக்கிறது மாவட்டக் கூட்டுறவு ஒன்றிய நிர்வாகம். அதிர்ச்சியடைந்த மேலதிகாரிகள் விசாரிக்கவும்தான், அது தொடர்பான முறைகேடு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. நம்மிடம் பேசிய ஆவின் ஊழியர்கள் சிலர், “திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை, தேனி, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டக் கூட்டுறவு ஒன்றியங்களில் திடீர் திடீரென பால் கொள்முதல் அதிகரித்ததாகக் கணக்கு காட்டுவார்கள். இங்கே செயல்படாத கூட்டுறவு சங்கங்கள் அதிகம். அவை மூலமாக, பெரும் முறைகேடுகள் நடந்துவருகின்றன.
ஆவினில் இருப்பதுபோல, பாலைப் பதப்படுத்தும் வசதி மாவட்டம்தோறும் தனியார் பால் நிறுவனங்களுக்கு இல்லை. அவர்களால் தங்கள் பாலைக் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் கையில் வைத்திருக்க முடியாது. அப்படி தேங்கிப் போகும் பாலை ஆவின் தலையில் கட்டுகிறார்கள். இதற்காக, லிட்டருக்கு மூன்று ரூபாய் வீதம் கமிஷன் வாங்கிக்கொள்கிறது அமைச்சர் தரப்பு. தமிழ்நாடு முழுவதும் சராசரியாக, நாளொன்றுக்கு 30,000 லிட்டர் பால் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு ஆவினுக்கு வருகிறது. அதன்படி பார்த்தால், கமிஷன் மட்டுமே நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய். இப்படிக் கொள்முதல் செய்யப்படும் பாலும் தரமாக இல்லை என்பதுதான் விவகாரமே.
பால் பீய்ச்சப்பட்ட நேரத்திலிருந்து நீண்ட நேரம் டேங்கர் லாரிகளிலேயே இருப்பதால், அவை கிட்டத்தட்ட கெட்டுப்போன நிலையில் இருக்கும். அதைத் தெரிந்துதான் வாங்குகிறார்கள். அதைவிடக் கொடுமை, அந்தப் பாலை நல்ல பாலோடு கலந்துவிடுவதால், மொத்தமாக எல்லாமே கெட்டுத் திரிந்துவிடுகின்றன. இப்படி மட்டும், நாளொன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் பால் ஆவினில் கெட்டுப்போய்விடுகிறது. அதை நஷ்டக் கணக்கில் எழுதிவிட்டு, அடுத்த நாள் வசூலுக்குத் தயாராகிவிடுகிறார்கள் ஆவின் அதிகாரிகள். தன் தொகுதியில், குடிநீர்க்குழாய் உடைந்திருக்கிறதா எனக் கால்வாய்க்குள் தலையை நீட்டி ஆய்வுசெய்யும் அமைச்சர் நாசர், தனது துறையில் மோசடி நடந்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை” என்றனர் விரிவாக.
டேங்கர் லாரி முறைகேடு... ஆண்டுக்கு 55 கோடி நஷ்டம்!
பால் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பாலை ஏற்றி, மாவட்ட ஒன்றியங்களுக்குக் கொண்டுவருவதற்கு, 2018-ல் டெண்டர் விடப்பட்டது. அதன்படி, 375 தனியார் லாரிகளுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. அந்த லாரிகள்தான் தற்போது வரை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு, ஒரு கி.மீ-க்கு வழங்கும் தொகையே ஆவினைப் பஞ்சராக்கிவிடுகிறது என்கிறார்கள் பால்வளத்துறை அதிகாரிகள்.
நம்மிடம் பேசியவர்கள், “பாலைக் கொண்டுவருவதற்கு ஒரு கி.மீ-க்கு 33.90 ரூபாய் பில் வசூலிக்கிறது தனியார் லாரிகள் தரப்பு. இந்தத் தொகை அரசுக்குக் கட்டுப்படியாகவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் புதிய டெண்டர் கோரப்பட்டு, பல நிறுவனங்கள் கலந்துகொண்டன. கி.மீ-க்கு 24.70 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் நாசர் தலையீட்டால் அரசாணை வெளியாகவில்லை. டெண்டர் விதிப்படி, 180 நாள்களுக்குள் அரசாணையை வெளியிடாததால், ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது.
2018-ல் ஒப்பந்தம் எடுத்த லாரிகளே இன்றும் ஆவினுக்காகப் பால் சுமக்கின்றன. இதனால், ஒரு கி.மீட்டருக்கு 9.2 ரூபாய் நஷ்டமாகிறது. ஆவினில் பால் ஏற்றிவரும் ஒரு லாரி, சராசரியாக ஒரு மாதத்துக்கு 13,500 கி.மீ ஓடுகிறது. அந்தவகையில், ஒரு லாரிக்கு 1.24 லட்சம் ரூபாய் கூடுதலாக மாதம்தோறும் அளிக்கிறது ஆவின் நிர்வாகம். 375 லாரிகளுக்கு, மாதம்தோறும் 4.65 கோடி ரூபாய் கூடுதல் செலவீனமாகிறது. ஆண்டுக்கு மட்டுமே 55.89 கோடி ரூபாய் நஷ்டம். இந்த நஷ்டத்துக்கு அமைச்சர் நாசரே பொறுப்பு” என்றனர்.
நம்மிடம் பேசிய ஆவின் ஒப்பந்ததாரரான ஆவின் வைத்தியநாதன், “லாரி டெண்டரை நடத்தவிடாமல் அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதோடு, சட்டத்துக்குப் புறம்பாக ‘கொட்டேஷன்’ அடிப்படையில் டேங்கர் மற்றும் கன்டெய்னர் லாரிகளை இயக்குகிறார்கள். இதை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்சென்றோம். ஆனாலும், எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. ‘ஆவின் விற்பனையில் லாபம்’ என்கிறார் முதல்வர். ஆனால், இவர்கள் சொல்லும் லாபம் என்பது விலையேற்றத்தால் வந்ததே தவிர, விற்பனை அதிகரிப்பால் வந்தது இல்லை. ‘குடும்ப வேலைகளை’ விட்டுவிட்டு, ஆவின் நிர்வாகத்தின்மீது அமைச்சர் நாசர் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்” என்றார்.
போலி கார்டு, பணி நியமன சர்ச்சை... அனைத்திலும் பொங்கி வழியுது முறைகேடு!
சமீபத்தில், புரதச்சத்து அதிகமாக இருக்கும் ஆரஞ்சு பாக்கெட் பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் அளவுக்கு உயர்த்தியது ஆவின். சிறிய டீக்கடைகள் முதல் சிறு, குறு உணவகங்கள் வரை இந்த ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளைத்தான் அதிகம் வாங்கிவந்தன. விலை ஏற்றத்தால் ஆரஞ்சு பாக்கெட்டின் விற்பனை அளவு குறைந்திருக்கும் நிலையில், அதைவிட விலை குறைவான பச்சை பாக்கெட்டுக்கான ‘டிமாண்ட்’ அதிகரித்தும் இருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய ஆவின் மார்க்கெட்டிங் அதிகாரிகள் சிலர், “ஆரஞ்சு பாக்கெட்டின் விலையேற்றத்தால், பச்சைப் பாக்கெட்டுகளை நோக்கி டீக்கடை உரிமையாளர்களும், சிறு ஹோட்டல்களும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாக்கெட்டுகளை தினம்தோறும் மொத்தமாக வாங்க முடியாது என்பதால், போலி ஆவின் கார்டுகள் போடப்பட்டு, தினம்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் பச்சை பாக்கெட் வணிக நிறுவனங்களுக்கு மடைமாற்றிவிடப்படுகின்றன. ஒவ்வோர் அட்டைக்கும் 10 லிட்டர், 15 லிட்டர் பாலை வாரி வழங்குகின்றன சில ஆவின் பாலகங்கள். இதற்கான கமிஷன் பாலகத்தின் ஊழியர்களுக்கு நாள்தோறும் கிடைத்துவிடுவதால், முறைகேடு பற்றி யாரும் பேசுவதேயில்லை. சராசரி தமிழகக் குடும்பங்கள் பச்சை, நீல பாக்கெட்டுகளைத்தான் பயன்படுத்துகின்றன. அதிலேயே, இந்த முறைகேடு கும்பல்கள் கைவைத்துவிடுவதால், பொதுமக்களுக்குப் போதுமான ஆவின் பால் பாக்கெட்டுகள் கிடைப்பதில்லை. இதனால், அதிக விலை கொடுத்து தனியார் பாலை வாங்கவேண்டிய நிர்பந்தம் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், ஆவினில் 870 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், அந்த நியமனங்களெல்லாம் நிறுத்தப்பட்டன. இப்போது, அந்த 870 பேரில் தகுதியானவர்களை மட்டும் வடிகட்டி, அவர்களுக்குப் பணி வழங்கத் தீர்மானித்திருக்கிறார் அமைச்சர் நாசர். இதற்காக, மூன்றிலிருந்து எட்டு லட்சம் ரூபாய் வரை கமிஷன் வசூலிக்கிறது அமைச்சர் தரப்பு. ‘யார் தகுதி வாய்ந்தவர்?’ என்பதை கமிஷன் அடிப்படையிலேயே தீர்மானிக்கிறார்கள்” என்றனர் வேதனையுடன்.

ஏழு பி.ஏ-க்கள்... வெண்ணெயில் ஊழல்... ஆவினைப் பாழாக்கிய நாசர்!
திருநெல்வேலி மாவட்டத்துக்கு, நாளொன்றுக்கு 34,545 லிட்டர் பால் சப்ளை செய்துவந்த ஆவின், தற்போது 28,000 லிட்டர் பால் மட்டுமே சப்ளை செய்கிறது. மதுரை மாவட்டத்தில், 1,81,167 லிட்டர் பால் சப்ளை இருந்த இடத்தில், தற்போது 1,30,000 லிட்டராகச் சரிந்துவிட்டது. பாலுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தாலும், சப்ளை விகிதம் ஆவினில் ஏன் குறைந்தது, யாரால் குறைந்தது என்பது விடை தெரியவேண்டிய கேள்வி.
நம்மிடம் பேசிய தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி, “தனியார் நிறுவனங்களிடம் செய்துகொண்ட டீலால்தான், சப்ளை விகிதத்தை ஆவின் குறைத்துக்கொண்டிருக்கிறது. இந்தச் செயற்கைத் தட்டுப்பாட்டுக்கு அமைச்சர் தரப்புதான் காரணம். இதுபோக, ஆவினின் கொழுப்பு கையிருப்பு குறைந்து, வெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதைச் சரிசெய்ய, மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு தனியார் பால் பண்ணையிடமிருந்து சுமார் 1,500 மெட்ரிக் டன் வெண்ணெய் கிலோ 417 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறது. இந்த மறைமுக வெண்ணெய் கொள்முதலில் கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் ஆதாயம் பார்த்திருக்கிறார் அமைச்சர்” என்றார் சூடாக.
“அமைச்சரின் நிழலாக வலம்வரும் பூந்தமல்லி தி.மு.க ஒன்றியச் செயலாளர் கமலேஷும், அமைச்சரின் மகனும், ஆவடி மாநகராட்சி கவுன்சிலருமான ஆசிம் ராஜாவும்தான் நாசர் தரப்பின் ‘ஆல் இன் ஆலாக’ வலம்வருகிறார்கள்” என்கிறது ஆவின் வட்டாரம். நம்மிடம் பேசிய ஆவினின் மூத்த அதிகாரி ஒருவர், “ஆவினில் மட்டுமல்ல, ஆந்திராவிலிருந்து திருவள்ளூர் வழியாக சென்னைக்கு வரும் எம்.சாண்ட் லாரிகளிலும் வசூல் பார்க்கிறது அமைச்சர் தரப்பு. இதுபோக, திருவள்ளூர் மாவட்டத்தில் நடக்கும் ரியல் எஸ்டேட் தொழில்களிலெல்லாம் அமைச்சரின் கடைக்கண் பார்வையில்லாமல் எந்தக் கோப்பும் நகர்வதில்லை. ஆவடி மாநகராட்சியே அமைச்சரின் மகன் ஆசிம் ராஜாவின் விரலசைவில்தான் நகர்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஏழு பி.ஏ-க்கள் வைத்திருக்கும் ஒரே அமைச்சர் நாசர்தான். முதல்வர் உடனடியாகச் சுதாரிக்கவில்லையென்றால், ‘ஆவின் விற்பனைக்கு’ என போர்டு மாட்டிவிடுவார் நாசர்” என்றார் அந்த அதிகாரி.
பால் கொள்முதல், லாரி ஒப்பந்தம், தனியாரோடு டீலிங், பணியாளர் நியமனங்கள், போலி ஆவின் கார்டுகள், செயற்கைத் தட்டுப்பாடு என அனைத்திலும் லிட்டர் லிட்டராகப் பொங்கி வழிகிறது முறைகேடு புகார்கள். என்ன செய்யப்போகிறார் முதல்வர்?

நாசர் எனும் பூனை!
“2006-11 ஆட்சிக்காலம் முடிந்து, ஆவின் நிர்வாகத்தை எங்களிடம் கொடுத்தபோதே அதைச் சீரழித்துத்தான் வைத்திருந்தார்கள். பத்தாண்டுக் கால அ.தி.மு.க ஆட்சியில் அதை மீட்டெடுத்தோம். நான் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோதுதான், சோழிங்கநல்லூரில் மிகப்பெரிய ஆவின் பண்ணையைக் கொண்டுவந்தேன். இப்படி, ஆவின் வளர்ச்சிக்காகச் சிறு துரும்பைக்கூட அசைக்காதவர், தற்போது அட்டைபோல ஆவினை உறிஞ்சிவருகிறார். விலையேற்றம், நிலுவையிலிருக்கும் கொள்முதல் பணம், டெண்டர் முறைகேடு என அமைச்சர் நாசர் எனும் பூனை நாள் ஒன்றுக்கு 5.5 லட்சம் லிட்டரைக் குடித்து ஆவினைச் சீரழித்துவருகிறது. ஆவினை அழித்து தனியாரிடம் கொடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்துவருகிறது இந்த வெண்ணெய் வெட்டி அரசாங்கம்!”
- டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.

இது பொய்ப் பிரசாரம்!
``கொள்முதல் செய்யும்போதே பாலின் தரத்துக்கேற்பவே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. தொடக்கக் கூட்டுறவு சங்கங்களிலிருந்து சீல் வைக்கப்பட்ட டேங்கர் லாரிகள் மூலமாகத்தான், மாவட்ட ஒன்றியங்களுக்குப் பால் செல்கிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்த நடைமுறையில் பால் திருட்டு நடைபெற்றது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தடுத்திருக்கிறோம். பால் கொள்முதல் என்பது எப்போதுமே நிலையாக இருக்காது. சாதாரண நாள்களில் வரும் பாலின் அளவு, மழை, பண்டிகை, முகூர்த்த நாள்களில் குறைவாக இருக்கும். சராசரியாக வரவேண்டிய பால் வந்துகொண்டுதான் இருக்கிறது. கூடவோ குறையவோ வந்ததில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், பால் கொள்முதலை உயர்த்தித்தானிருக்கிறோம். செயலிழந்த சங்கங்களுக்கு உயிர் கொடுத்து மீட்டிருக்கிறோம். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்புகிறார்கள். எந்தப் பணியையும் கொட்டேஷன் அடிப்படையில் செயல்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதன்படிதான், பாலை ஏற்றிவரும் லாரிகளுக்கான டெண்டர் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆவின் பணி நியமனங்கள் நேர்மையாகவே நடக்கும். தமிழகத்தில் எங்குமே பால் தட்டுப்பாடு இல்லை. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இருக்கும் அமுல், கர்நாடகாவில் இருக்கும் ‘நந்தினி’யை வளர்க்க, ஆவினைச் சில அரசியல் காரணங்களுக்காக மட்டம் தட்டுவதைக் குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள். இந்தப் பொய்ப் பிரசாரத்தில் தற்போது அ.தி.மு.க-வும் இணைந்திருக்கிறது!”
- சா.மு.நாசர், பால்வளத்துறை அமைச்சர்.