அரசியல்
சமூகம்
Published:Updated:

சேலத்து மாங்கனி... இரும்பு மனிதர்... கரிகாலச்சோழன்!

சட்டசபை
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டசபை

அமைதியாக முடிந்தது ‘அட்ஜெஸ்ட்மென்ட்’ கூட்டத்தொடர்

சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்றக் கூட்டத்தொடர் சப்பென்று முடிந்துவிட்டது. நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் ‘நறுக்’ தொகுப்பு இது...

 • சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை உச்சத்தில் இருந்தது. கூட்டத்தில் இதுபற்றிய விவாதம் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தைச் சாதுர்யமாகக் கையாண்ட அமைச்சர் வேலுமணி, பிரச்னையைப் பெரிதாக்கவிடாமல் தி.மு.க தரப்புக்குத் ‘தண்ணீர்’ காட்டிவிட்டார்.

 • நீட் விவகாரம் முதல் ஹைட்ரோ கார்பன் பிரச்னை வரை சட்டமன்றத்தில் தி.மு.க கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானங்களை லாகவமாகக் கையாண்டனர் அ.தி.மு.க அமைச்சர்கள். தி.மு.க-வினர் எந்த மாதிரியான கேள்விகளை எழுப்புவார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப பதிலடி கொடுத்தனர். குறிப்பாக, அமைச்சர் சி.வி.சண்முகம் எந்தவிதக் குறிப்புமே இல்லாமல் தி.மு.க-வினருக்குப் புள்ளிவிவரங்களோடு பதிலடி கொடுத்ததை தி.மு.க-வினரே ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.

 • உயர்மின் கோபுர விவகாரத்தில் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தங்கமணி, “நீங்கள் மாற்றுத்திட்டம் இருந்தால் சொல்லுங்கள். செய்கிறோம்” என்று தடாலடியாகக் கேட்க அமைதியாகிவிட்டது தி.மு.க தரப்பு.

 • மரத்தால் கட்டமைக்கப்பட்டது சட்டமன்ற அரங்கு. தினமும் முறுக்கு, பக்கோடா போன்ற உணவுப்பொருள்களை எம்.எல்.ஏ-க்கள் கீழே சிதறவிட்டனர். அவற்றைச் சாப்பிடுவதற்காக எலிகள் படையெடுத்துவிடும் என்பதால் சட்டமன்ற அரங்கை தினமும் 50 பேர் பார்த்துப் பார்த்து பளிச் என்று சுத்தம் செய்திருக்கின்றனர்.

 • சட்டமன்றத்தில் அதிக தாக்குதலுக்கு உள்ளானவர் தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜி. இவருக்கு ஆரம்பத்தில் தி.மு.க ஆதரவு கொடுத்தது. ஆனால், அ.தி.மு.க உறுப்பினர்கள் தொடர் தாக்குதல் நடத்தவே, அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் தி.மு.க-வினர்.

சேலத்து மாங்கனி... இரும்பு மனிதர்... கரிகாலச்சோழன்!
 • சட்டமன்றத்துக்கு ஒருநாள் மஞ்சள் கலர் குர்தா மாடலில் சட்டை அணிந்து வந்தார் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன். அவர் அவைக்குள் வந்ததும் அவரைப் பார்த்து ஓ.பி.எஸ், தங்கமணி உள்ளிட்ட வர்கள், “அண்ணனுக்கு இளமை திரும்பிருச்சோ?” என்று கிண்டலாகக் கேட்க, ரொம்பவே வெட்கப்பட்டார் துரைமுருகன்.

 • ஸ்டாலின் தொடங்கி தி.மு.க உறுப்பினர்கள் பலரும் அரசியல்ரீதியாக மன்றத்தில் வைக்கும் விவாதங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக எழுந்து பதில் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஜெயக்குமாரின் கிண்டல் அதிகமாகச் சென்றபோது அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி அதிரடி காட்டினார் சபாநாயகர் தனபால்.

 • மூத்த உறுப்பினர்களைவிட இளம் உறுப்பினர்கள் பலரின் பேச்சு இம்முறை பலரையும் ஈர்ப்பதாக இருந்தது. தி.மு.க-வில் டி.ஆர்.பி ராஜா, தாயகம் கவி, அன்பில் மகேஷ், அ.தி.மு.க-வில் இன்பதுரை, பரமசிவம், முருகுமாறன் ஆகியோரின் பேச்சுக்கள் கவனம் ஈர்த்தன.

 • இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றிபெற்ற தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் தனித்தே செயல்பட்டார்கள். தனியரசு பேசும்போது, “தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் இரண்டு திராவிடக் கட்சிகள் மட்டுமே இங்கு ஆளுமை செய்ய முடியும்’’ என்று குறிப்பிட்டதால் இரு தரப்பிலுமே தனியரசுக்குப் பாராட்டு கிடைத்தது. என்.ஐ.ஏ மற்றும் டிக்டாக் குறித்து தமிமுன் அன்சாரி எழுப்பிய கேள்விகள் நீண்ட விவாதத்துக்கு உள்ளாயின.

 • பல நேரங்களில் முதல்வர் இருக்கும்போதே பல அமைச்சர்கள் மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் இருக்கை காலியாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது இத்தகைய காட்சிகளைப் பார்க்கவே முடியாது. அமைச்சர்கள் பதில் உரையின்போது மற்ற அமைச்சர்கள் இருக்கையில் இருப்பது மரபு. ஆனால், இந்தக் கூட்டத்தொடரில் அத்தகைய மரபுகள் மிஸ்ஸிங்.

 • இந்தக் கூட்டத்தொடரில் அ.தி.மு.க உறுப்பினர்களைவிட தி.மு.க உறுப்பினர்களுக்கே அதிகம் பேச வாய்ப்பு வழங்கப் பட்டது. சட்டமன்றம் நடைபெற்ற மொத்த நேரத்தில் 65 சதவிகித நேரம் தி.மு.க உறுப்பினர்களே பேசியிருப்ப தாகச் சொல்கிறது சட்டமன்றப் புள்ளிவிவரம்.

 • தி.மு.க கொண்டுவந்த அனைத்து கவனஈர்ப்புத் தீர்மானங்களையும் ஆளும் தரப்பு லாகவமாகக் கையாண்டது. எதிர்க்கட்சியாக தி.மு.க இந்தக் கூட்டத்தொடரில் சோபிக்காமல் போனதற்கு இரண்டு தரப்புக்கும் இடையே இருக்கும் அட்ஜெஸ்மென்ட்டே காரணம் என்ற பேச்சு பரவலாகக் கிளம்பியிருக்கிறது. தி.மு.க உறுப்பினர்கள் கொடுத்த பல கோரிக்கைகளை “பரிசீலனை செய்யப்படும்” என்று முதல்வர் சொன்னதும் துரைமுருகன் முன்வைத்த ‘‘உறுப்பினர் நிதியை அதிகரிக்க வேண்டும்’’ என்ற கோரிக்கை உடனே ஏற்கப்பட்டு அறிவிப்பு வெளியிட்டதுமே இதற்கு முக்கிய சாட்சியங்கள்.

 • சேலத்து மாங்கனி, இரும்பு மனிதர், கரிகாலச்சோழன்... இவை எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தக் கூட்டத்தொடரில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வழங்கிய பட்டங்கள்.