Published:Updated:

`நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம்’ - கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக-பாஜக இடையே காரசார விவாதம்!

சட்டப்பேரவை - பா.ஜ.க - தி.மு.க ( கோப்புப் படம் )

``நானும் டெல்டாகாரன்தான். அதனால், இந்தத் திட்டம் தமிழகத்துக்குள் வரக் கூடாது என்பதில் உங்களைப்போல் நானும் உறுதியாக இருக்கிறேன்.” - முதல்வர் ஸ்டாலின்

Published:Updated:

`நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம்’ - கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக-பாஜக இடையே காரசார விவாதம்!

``நானும் டெல்டாகாரன்தான். அதனால், இந்தத் திட்டம் தமிழகத்துக்குள் வரக் கூடாது என்பதில் உங்களைப்போல் நானும் உறுதியாக இருக்கிறேன்.” - முதல்வர் ஸ்டாலின்

சட்டப்பேரவை - பா.ஜ.க - தி.மு.க ( கோப்புப் படம் )

தமிழ்நாட்டின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான ’காவிரி டெல்டா’ பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்துக்கான ஏலம் நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்த நிலையில்தான், நேற்று வேளாண்துறை அமைச்சர் இது தொடர்பாக விளக்கமளித்தார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதப்பட்டது. இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சியினரும் நிலக்கரி எடுப்பதற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தியிருந்தனர்.

பாதுகாக்கப்பட்ட டெல்டா பகுதி
பாதுகாக்கப்பட்ட டெல்டா பகுதி

முதலில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசிய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, “மத்திய அரசு, மாநில அரசிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறது. டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொள்ளாமல், டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. பாதுகாப்பட்ட வேளாண் பகுதிகளில் இது போன்ற நடவடிக்கைகள் சட்டத்துக்குப் புறம்பானவை. இந்தியா, 2030-ம் ஆண்டுக்குள் 50% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்துக்கு மாற திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், அதற்கு எதிராக நிலக்கரி சார்ந்த திட்டங்களை மேற்கொள்வது கண்டனத்துக்குரியது. இது குறித்து பிரதமருக்கு சிறப்பான ஒரு கடிதத்தை தமிழக முதலமைச்சர் எழுதியிருக்கிறார். இது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தாமல் இருக்க அமைச்சர்கள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்” என்று சொல்லி அமர்ந்தார்.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

அடுத்ததாகப் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜ், “டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பிரிவு 4(1)-ன்படி புதிதாக அங்கு எதுவும் செய்யக் கூடாது. ஆனால், அதற்கு எதிராக மத்திய அரசு செய்துவரும் இத்தகைய நடவடிக்கையை தி.மு.க அரசு எதிர்க்க வேண்டும். கடந்த ஓராண்டாக இவர்கள் கவனத்துக்கு வராமல்போனது எப்படி எனத் தெரியவில்லை. குறிப்பாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு வெளியாக 22 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கிய கட்சி அ.தி.மு.க. தற்போது, நாடாளுமன்றத்தில் 38 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தி.மு.க., இந்தத் திட்டத்துக்கு எதிராகத் தீவிரமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இது பற்றி முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறுகின்றனர். அதற்கு பதிலாக பிரதமரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கலாம்” என்று விவசாய அமைப்புகள் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஆர்.காமராஜ்
ஆர்.காமராஜ்

அவரைத் தொடர்ந்து காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க, பா.ம.க உள்ளிட்டக் கட்சியினரும் கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், “டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஏலம்விடப்பட்டது. நல்ல வேளையாக யாரும் ஏலம் எடுக்கவில்லை. அதானி, அம்பானி எடுத்திருந்தால் தமிழகத்தின் நிலை என்ன... இப்படியாக மத்திய அரசு தொடர்ந்து தமிழக விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இதற்கு எதிராக தமிழகம் சார்பாக வலுவான கடிதம் எழுதியிருப்பதை வரவேற்கிறோம். அதே வேளையில், இனி தமிழக அமைச்சரவை அனுமதி பெறாமல், இப்படியான திட்டத்தின் அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்கக் கூடாது எனும் சிறப்புத் தீர்மானத்தைத் தமிழக அரசு கொண்டுவர வேண்டும். `தளபதி இருக்கிறார். அதனால் நாங்கள் நிம்மதியாக உறங்குகிறோம்’ என்னும் நிலை உருவாக வேண்டும்” என்னும் கோரிக்கையை முன்வைத்து முடித்துக்கொண்டார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இதற்கு சபாநாயகர் அப்பாவு பா.ஜ.க உறுப்பினர்களை நோக்கி, “உங்க அரசதான் குறை சொல்லுதாங்க, அதுக்கு பதில் சொல்லுங்க’’ என்றார். உடனே பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசன், “ஒரு நிறுவனத்தின் சார்பாக ஏலம் நடத்தப்படுவது வருவாய்த்துறையின் அனுமதியில்லாமல் நடக்காது. இது முன்கூட்டியே தெரிந்திருந்தும் தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தாமல் இருந்தது ஏன்... இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அமைச்சருக்குத் தமிழக பா.ஜ.க சார்பாகக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது" என்றார். மேலும் தொடர்ந்து பேசிய வானதி, அவையில் அதானி, அம்பானி நிறுவனங்கள் பற்றி வேல்முருகன் பேசியதைச் சுட்டிக்காட்டி, தி.மு.க ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்துப் பேசினார். ஆனால், அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ``மத்திய அரசுத் தரப்பிலிருந்து காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி எடுப்பது தொடர்பாகச் சமீபத்தில் ஏல அறிவிப்பு வெளியானது அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தின. பிரிவு 4 (1)-ன்படி, `பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்தவொரு புதிய திட்டத்தையும் அல்லது புதிய செயல்பாட்டையும் எந்தவொரு நபரும் மேற்கொள்ளக் கூடாது' என்று கூறப்பட்டிருக்கிறது. இரண்டாவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்ட, தடைசெய்யப்பட்ட திட்டங்களில் `நிலக்கரி படுகை மீத்தேன், ஷேல் எரிவாயு, பிற ஒத்த ஹைட்ரோகார்பன்கள் உள்ளிட்ட எண்ணெய், இயற்கை எரிவாயுவை ஆய்வுசெய்தல், துளையிடுதல் மற்றும் பிரித்தெடுத்தல்' ஆகியவை அடங்கும். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் டெண்டர் நிபந்தனைகளில் நிலக்கரி படுகை மீத்தேன் சுரண்டலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, அவை தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம், 2020-ன் தடைக்குள் அடங்கும்.

அதனால் அதை நிறைவேற்ற முடியாது. மத்திய அரசு இது தொடர்பாக கலந்தாலோசித்திருந்தால், இந்தச் சிக்கல் எழுந்திருக்காது. இங்கு கார்ப்பரேட் நிறுவனம் குறித்து பா.ஜ.க பாடம் எடுக்கிறது. நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். நீங்கள் என்ன கொண்டுவந்தீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததாக, ஒரு விரலை எங்கள் பக்கம் (தி.மு.க) நீட்டினால், மற்ற நான்கு விரல்களும் உங்கள் பக்கம்தான் இருக்கும். நான் அதில் அரசியல் செய்ய விரும்பவில்லை. இது திட்டவட்டமாக தமிழகத்தில் கொண்டுவரப்படாது” என்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இறுதியாகப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``இதை அறிவித்தபோது நீங்கள் எல்லோரும் எப்படி அதிர்ச்சியடைந்தீர்களோ... அப்படித்தான் நானும் அதிர்ச்சியானேன். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பேசி, உடனடியாகப் பிரதமருக்குக் கடிதம் எழுதப்பட்டது. மேலும், தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு டி.ஆர்.பாலு கடிதத்தின் நகலைத் துறை அமைச்சரிடம் வழங்கினார். தமிழ்நாட்டு முதல்வர் எழுதிய கடிதத்துக்கு நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சரும் உறுதியளித்திருக்கும் செய்தி கிடைத்திருக்கிறது. நானும் டெல்டாகாரன்தான். அதனால், இந்தத் திட்டம் தமிழகத்துக்குள் வரக் கூடாது என்பதில் உங்களைப்போல் நானும் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

முதலமைச்சர் இவ்வாறு பேசியதற்கு கவுன்ட்டர் கொடுக்கும் வகையில், சட்டசபைக்கு வெளியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``இதே டெல்டாகாரர்தான் மீத்தேன் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்” என்றார்.