Published:Updated:

`ஐபிஎல் போட்டிக்கு பாஸ் வேணும்!'- வேலுமணி | `லெக் ஸ்பின்னர் முதல்வர்!'- உதயநிதி - சட்டப்பேரவை `கலகல'

தமிழ்நாடு சட்டப்பேரவை ( கோப்புப் படம் )

`ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பிசிசிஐ (BCCI). அதை உங்கள் நெருங்கிய நண்பரான அமித் ஷா அவர்களின் மகன் ஜெய்ஷாதான் நடத்துகிறார். நாங்கள் கேட்டால் அவர்கள் பாஸ் தர மாட்டார்கள். நீங்கள் கேட்டால் நிச்சயம் தருவார்கள். ஒரு ஐந்து பாஸ்கள் வாங்கித் தந்தால்கூட போதும்.'- உதயநிதி

Published:Updated:

`ஐபிஎல் போட்டிக்கு பாஸ் வேணும்!'- வேலுமணி | `லெக் ஸ்பின்னர் முதல்வர்!'- உதயநிதி - சட்டப்பேரவை `கலகல'

`ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பிசிசிஐ (BCCI). அதை உங்கள் நெருங்கிய நண்பரான அமித் ஷா அவர்களின் மகன் ஜெய்ஷாதான் நடத்துகிறார். நாங்கள் கேட்டால் அவர்கள் பாஸ் தர மாட்டார்கள். நீங்கள் கேட்டால் நிச்சயம் தருவார்கள். ஒரு ஐந்து பாஸ்கள் வாங்கித் தந்தால்கூட போதும்.'- உதயநிதி

தமிழ்நாடு சட்டப்பேரவை ( கோப்புப் படம் )

சட்டப்பேரவையில் இன்று நடந்த `கலகல' சம்பவங்களின் தொகுப்பு..!

இன்று பிறந்தநாள் காணும்....

இன்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்குப் பிறந்தநாள் என்பதால், தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான மு.பன்னீர்செல்வம் கேள்வி நேரத்தின்போது, `சீர்காழி தொகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படுமா?' என்னும் கேள்வியை முன்வைத்தார். கூடவே, `இன்று அமைச்சரின் பிறந்தநாள் என்பதால், என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்’ என்றார். உடனே, அவைத்தலைவர் அப்பாவு, `நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்' என பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொன்னார்.

மானியக் கோரிக்கை பதிலுரையின்போது பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, பிறந்தநாள் வாழ்த்துகளை அமைச்சர் தங்கம் தென்னரசுக்குப் பகிர்ந்தார். அப்போது அவர், `உங்களுக்கு மட்டுமில்ல என்னுடைய பொண்ணு தன்மயாவுக்கும் இன்றுதான் பிறந்தநாள்’ என்றார். உடனே தங்கம் தென்னரசு, உதயநிதி பேசுவதைக் கேட்க மாடத்தில் அமர்ந்திருந்த அவரின் குடும்பத்தை நோக்கி ஒரு வணக்கத்தை வைத்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

`சென்னை சூப்பர் கிங்ஸை தடைசெய்ய வேண்டும்!'

மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, துறைரீதியிலான தன்னுடைய கோரிக்கையை முன்வைத்துப் பேசிவந்தார் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் வெங்கடேஷ்வரன், திடீரென ஐபிஎல் டாப்பிக்கை எடுத்தவர், ”தமிழர்களே இல்லாத தமிழ்நாட்டு அணி எனச் சொல்லப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைவைத்து, மாநிலம் முழுவதும் விளம்பரம் செய்து, வர்த்தகத்தில் ஈடுபட்டு சிலர் லாபம் பார்க்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டும். அதனால், சி.எஸ்.கே அணியைத் தடைசெய்ய வேண்டும்” எனப் பேசினார்.

தமிழகத்தில் அதிக ரசிகர்களைக்கொண்ட அணியைத் தடைசெய்ய வேண்டுமென பா.ம.க உறுப்பினர் பேச, அ.தி.மு.க கொறடாவோ, ’ஐபிஎல் காண இலவச பாஸ் எங்களுக்குக் கொடுத்தே ஆகணும்’ என கோரிக்கை வைத்த சம்பவமும் அரங்கேறியது.

வேலுமணி
வேலுமணி

எதிர்க்கட்சி கொறடா வேலுமணி எழுந்து, “அ.தி.மு.க ஆட்சியில் ஐபிஎல் விளையாட்டுக்களைப் பார்க்க சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பாஸ் வழங்கப்பட்டது. தற்போது 300-400 பாஸ்கள் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை" என்றதும் அவைத் தலைவர் அப்பாவுவோ, ’’பாஸ் வேணும்னு கேக்குறீங்க... சட்டசபைக்கான பாஸா’’ எனக் கலாய்த்தார். அதற்கு வேலுமணியோ, “இல்லீங்க ஐபிஎல் மேட்சுக்கான பாஸ் கேட்குறேன். அதுவும் விளையாட்டுதானே! அதனால் மானியக் கோரிக்கையில் தெரியப்படுத்துறேன். எனவே, விளையாட்டுத்துறை அமைச்சர் அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்” என முடித்தார்.

எதிர்க்கட்சி கொறடா எழுந்து பேசுவதால், முக்கிய பிரச்னையாகயிருக்கும் என எதிர்ப்பார்த்தவர்களுக்கு இது ஏமாற்றமே... தற்போது நடந்துகொண்டிருக்கும் மானியக் கோரிக்கை விவாதத்தில் ’ஆளுங்கட்சியினர் எங்களைப் பேசவே அனுமதிக்கவில்லை’ என்னும் அ.தி.மு.க-வினரின் உரிமைக்குரலைத் தொடர்ந்து, தற்போது வேலுமணி பேசிய முக்கிய ஒன்றாக ’ஐபிஎல் போட்டிக்கு பாஸ் தரவில்லை’ என்னும் பிரச்னை அவைக்குறிப்பில் ஏறியிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இது குறித்து பதிலுரையின்போது பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, “நான்கு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் நடக்கவே இல்லை. அப்படி இருக்கும்போது நீங்கள் யாருக்குப் பாஸ் கொடுத்தீர்கள்னு தெரியவில்லை. ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பிசிசிஐ (BCCI). அதை உங்கள் நெருங்கிய நண்பரான அமித் ஷா அவர்களின் மகன் ஜெய்ஷாதான் நடத்துகிறார். நாங்கள் கேட்டால் அவர்கள் பாஸ் தர மாட்டார்கள். நீங்கள் கேட்டால் நிச்சயம் தருவார்கள். ஒரு ஐந்து பாஸ்கள் வாங்கித் தந்தால்கூட போதுமானது. நாங்கள் எங்கள் சொந்த காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறோம். என் சொந்த காசைக் கொடுத்துதான் என் தொகுதியிலுள்ள விளையாட்டு வீரர்களைப் போட்டியைக் காணவைக்கிறேன்" என வேலுமணி பேசியதற்குப் பதிலடி தந்தார்.

எபினேசர்
எபினேசர்

`இளமை திரும்புதே!'

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய தி.மு.க ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், ``இன்று குழந்தைகளிடம் ஓடுதல், தாவுதல், தாண்டுதல் போன்ற செயல்களை உள்ளடக்கிய பம்பரம், கிட்டிப்புள், பந்து, கோலிக்குண்டு, புளியமுத்து, கபடி, கள்ளன்-போலீஸ் என உடல் உறுதியை ஏற்படுத்தும் விளையாட்டுகளும், அறிவுத்திறனை ஊக்குவிக்கும் கரகர வண்டி, பொம்மை விளையாட்டு, பூப்பறிக்க வருகிறோம் போன்ற விளையாட்டுகள் மறைந்துவிட்டன. மேலும், 10 வயதுக்கு மேலான குழந்தைகள் விளையாடும் கண்ணாமூச்சி, பூசணிக்காய், குலை குலையாய் முந்தரிக்காய், கல்லா மண்ணா போன்ற குழு விளையாட்டுகள் எங்கு போனது என்றே தெரியவில்லை. இந்த விளையாட்டுகளை நினைக்கும்போது 'இளமை திரும்புதே' என்னும் பாட்டு தொனியில் இளமை ஊஞ்சலாடுகிறது. ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக இயங்கச் செய்யும் இது போன்ற விளையாட்டுகள் சாதிமத பேதமில்லாமல், பாரம்பர்யத்தைக் காப்பாற்றியவை. எனவே, மறைந்துபோன இந்த விளையாட்டுகளை மீண்டும் கொண்டுவர வேண்டும். விளையாட்டுத்துறை அமைச்சர், தன்னுடைய ஆருயிர் நண்பர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து, செயல்படுத்த வேண்டும்" என கோரிக்கையை வைத்து அமர்ந்தார்.

அமைச்சர் காந்தி
அமைச்சர் காந்தி

இன்று மானியக் கோரிக்கை விவாதத்தின் பதிலுரையில் பேசிய அமைச்சர் காந்தி, “நமக்கெல்லாம் பிறந்தநாள் என்றால் எங்கே செல்வோம். எங்கே என்று எல்லோருக்கும் தெரியும்... ஆனால், முதலமைச்சரோ அவரின் பிறந்தநாள் அன்று சத்யஜோதி பார்வையற்றோர் இல்லத்துக்குச் சென்று தன் பிறந்தநாளைக் கொண்டாடினார். இப்படியெல்லாம் செய்வோம் எனப் பேசலாம். ஆனால், யார் செய்து காட்டுவது... மைக்கைப் பிடிச்சு யாரு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், இந்த அவையில், துரைமுருகன் அண்ணன் போல் சப்ஜெக்டிவா பேச யாராவது இருக்கிறார்களா?" என முதல்வர் தொடங்கி அவை முன்னவர் வரை பாராட்டினார்.

சட்டப்பேரவை  | ஸ்டாலின் | துரைமுருகன்
சட்டப்பேரவை | ஸ்டாலின் | துரைமுருகன்

இவர்களையெல்லாம் பாராட்டிப் பேசியவர், உதயநிதியை விட்டுவைப்பாரா என்ன... ``என் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாரே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். எப்போதுமே மாரத்தான் மாரத்தான் என ஓடிக்கொண்டே இருப்பார். இங்கு சட்டசபையில உட்கார்ந்திருக்கிறார் அதிசயமாக. கடந்த 4 நாள்களுக்கு முன்பு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கான பதிவு நடத்தப்பட்டது. அதற்கு சிறப்பு அழைப்பாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். அப்போது மாரத்தானில் ஓடுபவர்களுக்கு பதிவுக்கட்டணமாக 500 ருபாயும், திருநங்கைகளுக்கு பதிவுக்கட்டணமாக 100 ரூபாயும் நிர்ணியக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்திருந்த உதயநிதி ஸ்டாலின், `பதிவுசெய்யும் திருநங்கைகளுக்கு நான் ரூ.1,000 தருகிறேன்' என்றார். இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், அவரின் பிரசன்ஸ் ஆஃப் மையிண்டு எப்படி வேலை செய்கிறது என்பதைச் சொல்லத்தான்" என்றார். இவர் இதைப் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்புறம் இருக்கையில் இருந்தவர்கள் நேரத்தைச் சுட்டிக்காட்டினர்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

`நமது அணியின் கேப்டன் முதல்வர்!'

மானியக் கோரிக்கை பதிலுரையின்போது பேசிய அமைச்சர் உதயநிதி, ``எப்போது டிஃபென்ஸ் ஆட வேண்டும். எப்போது இறங்கி சிக்ஸர் அடிக்க வேண்டும் என நம்மையெல்லாம் வழிநடத்தி வருகிறார் நமது அணியின் கேப்டன் முதலமைச்சர். நேற்றும் ஆன்லைன் விளையாட்டைத் தடைசெய்து சிக்ஸர் அடித்தார். பாதுகாப்பட்ட வேளாண் பகுதிகளைப் பாதுகாத்து மற்றொரு சிக்ஸர் அடித்தார்" என்றவர், முதலமைச்சருடன் கிரிக்கெட் விளையாடியதைக் குறிப்பிட்டு, ``அவர் பேட்ஸ் மேன் மட்டுமல்ல, நல்ல லெக் ஸ்பின்னரும்கூட, அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது" என்றார். தொடர்ந்து பேசியவர், ``முன்பெல்லாம், பள்ளிகளிலுள்ள விளையாட்டு வகுப்புகளை மேக்ஸ், பிசிக்ஸ் டீச்சர்கள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், நான் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு வகுப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. எனக்குப் பிடித்த துறையை எனக்கு வழங்கிய முதலமைச்சருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லி அமர்கிறேன்” என்றார்.

தன் உரையை முடித்துக்கொண்டு அமர்ந்த உதயநிதியைப் பாராட்டிய அவைத் தலைவர் அப்பாவு, “கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் திறமையாகப் பதிலைச் சொன்னீர்கள். கலைஞர்போல் நீங்கள் பேசியதை இந்த அவை மறக்காது" எனப் புகழ்ந்தார்.