அறிவிப்புகள்
கார்ட்டூன்
சமூகம்
Published:Updated:

தங்க தமிழ்ச்செல்வன் வெளியேறியது ஏன்?

தங்க தமிழ்ச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்க தமிழ்ச்செல்வன்

புகழேந்தி பற்றவைத்த நெருப்பு!

மழைக்கு ஒதுங்கியவர்கள் தூவானம் விட்டதும் ஓடுவதைப்போல தினகரன் கூடாரத்தைவிட்டு பலரும் விலகிக் கொண்டிருக்கிறார்கள். தங்க தமிழ்ச்செல்வன் விவகாரம் பெரிய அளவுக்கு விவாதப் பொருளாகி யிருக்கிறது.

டி.டி.வி தினகரனின் நண்பரும் தொழிற்சங்க நிர்வாகியுமான செல்வப் பாண்டியனின் அலைபேசியில் தொடர்புகொண்டு தினகரன் பற்றி கடுமையான வார்த்தைகளில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியது, அ.ம.மு.க மட்டுமல்லாது அ.தி.மு.க-விலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபற்றி உடனடியாக ரியாக்‌ஷன் காட்டாத தினகரன், மறுநாள் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பேசிய தினகரன், ‘‘தனி நபரை நம்பி கட்சி நடத்தவில்லை; தொண்டர்களை நம்பித்தான் நடத்துகிறேன். தங்க தமிழ்ச்செல்வன் விஸ்வரூபமெல்லாம் எடுக்கமாட்டார்; என்னைப் பார்த்தால் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவார்” என்று கூறியிருந்தார்.

ஆடியோ விவகாரத்துக்குப்பின், ஜூன் 26-ம் தேதி மதுரையில் நம்மிடம் பேசிய தங்க தமிழ்ச் செல்வன், ‘‘என்னைப் பற்றி தவறான செய்தியைப் பரப்பி வருகிறார்கள். செல்போனில் பேசியதை ஆடியோவாக வெளியிடுவது ஒரு தலைவருக்கு அழகல்ல. இதேபோலத்தான் ஓ.பி.எஸ் - பொன்னார் சந்திப்பை வெளியிட்டார். அவர் கட்சி நடத்துகிறாரா, உளவு வேலை செய்கிறாரா? எந்த இயக்கத்திலும் இணையும் எண்ணம் எனக்கு இல்லை; இணையச் சொல்லியும் யாரும் என்னிடம் பேசவில்லை. அமைதியாக இருக்கவே நான் விரும்புகிறேன். மாவட்டச் செயலாளர் களுடன் கலந்து ஆலோசித்துதான் ஜெயலலிதா எந்த முடிவையும் எடுப்பார். ஆனால், தினகரனோ நிர்வாகிகள், தொண்டர்கள் என யாருடைய கருத்தையும் ஏற்காமல் ‘ஒன் மேன் ஆர்மி’ போல செயல்படுகிறார். அதனால்தான் கட்சியிலிருந்து பலரும் வெளியேறி வருகிறார்கள்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் இல்லை என்றால், தினகரன் இல்லை; ஆனால், அவரை நம்பிச் சென்ற 18 பேரும் தற்போது வாழ்க்கையை இழந்து கஷ்டப்படுகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே தினகரனின் செயல் பாட்டுக்கும் எனக்கும் முரண்பாடு இருந்தது. நான் சசிகலாவைச் சந்திப்பதற்கு தினகரன் அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பின்னரும் அ.தி.மு.க தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாக தினகரன் கூறுவதை எப்படி ஏற்க முடியும்? கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து என்னை நீக்கப்போவதாக தினகரன் கூறியுள்ளார். கொள்கையே இல்லாத கட்சிக்குக் கொள்கை பரப்புச் செயலாளர் தேவையா என்பதுதான் என் கேள்வி’’ என்றவரிடம், ‘‘நீங்கள் அ.தி.மு.க-வில் சேர உள்ளதாக வும் அதற்கு ஓ.பன்னீர்செல் வம் தடை போடுவதாகவும் சொல்லப்படுகிறதே?’’ என்று கேட்டோம். ‘‘ஊடகம்தான் இப்படிச் செய்தி வெளியிடு கின்றன. அதில் உண்மை இல்லை’’ என்றார்.

புகழேந்தி
புகழேந்தி

தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையேயான பிணக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்றும் கூறப்படுகிறது. இதுபற்றிக் கூறிய அ.தி.மு.க-வினர் சிலர், ‘‘தினகரன் 1998-ல் பெரியகுளம் மக்கள வைத் தொகுதியில் போட்டியிட்டபோதுதான், தங்க தமிழ்ச்செல்வ னும் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க-வில் வளர்ந்து வந்த நேரம். வழக்கில் ஜெ. பதவியிழக்க நேரிட்டதால், ஓ.பி.எஸ் முதல்வராகி விரைவிலேயே கட்சியில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார். ஆனால், தங்க தமிழ்ச்செல்வனால் ராஜ்யசபா எம்.பி அளவுக்குத்தான் போக முடிந்தது.

தங்க தமிழ்ச்செல்வனின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, ஓ.பி.எஸ்-ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் தங்க தமிழ்ச்செல்வனிடமே ஒப்படைக்கப்பட்டது. மாவட்டத்திலும் கட்சியிலும் தொடர்ந்து ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராகவே செயல்பட்டுவந்த, தங்க தமிழ்ச்செல்வன், முதல்வராக இருந்தபோது ஓ.பி.எஸ் தேனிக்கு வந்தால் அவரை வரவேற்கக்கூடச் செல்லமாட்டார்.

ஆனால், பன்னீர்செல்வம் தினகரனிடம் இருந்ததால், அந்த அணியில் அவர் சேரவில்லை. ஓ.பி.எஸ்-ஸை எதிர்க்க வேண்டும் என்பதுதான் தமிழ்ச்செல்வனின் ஒரே எண்ணம். இப்போது எழுந்துள்ள பிரச்னைக்கு பெங்களூர் புகழேந்திதான் முக்கியக் காரணம். அவர் சசிகலாவுடனும் தினகரனுடனும் நெருக்கமாக இருப்பது தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பிடிக்கவில்லை. கடந்த தேர்தலில் மதுரை வட்டாரத்தில் பிரசாரம் செய்ய வந்த புகழேந்தியை தங்க தமிழ்ச்செல்வன் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். இதுபோன்று பல சம்பவங்களை மனதில் வைத்துக்கொண்டிருந்த புகழேந்தி, அவ்வப்போது தினகரனிடம் தங்க தமிழ்ச்செல்வன் குறித்து புகார் கூறி வந்துள்ளார்.

தவிர, தினகரனை மட்டம் தட்டியும் இழிவாகவும் அவர் போனில் பேசியதை நிர்வாகிகள் சிலர் பதிவு செய்து தினகரனிடம் கொடுத்துவிட்டனர். மேலும் செந்தில் பாலாஜியுடன் தொடர்பில் இருந்தது; திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் தி.மு.க-வுக்கு சாதகமாக நடந்துகொண்டதாக எழுந்த புகார் உள்ளிட்ட காரணங்களுக்காக அவரை தினகரன், சமீபத்தில் கடுமையாகத் திட்டியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, தொகுதிகளுக்கு பட்டுவாடா செய்யச் சொன்ன நிதியில் பெரும் மோசடி நடந்துள்ளதாக எழுந்த புகாரில், தங்க தமிழ்ச்செல்வனிடம் கணக்குக் கேட்டது அவரைக் கொந்தளிக்க வைத்துவிட்டது.

ஆடியோ வெளியாவதற்கு முன், டி.வி நிகழ்ச்சி ஒன்றில் எடப் பாடியை அண்ணன் என்று தங்க தமிழ்ச்செல்வன் சொன்னதைக் கண்டித்து, ஒரு நாளிதழில் புகழேந்தி பேட்டி கொடுத்திருந்தார். இவையெல்லாம் தங்க தமிழ்ச்செல்வனை கார்னர் செய்ய தினகரன் அணி முன் கூட்டியே திட்டமிட்டதைத்தான் காட்டுகிறது’’ என்றனர்.

இது சம்பந்தமாக பெங்களூரு புகழேந்தியைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். ‘‘இதுவிஷயமாக தினகரனைச் சந்தித்து விட்டுத்தான் சொல்ல முடியும்’’ எனக் கூறினார்.