
கனகா வரதன்
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20, திருநர் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஜிவென்டோலின் ஆன் ஸ்மித்’ என்ற திருநங்கை 1999-ம் ஆண்டு கொல்லப்பட்டதை நினைவுகூரும் இந்நாள், இன்று திருநர் மீதான வெறுப்பு, பாலியல் வன்கொடுமை, நிற வெறி மற்றும் சாதியம் போன்ற சமூகக் கொடுமைகளால் தூண்டப்படும் வன்முறைகள், சமூக ஒடுக்குமுறையால் தற்கொலைக்குத் தள்ளப்படுதல் போன்ற பல்வேறு வன்முறைக்கு உள்ளாகி மரணித்த திருநர்களின் நினைவாக உலகெங்கிலும் உள்ள திருநர் மக்களாலும் தோழமை அமைப்புகளாலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒருவகையில் உலகெங்கிலும் திருநர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் இது உணர்த்துகிறது. இந்நாளில் தாராவயும் இந்த நாளில் இந்திய திருநர் மக்களுக்கு இந்த வருடம் இந்நாள் பெரும் பதற்றத்துடனும் மன உளைச்சலுடனும் விடிந்தது. மாநிலங்களவையில் ‘திருநர் பாதுகாப்பு மசோதா’ தாக்கல் செய்யப் படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்ததே அதற்குக் காரணம். அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து எங்களில் பலருக்குத் தூக்கம் இல்லை. மிகவும் பிரச்னைக்குரிய இம்மசோதா, இந்தியா முழுவதிலும் இருக்கும் எல்லா திருநர் மக்களாலும் பல காரணங்களுக்காக எதிர்க்கப் பட்டாலும், தமிழச்சியாக என்னை நெருடிய கூடுதல் காரணம், இம்மசோதாவில் திருநங்கை என்ற பதத்துக்குப் பதிலாக அரவாணி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டு முற்போக்குச் சிந்தனையின் சான்றாக விளங்கிய அப்பதம், மதத்தை மையப்படுத்திய சித்தாந்தத்தால் அழிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தமிழகத்திலிருந்து எதிர்வினையாற்ற வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் நவம்பர் 24 அன்று வெளியான செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்ட சமூக நலத்துறை, வருகின்ற 2020 ஏப்ரல் மாதம் சென்னையில் நடத்தவிருக்கும் திருநங்கையர் தினம் குறித்த செய்திக்குறிப்பில், ஏற்கெனவே `திருநங்கையர்’ என்று இருந்த இடங்களில் அப்பதத்தை அழித்துவிட்டு கையால் `மூன்றாம் பாலினத்தவர்’ என எழுதப் பட்டிருந்தது குறித்த செய்தி அது.
தோழர் அப்பணசாமி மூலம் நர்த்தகி நட்ராஜ் அவர்களால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட ‘திருநங்கை’ என்ற இந்த வார்த்தை, பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் மூலம் தி.மு.க தலைவர் கலைஞர் காதுகளை அடைந்தது. அன்றைய முதல்வராக இருந்த அவர் 2006 தி.மு.க ஆட்சிக்காலத்தில் அதை அதிகாரபூர்வமாக அங்கீகரித்தார். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டாலும் இந்தச் சொல்லை மக்களி டத்தில் எடுத்துச்சென்றதிலும் முன்னிறுத்தியதிலும் திருநங்கைச் சமூகத்தின் பங்கு அளப்பரியது. குறிப்பாக, ஸ்மைலி வித்யாவின் தொடர் குரல் மிக முக்கியமானது. அவர் எழுதிய ‘அலி, அரவாணி, திருநங்கை’ என்ற கட்டுரை திருநர்களின் சமூக அங்கீகாரம், அதிகாரத்துக்கான போராட்டங்களுக்கு முன்னோடி. அரவாணி என்ற சொல்லை அவர் உடைத்த விதமும், திருநர் மீதான ஒடுக்குமுறைக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் உள்ள இணைப்புப் புள்ளிகளை வித்யா எடுத்து வைத்ததும் இன்றும் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.
இன்று திராவிட முற்போக்கு சமூகநீதிப் பார்வையின் அடையாளமாகவே மாறியிருக்கிறது இந்த வார்த்தை. திருநங்கை என்ற வார்த்தையின் மிக பெரிய பண்பு, அது திருநம்பி, திருநர் என்ற வார்த்தைகளுக்கு வித்திட்டதே. அதிலும் பாலின எல்லைகளைக் கடந்த திருநர் என்ற சொல் மிக முக்கியமானது. ‘FtoM (Female to Male)’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட டெல்லியைச் சேர்ந்த திருநம்பி ஒருவர், “உங்கள் மொழியில் இருப்பதைப்போல இப்படி ஒரு வார்த்தை எங்களிடம் இல்லையே’’ என்று ஆதங்கப் பட்டிருக்கிறார். கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும் மாற்றுப்பாலின மக்கள் திருநங்கை, திருநம்பி என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். தமிழ் மொழியின் சிறப்புக்கு இது மற்றுமொரு சான்றே ஆகும்.

சமூக, பொருளாதார அடிப்படையில் கடைநிலையில் இருந்த திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு ஊக்கியாக இந்த வார்த்தை இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு புராண கதாபாத்திரத்தின் நீட்சியாக, இந்து மதத்தின் கட்டமைப்புக்குள் சுருக்கப்பட்டிருந்த அரவாணி என்ற பதத்திலிருந்து திருநங்கை என்ற சொல் ஒரு பெரும் மாற்றத்தை முன்னெடுத்தது. இவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்ற சிந்தனையை மக்கள் மனதில் பதியவைத்தது. இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் அரவாணி என்ற சொல், எந்த ஒரு பாரம்பர்யமும் இல்லாத, 2002-ம் ஆண்டு அதிகாரி ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட வார்த்தை. திருநங்கையோ தமிழ் இலக்கிய மரபிலிருந்து (சீவகசிந்தாமணி) வந்தது.
இந்நிலையில் திருநங்கை என்ற பெயரை மூன்றாம் பாலினம் என்று தமிழக அரசு மாற்றியிருப்பதை எவ்வாறு புரிந்துகொள்வது என்ற குழப்பமே முதலில் எனக்கு வந்தது. என்னளவில் இதற்கு இரண்டு காரணங்களை மட்டுமே யூகிக்க முடிந்தது. முதல் காரணம் திருநங்கை என்ற சொல், கலைஞர் கருணாநிதி அவர்களின் சாதனையாக இருப்பதால் அதை அழிக்கும் முயற்சியாக இருக்கக்கூடும். மற்றொன்று இச்சமூகத்தை மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடுவதன் மூலம் அவர்கள் தங்களை ஆண் மற்றும் பெண் என்று அடையாளப்படுத்திக்கொள்வதிலிருந்து தடுத்து நிறுத்தலாம் என்ற எண்ணம். ஏனென்றால், திருநர் சமூக மக்களின் கோரிக்கை, தங்களை ஆண், பெண் அல்லது திருநர் என்று அடையாளப்படுத்தும் உரிமையைத் தங்களுக்கே வழங்க வேண்டும் என்பதே.
உச்ச நீதிமன்ற நல்சா தீர்ப்பின் சாரமும் அதுவே. அப்படியிருக்க மூன்றாம் பாலினம் என்று வகைப்படுத்துவது எங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பது மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதாகவும் அமைகிறது. பழமைவாத ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கும் இச்சொல் திருநர் மக்களை மட்டும் இழிவுபடுத்துவதாக இல்லை, பெண்களையும் இழிவுபடுத்துவதாகவே இருக்கிறது.
கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும் மாற்றுப்பாலின மக்கள் திருநங்கை, திருநம்பி என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.
‘திருநங்கை என்ற சொல்லை பொது சொல்லாகப் பயன்படுத்தும்போது அது திருநம்பிகளை ஒதுக்குவதாக அமைகிறது. எனவே, திருநர் என்ற பொதுச் சொல்லைப் பயன் படுத்துங்கள்’ என்ற எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் இப்படி ஒரு பிற்போக்கான சொல்லைப் பயன்படுத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

2008-ம் ஆண்டு திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைத்து இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கிய தமிழ்நாடு இன்று கல்வி வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு, திருநம்பி, இடையிலங்க(இன்டர்செக்ஸ்) மக்களின் தேவைகள் என முன்னோக்கிச் செல்லாமல் இப்படி பின்னோக்கிப் போய்க்கொண்டிருப்பது வருத்தமளிக்கும் விதமாகவே இருக்கிறது. திருநர் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றி எங்களை எல்லா விதத்திலும் மத்திய அரசு நசுக்கிக் கொண்டிருக்கும் வேலையில் ஒட்டுமொத்த மாற்றுப்பாலின மக்களின் பெருமையாக இருந்த திருநங்கை என்ற வார்த்தையைப் புறக்கணிப்பது, கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு துறைகளில் சாதித்துவரும் திருநர் மக்களின் முன்னேற்றத்துக்கு தடைபோடும் செயலாகவே படுகிறது. ஒருவேளை அரசாங்கத்தின் நோக்கமும் அதுதானோ என்னவோ?