இன்றைய காலகட்டத்தில் உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்டது என்று நிச்சயமாகக் கூறலாம். கடந்த சில ஆண்டுகளாக `டிஜிட்டல் இந்தியா' என்ற பெயர் திரும்ப திரும்ப நம் காதுகளில் விழுந்துகொண்டே இருக்கிறது. குறுஞ்செய்தி தொடங்கி கோடிக்கணக்கான பணப்பரிமாற்றங்கள் வரை அனைத்தும் தற்போது டிஜிட்டல் மூலமாகவே நடைபெறுகின்றன.
இந்த மாற்றங்களில் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் வரும் மே 31-ம் தேதிக்குள் UPI வசதி அறிமுகம் என்று தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

ரேஷன் கடைகளில் அறிமுகமாகும் UPI வசதி குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, ``கூட்டுறவுத் துறைக்குக்கு கீழ் சில ரேஷன் கடைகளும், சிவில் சப்ளைத் துறைக்கு கீழ் சில ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. இப்படி, தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறைக்கு கீழ் சுமார் 34,000 ரேஷன் கடைகள் இருக்கின்றன.
தற்போது கூட்டுறவுத்துறை பதிவாளர் ஆணைப்படி, கூட்டுறவு துறைக்குக் கீழ் இயங்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மே 31-ம் தேதிக்குள் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஏற்கெனவே கூட்டுறவு துறைக்குக் கீழ் செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட், கேஸ் ஏஜென்சி, பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் தனியார் வங்கிகள் மூலம் UPI வசதி வந்துவிட்டது.

கூட்டுறவுத் துறைக்குக் கீழ் 23 வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் UPI interface-ஐ ஏற்படுத்திவிட்டால் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கி ரேஷன் கடைகள் வரை UPI பரிமாற்றம் எளிதாகிவிடும். இதுவரை 18 வங்கிகள் இந்த வசதியை ஏற்படுத்திவிட்டன. மீதி 5 வங்கிகளிலும் நாளை செயல்பாட்டுக்கு வந்துவிடும். அதன்பிறகு கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் UPI வசதியை அறிமுகப்படுத்த எந்தவொரு தடையும் இருக்காது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு துறையில் 100 சதவிகிதம் on go என்ற UPI வசதி வந்துவிட்டது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த இணை பதிவாளர்களிடம் UPI வசதி ஏற்படுத்த தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.