
நாடாளுமன்ற நடவடிகைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிற காரணத்தால், பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பா.ஜ.க-காரர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இந்த பட்ஜெட் பொதுமக்களுக்கு மட்டுமல்ல, பா.ஜ.க-வினருக்குமே ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது!

பா.ஜ.க-வின் ஆதரவாளர்களில், கணிசமான எண்ணிக்கையிலிருக்கும் நடுத்தர வர்க்கத்தினர், வருமான வரி விலக்கில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ‘வருமான வரி விலக்கு ரூ.5 லட்சம் அளவுக்காவது உயர்த்தப்படும், 80சி பிரிவின் கீழ் அளிக்கப்படும் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 1.5 லட்ச ரூபாயிலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்படும்’ என எதிர்பார்த்தனர். அவர்களுக்கும் ஏமாற்றமே எஞ்சியிருக்கிறது.
கொரோனா மூன்றாவது அலையில் நாடு சிக்கித்தவிக்கும் இந்த நேரத்தில், சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சுகாதாரத்துறைக்குக் கடந்த ஆண்டைவிட சுமார் 80 கோடி ரூபாய் மட்டுமே இந்த ஆண்டு உயர்த்தப்பட்டிருக்கிறது. ‘தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் சேர்த்துப் பயனளித்துவரும் ஜிப்மர் மருத்துவமனைக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்’ என நானும், புதுச்சேரி எம்.பி வைத்திலிங்கமும் தொடர்ந்து வலியுறுத்திவந்தோம். இந்த ஆண்டு ஜிப்மருக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட 340 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 1,340 கோடியாக இருந்தாலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 4190 கோடி ரூபாயோடு ஒப்பிட்டால், அதில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை என்பது தெரியும்.

கல்வித்துறைக்கான ஒதுக்கீட்டை ஜி.டி.பி-யில் 6%-ஆக உயர்த்துவோம் என்று தேசிய கல்விக் கொள்கையில் அறிவித்திருந்தார்கள். ஆனால் 3% என்பதாகவே அது தொடர்கிறது. ஏழை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்துக்குக் கடந்த ஆண்டு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தார்கள். இந்த ஆண்டு அது 10 ஆயிரத்து 233 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 1,250 கோடி ரூபாய் இதில் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களை இது மேலும் அதிக அளவில் பாதிக்கும்.
தலித் மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான ஒதுக்கீடு 1,450 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் 9-10 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்புக்கான ஒதுக்கீட்டில், 225 கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி பிரிவினரின் நலன்களுக்கான சமூகநீதி அமைச்சகத்துக்கு, கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 517 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட பட்ஜெட்டில், அது 10 ஆயிரத்து 180 கோடியாகக் குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 1,700 கோடி மட்டும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் சொற்பமே ஆகும்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றபோது, ‘விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம்’ என்று பிரதமர் மோடி ஆரவாரமாக அறிவித்தார். ஆனால், அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இந்த பட்ஜெட்டில் இல்லை. மாறாக, பயிர் இன்ஷூரன்ஸ் திட்டத்துக்காக, கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையைவிட இந்த ஆண்டு 500 கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையாக இருக்கும், குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்பதற்கான அறிவிப்பும் இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றமே.
‘அக்டோபர் 1-ம் தேதி முதல், எத்னால் கலக்காத எண்ணெய் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படும்’ என நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். இதன் பொருள், டீசல் மீது 2 ரூபாய் வரி விதிக்கப்படும் என்பதே ஆகும். ஏனென்றால், டீசலோடு எத்னாலைக் கலப்பதற்கான முயற்சி, சோதனை அளவிலேயே உள்ளது. சர்வதேசச் சந்தையில், கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கும் என யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், டீசல் விலை மீது 2 ரூபாய் கூடுதல் வரி விதிப்பது அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வுக்கே வழிவகுக்கும்.
இந்தியா எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால், வேலையின்மைதான். கொரோனா தொற்றுக் காலத்தில், கோடிக்கணக்கானவர்கள் வேலையை இழந்துள்ளனர். வளரும் நாடுகளான பங்களாதேஷ், மெக்ஸிகோ, வியட்நாம் ஆகிய நாடுகளைவிட இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்னை மிக மிக அதிகமாக இருக்கிறது. சுமார் ஐந்தரைக் கோடிப் பேர் வேலை தேடி அலைகின்றனர். கிராமப்புறத்தில் சுமார் இரண்டரைக் கோடிப் பேர் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பதிவுசெய்திருக்கின்றனர். படித்த கிராமப்புற இளைஞர்களுக்கும் பயன்படும்விதமாக நூறு நாள் வேலைத்திட்டத்தை விரிவாக்க வேண்டும். ஆனால், வேலையின்மைப் பிரச்னையைத் தீர்ப்பது குறித்து இந்திய அரசுக்கு எந்தவித அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான், நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை வெகுவாகக் குறைத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், 98,000 கோடி ரூபாய் அதற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 73,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் இப்போது பதிவுசெய்துகொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் 100 நாள் வேலை கொடுக்க வேண்டும் என்று சொன்னால், 2.66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் கால் பகுதி அளவுக்குத்தான் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கிராமப்புறங்களில் இருக்கும் இன்னொரு முக்கியமான பிரச்னை சத்துக் குறைபாடு. இந்தியாவிலிருக்கும் பெண்களில், 80 சதவிகிதம் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், குழந்தைகளின் வளர்ச்சியும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அரசு மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் 13 மாநிலங்களில் குறை வளர்ச்சி கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஏழு மாநிலங்களில் ‘அதைவிடவும் மோசமான’ அளவுக்கு ஆரோக்கியமற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இதைத் தடுப்பதற்காகத்தான் அங்கன்வாடிகள் மூலமாகச் சத்துணவு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்துக்கான நிதியும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா காரணமாக, நேரடியாகப் பள்ளிகளுக்குச் செல்லாமல் கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டிஜிட்டல் வழியாகப் பாடம் கற்பிப்பது, மேல்தட்டு வர்க்கக் குழந்தைகளுக்கே போதுமானதாக இல்லை எனும்போது, அத்தகைய கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாத கிராமப்புறக் குழந்தைகளுக்கு அது போய்ச் சேர்வதற்குச் சாத்தியமில்லை. இதற்கான தீர்வு, கல்வித் தொலைக்காட்சிகளை உருவாக்குவது அல்ல. கிராமப்புறங்களில் இருக்கிற வேலையற்ற படித்த இளைஞர்களை இதற்காகப் பயன்படுத்தி, நேரடியாக மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்க அரசு முதலீடு செய்ய வேண்டும். ஆனால், அதைப் பற்றிய எந்தவோர் அக்கறையும் இந்த பட்ஜெட்டில் இல்லை.
‘பட்ஜெட்டில் பழங்குடி மக்களுக்காக, அவர்களது மக்கள்தொகைக்கேற்ப, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்ற நடைமுறை, 5-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எஸ்.சி பிரிவினருக்கு அப்படி ஒதுக்க வேண்டும் என 6-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் முடிவுசெய்தார்கள். எஸ்.சி., எஸ்.டி பிரிவினரின் மக்கள்தொகைக்கு ஏற்ப, எப்படி பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், அந்தத் தொகையை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்றெல்லாம் தெளிவான விதிகள் வகுக்கப்பட்டன. தலித் மக்களுக்கான திட்டம், ஷெட்யூல்டு கேஸ்ட் சப் பிளான் (எஸ்.சி.எஸ்.பி) என அழைக்கப்பட்டது. பாஜக அரசு வந்ததும், திட்ட கமிஷன் கலைக்கப்பட்டு, `நிதி ஆயோக்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது, இந்தத் திட்டத்தை ‘டெவலப்மென்ட் ஆக்ஷன் பிளான் ஃபார் எஸ்சி’ (டிஏபிஎஸ்சி) எனப் பெயர் மாற்றம் செய்தது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் கணக்கிட்டு நிதி ஒதுக்க வேண்டும் என அதுவும் பரிந்துரைத்தது. ஆனால், பா.ஜ.க அரசு அவ்வாறு எந்த ஆண்டிலும் ஒதுக்கவில்லை. பட்ஜெட்டில் எஸ்.சி பிரிவினருக்கு 16.6% ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு 8.8% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் அறிவிப்பதற்கு முன்பு, நிதியமைச்சர் பங்கேற்கும் அல்வா கிண்டும் சடங்கு ஒன்று நடைபெறும். இந்த ஆண்டு கொரோனாவால் அது நடைபெறவில்லை. ஆனால், பட்ஜெட் உரையின் மூலம் அந்தக் குறையை நிதியமைச்சர் தீர்த்துவிட்டார்!