தி.மு.க அரசைக் கண்டித்து, கடந்த டிசம்பர் 17-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியிருந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ``அ.தி.மு.க ஆட்சி மீண்டும் வரும். அன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சட்டையைக் கழற்றுவோம்" எனக் காட்டமாகப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், இன்று விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம் பகுதியில் அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்குப் பணி ஆணை வழங்கிய பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், சண்முகத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், ``இந்தியத் துணைக்கண்டத்திலேயே மிகச் சிறந்த தலைவராக நம் தமிழக முதல்வர் திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவருடைய பெயரை உச்சரிப்பதற்குக்கூட தகுதி இல்லாதவர் சி.வி.சண்முகம். அப்படியிருக்கையில் தரம் தாழ்ந்த விமர்சனங்களைத் தமிழக முதல்வர்மீது அவர் முன்வைத்துக்கொண்டிருக்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால்... சூரியனைப் பார்த்து 'ஏதோ' என்று கூறுவார்களே... அது போன்று இருக்கிறது அவருடைய செயல்.
கடந்த காலங்களிலே தி.மு.க தலைவரைத் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததன் எதிரொலியாகத்தான் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதி மக்கள் சி.வி.சண்முகத்தின் டவுசரை கழற்றினார்கள். ஆனால், சி.வி.சண்முகமோ 'அரசுத்துறை அதிகாரிகளின் டவுசரை கழற்றுவேன்' என்று கூறிக்கொண்டிருக்கிறார்.

தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்வதற்காகவே இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார் அவர். அரசியலிலே எப்படியெல்லாம் செயல்படக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சி.வி.சண்முகம். அரசியலிலே அவர் ஒரு கரும்புள்ளி" என்றார் காட்டமாக.