Published:Updated:

பிறவி இதயக்குறைபாடு பதிவேடு: தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் தொடங்க பணிகள் தீவிரம்!

திறப்புவிழா | விருதுநகர்

தமிழ்நாட்டில் முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 59.02 லட்சம் மதிப்பில் பிறவி இதயநோய் பதிவேடு உருவாக்கவும், இளம்சிசு பிறவி இதயநோயைக் கண்டறிவதை வலுப்படுத்தவும் பணிகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Published:Updated:

பிறவி இதயக்குறைபாடு பதிவேடு: தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் தொடங்க பணிகள் தீவிரம்!

தமிழ்நாட்டில் முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 59.02 லட்சம் மதிப்பில் பிறவி இதயநோய் பதிவேடு உருவாக்கவும், இளம்சிசு பிறவி இதயநோயைக் கண்டறிவதை வலுப்படுத்தவும் பணிகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திறப்புவிழா | விருதுநகர்

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 6 தளங்களுடன் 500 படுக்கை மற்றும் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் புதிதாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதுதவிர பெண் பயிற்சி மருத்துவர்கள் கட்டடம், மருத்துவர்கள் மற்றும் செவிலியர் விடுதி கட்டடங்கள், புதிய மருத்துவ அலுவலகக் குடியிருப்புக் கட்டடங்கள், அமரர் உடல்கூறு ஆய்வக கட்டடங்கள், நவீன சமையற்கூடம் என மொத்தம் ரூ.168.70 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் திறந்துவைத்தார்.

இதுதவிர மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பணி நிறைவுற்ற மருத்துவ சேவை கட்டடங்களை அவர் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர்
அமைச்சர்

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ``அனைவருக்குமான மருத்துவச்சேவை, கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை கண்டறிதல், கருத்தடை சாதனங்கள் பொருத்துதல், சுகப்பிரசவம் உள்ளிட்ட சேவைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சிவகாசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.49.70 மதிப்பில் நவீன உபகரணங்களுடன் கூடிய சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் ஒருங்கிணைந்த அவசர ஆய்வகச் சேவைகள் ரூ.10.22 கோடி மதிப்பில் வரவுள்ளது. புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்கும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், தற்போதைய புற்றுநோய் பராமரிப்பு சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக ரூ.50.55 லட்சம் மதிப்பில் திட்டம் தொடங்கயிருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.99.09 கோடி மதிப்பீட்டில் 28 அறிவிப்புகள் மூலம் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சிவகாசி அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு ரூ.36.98லட்சம் மதிப்பில் சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கு உயிர்காக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

விழா
விழா

எம்.புதுப்பட்டி மற்றும் நரிக்குடி ஆகிய இடங்களில் ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய வட்டார பொது சுகாதார அலகு கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் ரூ.2.27 கோடி மதிப்பில் 7 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளும், தையல்பட்டி மற்றும் ஜமீன் கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.30 லட்சம் மதிப்பில் ரத்த சேமிப்பு அலகுகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சிவகாசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.49.70 லட்சம் மதிப்பில் நவீன உபகரணங்களுடன் கூடிய சுகாதார ஆய்வகக் கட்டடப் பணிகள் முடியவடைய உள்ளது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 59.02 லட்சம் மதிப்பில் பிறவி இதயநோய் பதிவேடு உருவாக்கவும் மற்றும் இளம்சிசு பிறவி இதயநோய் கண்டறிவதை வலுப்படுத்தவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சிறப்பான மருத்துவ சேவையினை வழங்குவதற்காக தமிழகத்தில் 708 புதிய மருத்துவமனைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 2 சிவகாசி மாநகராட்சியிலும், 3 விருதுநகர் நகராட்சியிலும், 1 திருவில்லிபுத்தூர் நகராட்சியிலும், 1 அருப்புக்கோட்டை நகராட்சியிலும் என மொத்தம் 7 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன‌" எனப் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்
கலந்து கொண்டவர்கள்

இதையடுத்து அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழகத்தில் 2 லட்சத்து 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள், 40 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூஊசிகள் என மொத்தம் 3 லட்சம் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேவையை பொறுத்து தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு தற்போது மூக்கின் வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக இந்த தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். அதே வேளையில் மூக்கின் வழியாக செலுத்தக்கூடிய இந்த தடுப்பூசியையும் தமிழக அரசின் மூலம் கோரிக்கை வைக்கப்பெற்று விரைவில் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கான அரசாணைகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் வேறு எந்தெந்த பகுதிகளுக்கு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சி கல்லூரிகள் தேவை என்பதை கேட்டு அறிந்துள்ளார். எனவே தேவையான இடங்களில் பல் மருத்துவக் கல்லூரியும், செவிலியர் பயிற்சி கல்லூரியும் விரைவில் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 12 சிறப்பு பிரிவுகள் செயல்பாட்டுக்கு வருகிறது. ’இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48’ திட்டம் தனியார், அரசு மருத்துவமனைகள் உட்பட 670 மருத்துவமனைகளில் தமிழகம் முழுக்க செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர்பிழைத்துள்ளனர். தமிழக அரசு இதற்காக 121 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுக்க தேவையுள்ள இடங்களில் 1021 மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்" என்றார்.