Published:Updated:

``உயர் சாதியினருக்கு வருமானச் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தியது ஏன்?'' - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்!

10% இட ஒதுக்கீடு

''பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்காக 10% இட ஒதுக்கீடு, தமிழகத்தில் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மத்திய அரசு கொடுத்துவரும் 10% இட ஒதுக்கீட்டையும் பெறமுடியாத வகையில், 'வருமானச் சான்றிதழ்' தராமல் தடை ஏற்படுத்துகிறது தமிழக அரசு'' என்கிறது அகில பாரத பிராமணர் சங்கம்.

Published:Updated:

``உயர் சாதியினருக்கு வருமானச் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தியது ஏன்?'' - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்!

''பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்காக 10% இட ஒதுக்கீடு, தமிழகத்தில் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மத்திய அரசு கொடுத்துவரும் 10% இட ஒதுக்கீட்டையும் பெறமுடியாத வகையில், 'வருமானச் சான்றிதழ்' தராமல் தடை ஏற்படுத்துகிறது தமிழக அரசு'' என்கிறது அகில பாரத பிராமணர் சங்கம்.

10% இட ஒதுக்கீடு
'உயர் சாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறவிடாமல் தமிழக அரசு தடுக்கிறது' என்றதொரு குற்றச்சாட்டை சுமத்தி, நீதிமன்றப் படியேறியிருக்கிறார்கள் 'அகில பாரத பிராமணர் சங்க'த்தினர்.

உயர் சாதியைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நாடு முழுக்க அமலில் உள்ளது. அந்தவகையில், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வருமானத்துக்குக் கீழாக உள்ள, உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் இந்த இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற முடியும். அதாவது, தான் உயர் சாதியைச் சேர்ந்தவர் என்பதைக் குறிக்கும் சாதிச் சான்றிதழோடு, 8 லட்சம் ரூபாய்க்குக் கீழாக ஆண்டு வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான 'வருமானச் சான்றிதழ்' மற்றும் 'சொத்துச் சான்றிதழ்'களை வைத்திருப்போர் இந்த 10 சதவிகித இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டத்திருத்த மசோதாவை மத்திய பா.ஜ.க அரசு, மக்களவையில் கொண்டுவந்தபோது நாடு முழுக்கக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், 'இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டுவரப்பட்ட ஏழ்மை ஒழிப்புத் திட்டம் அல்ல. அது இந்நாட்டு குடிமக்களுக்கான சமத்துவத்தை - சமூக நீதியை நிலைநாட்டுகிற சட்டம்.

இதுநாள்வரை, சாதியின் பெயரால், கல்வி - வேலைவாய்ப்புகளில் ஆண்டாண்டு காலமாக உரிமை மறுக்கப்பட்டு வந்த மக்கள், இனிவரும் காலங்களில் தங்கள் பிரதிநிதித்துவ உரிமையை நிலைநாட்டும்விதமாக இந்திய அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் 'இட ஒதுக்கீடு உரிமை' கொண்டுவரப்பட்டது. இதன்படி, நாட்டிலுள்ள ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோர் குறிப்பிட்ட விகிதத்தில், அரசியல் அதிகார இடங்களைப் பெற்றும்வந்தனர்.

ஆனால், மத்திய பா.ஜ.க அரசு, இப்போது திடீரென பொருளாதாரத்தை அளவுகோலாக வைத்து உயர் சாதியினருக்கும் 10 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டுவருவதென்பது, இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்தையே தகர்த்தெறியும் அம்சம்' என்றுகூறி எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், 'நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் உரிய வருமானமின்றி வறுமைக் கோட்டுக்குக் கீழே சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில், மாதம் 66 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கக்கூடிய உயர் சாதி குடும்பத்தினரைக்கூட வறுமையில் வாடுவதாகச் சொல்லி, அவர்களுக்காக 10 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொடுக்கிறோம் என்று சொல்வது எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாத செயல்' என்று, சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

பொருளாதார இட ஒதுக்கீடு
பொருளாதார இட ஒதுக்கீடு
ஹாசிப்கான்

ஆனாலும்கூட 'உயர் சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத் திருத்தம்' மத்திய பா.ஜ.க அரசின் பெரும்பான்மை ஆதரவோடு சட்டமாக்கப்பட்டு, நாடு முழுக்க நடைமுறைக்கும் வந்தது. மாநிலங்களைப் பொறுத்தவரையில், இந்த 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் உரிமை அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்கப்பட்டது.

ஏற்கெனவே இந்தியாவில், எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, சமூக நீதி விஷயத்தில் முற்போக்கு மாநிலமாகத் திகழ்ந்துவருகிறது தமிழ்நாடு. எனவே, தமிழ்நாட்டில் 10 சதவிகித இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவிகித இடஒதுக்கீட்டுப் பலனைப் பெறுவதற்காக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் சாதியினருக்கு வழங்கப்பட்டு வந்த 'வருமானச் சான்றிதழை'யும் திடீரென தமிழக அரசு நிறுத்திவைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்துப் பேசுகிற, 'அகில பாரத பிராமணர் சங்க' தலைவர் குளத்துமணி, ''பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கென 10 சதவிகித இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான மாநிலங்களும் இதைக் கடைப்பிடித்து வருகின்றன. ஆனாலும் நமது மாநிலத்தில் இந்த இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை. எனவே, 'தமிழ்நாட்டிலும் 10 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொடுக்கவேண்டும்' என்று ஏற்கெனவே நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில்தான், 'பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினர்' என்று எங்களுக்கு இதுநாள் வரையிலும் சான்றிதழ் கொடுத்துவந்ததையும் நிறுத்திவிட்டது தமிழக அரசு. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு கொடுக்காதவர்கள் இப்போது, 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போன்று, உயர் வகுப்பினருக்கு 'வருமானம் மற்றும் சொத்துச் சான்றிதழ்' ஆகியவற்றை வழங்கிட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு மற்றும் மற்ற மாநிலங்களில் கிடைத்துவரும் 10 சதவிகித இட ஒதுக்கீட்டையும் நாங்கள் பெற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. 10 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலமாக மத்திய அரசின் பணி வாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளைப் பெற்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்போடு தயார்நிலையில் காத்திருந்த நாங்கள் மிகப்பெரிய ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறோம்'' என்று வேதனைப்பட்டவர் தொடர்ந்து பேசும்போது,

''உயர் வகுப்பினர் என்று சொல்லக்கூடிய இந்தப் பிரிவில், வெறுமனே ஐயர்கள் மட்டுமே உள்ளனர் என்பதுபோன்ற ஒரு கருத்தை மக்கள் மத்தியில் உருவாக்கிவருகின்றன இங்குள்ள அரசியல் கட்சிகள். ஏனெனில், எங்களைப்போல் வேறு யாரையும் நாட்டில் அப்படி எளிதாகச் சொல்லிவிட முடியாது அல்லவா...! உண்மை என்னவென்றால், கவுண்டர், நாயர், நாயக்கர், பிள்ளைமார், ரெட்டியார், சௌராஷ்டிரா உள்ளிட்ட 72 சாதியினர் இந்த உயர் வகுப்பினர் பிரிவில்தான் இருக்கிறார்கள். எனவே, இந்த 72 சாதியினருக்கும் சேர்த்துத்தான் இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதே தவிர... இது ஐயர்களுக்கு மட்டுமேயானது அல்ல'' என்றார் தெளிவாக.

குளத்துமணி - புளியரை ராஜா
குளத்துமணி - புளியரை ராஜா

'தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க'த்தின் மாநிலத் தலைவர் புளியரை ராஜா, இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசியபோது, ''வங்கி, அஞ்சல், ரயில்வே என மத்திய அரசின் பணிகளில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்றாலும்கூட, பொருளாதார ரீதியாக நான் பின் தங்கியவன் என்ற 'வருமானச் சான்றிதழை' மாநில அரசுக்கு உட்பட்ட தாசில்தார்கள்தான் கொடுத்தாக வேண்டும். தமிழ்நாட்டிலோ, திடீரென இந்த மாதம் 4-ம் தேதியிலிருந்து வருமானச் சான்றிதழ் கொடுப்பதையே ரத்து செய்துவிட்டார்கள்.

மத்திய அரசு கொண்டுவந்த ஒரு சட்டத்தை, மாநில அரசு செய்யத் தயங்குகிறது என்றால், உயர் வகுப்பினருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க தமிழக அரசு தயங்குகிறது என்றுதானே அர்த்தம். தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும் எங்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே 2 முறை தமிழக முதல்வரை நேரில் சந்தித்துக் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனாலும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை... 'பார்க்கலாம்' என்ற பதில்தான் கிடைத்துவருகிறது. இந்த நிலையில், ஏற்கெனவே கொடுத்துவந்த வருமானச் சான்றிதழையும் கொடுக்காமல் நிறுத்திவைத்தால், நாங்கள் மத்திய அரசு மற்றும் வேறு மாநிலங்களின் வழியாகக் கிடைக்கப்பெறும் இட ஒதுக்கீட்டுச் சலுகையையும் பெற முடியாமல் போய்விடுகிறது'' என்றார் வருத்தமாக.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

இந்த விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன, வருமானச் சான்றிதழ் கொடுப்பது ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட கேள்விகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் முன்வைத்தோம்,

''பொதுவாக வருமானம் மற்றும் சொத்துச் சான்றிதழ் வழங்குவதென்பது தெளிவான ஆய்வுகளின் அடிப்படையிலும் வழிகாட்டுதல்கள் அடிப்படையிலும்தான் வழங்கப்பட வேண்டும். இந்த நிலையில் தற்போது '10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்காக' வருமானம் மற்றும் சொத்துச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்கிற புதிய நடைமுறை வருகிறபோது, இதுகுறித்து முழுமையான ஆய்வுகள் செய்யவேண்டியிருக்கிறது. ஏனெனில், இட ஒதுக்கீடு விவகாரங்கள் அனைத்தும் அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளாக இருக்கின்றன. எனவே, இதுகுறித்து தெளிவான ஆய்வுகளைச் செய்தபின்னரே சான்றிதழ்களை வழங்கமுடியும் என்பதால், தற்காலிகமாகப் பணிகளை நிறுத்திவைத்திருக்கிறோம். விரைவில், தமிழக அரசின் சார்பில், வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, தெளிவான வழிகாட்டுதலின்படி மீண்டும் சான்றிதழ் வழங்கும் பணி தொடரும்!'' என்றார்.