Published:Updated:

மக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன? #DoubtOfCommonMan

ரிப்பன் பில்டிங்

இந்தியாவில் மட்டும், அரசு அதிகாரிகள் மக்களிடத்தில் அதிகாரத்தோடு நடந்துகொள்வது ஏன்?

Published:Updated:

மக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன? #DoubtOfCommonMan

இந்தியாவில் மட்டும், அரசு அதிகாரிகள் மக்களிடத்தில் அதிகாரத்தோடு நடந்துகொள்வது ஏன்?

ரிப்பன் பில்டிங்

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் சிரமமாக நினைக்கும் ஒரு விஷயத்தைச் செய்கிறீர்களா, இல்லை அரசு அலுவலகம் சென்று ஒரு சான்றிதழ் வாங்கி வருகிறீர்களா? என்று கேட்டால் சற்றும் தாமதமில்லாமல், அந்தக் கடுமையான வேலையைச் செய்வதற்குக் தயாராகி விடுவோம். அந்தளவுக்கு அரசு அலுவலகங்களுக்குச் சென்று ஒரு வேலையை முடித்து வருவது என்பது மலைப்பான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இல்லை அப்படியான ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

அரசு அலுவலகம்
அரசு அலுவலகம்
படம்: கே.ஜெரோம்

மக்களுக்காக இயங்கக்கூடிய அரசு அலுவலகங்களுக்கு, மக்கள் சென்று வரவே அச்சப்படக்கூடிய சூழல் நிலவுகிறது. காரணம் சொல்லப்படாத தாமதம்.. `அங்கே போ, இங்கே போ' என்கிற தேவையற்ற அலைக்கழிப்புகள்... அவர்கள் கேட்கின்ற தகவல்களை எல்லாம் சரியாகத் தந்தாலும், பணம் இல்லாமல் அணுவும் அசையாத ஒரு அமைப்புமுறை.

இது எல்லாவற்றையும்விட அதி உச்சமான பிரச்னையாக இருப்பது , `போ, வா' என மரியாதை இல்லாமல் அதிகாரிகள் மக்களை ஒருமையில் அழைப்பதுதான். எல்லோருமே அப்படியா என்றால் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் என்பதே நிஜம்.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் நடராஜன் என்ற வாசகர், இந்தியாவில் மட்டும் ஏன் அதிகாரிகள் பொதுமக்களை ஒருமையில் அழைக்கிறார்கள், இதை மாற்ற முடியாதா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கான காரணம் என்ன, தீர்வுகள் என்ன?
மக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன? #DoubtOfCommonMan

``அரசு வேலையில் இருக்கிறோம் என்கிற இறுமாப்பும் நம்மை யாரும் எதுவும் செய்யமுடியாது என்கிற தைரியமும்தான் அரசு அதிகாரிகளை இப்படி நடந்துகொள்ளச் செய்கிறது'' என்கிறார், ஓய்வுபெற்ற அரசு அதிகாரியும் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஜெ.கணேசன்.

அரசு அலுவலகம்
அரசு அலுவலகம்

``யாரையும் எடுத்தெறிந்து பேச, மரியாதைக் குறைவாக நடத்த அரசு வேலையை கேடயமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் அவர்களின் பணிப்பாதுகாப்புதான். அவ்வளவு எளிதாக அரசுப் பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கிவிட முடியாது என்கிற தைரியம்தான்.

சம்பளமும் அதிகம். அவர்களின் வாழ்வியல்முறையும் உயர்ந்துவிடுகிறது. அதனால், எளிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறுகிறார்கள். மரியாதை கொடுக்க அவசியமில்லை என நினைக்கிறார்கள். நாம் மக்களுக்காகத்தான் வேலை செய்கிறோம், மக்களின் வரிப்பணத்தில்தான் சம்பளம் வாங்குகிறோம் என்கிற எண்ணம் துளியளவும் இல்லை. தங்களின் கடமை என்ன என்பதையே மறந்துவிட்டார்கள். ஒரு சிலர்தான் மக்களை மரியாதையாக நடத்துகிறார்கள்.

முன்பெல்லாம் அரசு அதிகாரிகள் என்றால் மக்கள் நல்ல மரியாதை கொடுப்பார்கள். இப்போது அது சுத்தமாக இல்லை. அதற்கு அதிகாரிகள் நேர்மையாக நடந்துகொள்ளாததும் மக்களை மரியாதையாக நடத்தாததும்தான் காரணம். அதனால்தான், அரசுப் பணியாளர்கள் ஏதாவது போராட்டம் நடத்தினால் மக்களின் ஆதரவு கிடைப்பதில்லை.

மக்கள் என்றில்லை, ஏற்கெனவே அரசுப் பணியில் இருந்தவர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அரசு அலுவலங்களுக்குச் சென்றால்கூட பணம் வாங்காமல் எதுவும் செய்யமாட்டார்கள். மரியாதையாக நடத்தமாட்டார்கள். எல்லாம் பதவியில் இருக்கிறோம் என்கிற அதிகார போதைதான்.'' என்கிறார் கணேசன்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

பொதுவாக அரசு வேலையின் முக்கியத்துவம் குறித்துப் பேசும்போது, பணிப்பாதுகாப்பு என்பதுதான் அதில் முதன்மையானதாக இருக்கும். இன்று பொறியியல் பட்டதாரிகள் முதல் பலர் அரசு வேலைகளுக்கான தேர்வெழுதுவதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள். காரணம், தனியார் நிறுவனங்களில் செய்யும் பணி என்பது நிரந்தரமில்லாததாக மாறிவிட்டது. எப்போது வேண்டுமேனாலும் வேலையை விட்டு நீக்கலாம் என்கிற சூழலே நிலவுகிறது.

இந்தியாவில், கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய 90 லட்சத்துக்கும் மேலானவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளை அரசு அலுவலகங்களில் வேலையை விட்டு நீக்கப்பட்டவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். அப்படியே நீக்கப்பட்டிருந்தாலும் அது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கும்." என்கிறார் கணேசன்.

மக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன? #DoubtOfCommonMan

இதற்கு என்ன காரணம், அரசு வேலைகளுக்கு இவ்வளவு அதிகாரங்கள் கிட்டியது எப்படி? விளக்குகிறார் பாடம் நாராயணன்

``வெள்ளைக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கிவிட்டோம். பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி மன்றம் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தி ஜனநாயக வழியில் அதற்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்கிறோம். அந்தப் பிரதிநிதிகள் சொல்லும் வேலைகளைச் செயல்படுத்த, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தாசில்தார் போன்ற அரசுப் பதவிகள் இருக்கின்றன. இந்த நிர்வாக முறை என்பது பிரிட்டிஷ் ஆட்சியில், மகாராணிக்காக உருவாக்கப்பட்டது.

மக்களை அடிமைப்படுத்தி, அவர்களிடமிருந்து வரி வசூல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட பதவிகள்தான் இவையெல்லாம். ஆனால், சுதந்திரம் கிடைத்த பிறகும், புதிய நிர்வாக முறையை உருவாக்காமல், அதே ஆண்டான் அடிமை நிர்வாக முறைதான் பின்பற்றப்படுகிறது. தபால்துறை, ரயில்வே துறை, காவல்துறை என அனைத்துத் துறைகளிலும் பழைய நிர்வாக முறைதான் பின்பற்றப்படுகிறது. காவல் சட்டங்கள் கூட சிப்பாய்க் கழகத்தின்போது உருவாக்கப்பட்ட சட்டங்கள்தான்; அவைதாம் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

பாராளுமன்றத்தில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம்தான் இருக்கிறது. அவருக்குக் கீழே பணியாற்றும் ஊழியர்கள், மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் பதில் சொன்னால் போதும், மக்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆண்டான்- அடிமை முறை இருந்தது. ஆட்சி செய்தவர்கள், மக்களை பயனாளர்களாகப் பார்த்தார்கள். ஆனால் தற்போது இருப்பது ஜனநாயக முறை, இங்கே மக்கள் பங்குதாரர்கள். ஆனால், பழைய நிர்வாக முறையைப் பின்பற்றுவதால், நாம் என்னதான் வாக்குச் செலுத்தி நமக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்தாலும், இன்னும் ஆண்டான் அடிமை முறைதான் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மக்கள் அடிமையாகத்தான் வாழ்ந்து வருகிறோம்.

இந்த நிர்வாக முறையை உருவாக்கிய, இங்கிலாந்து உட்பட எல்லா நாடுகளிலும், இது தற்போது கடைப்பிடிக்கப்படுவதில்லை. நம் நாட்டில் மட்டும்தான் நடைமுறையில் இருக்கிறது. அதனால்தான், மாவட்ட ஆட்சித் தலைவர் முதல் கீழ்நிலைப் பணியாளர்கள் வரை அதிகாரமிக்கவர்களாக இருக்கிறார்கள். முதல்வர் நினைத்தால் கூட ஒரு பணியாளரை எளிதாக வேலையை விட்டு நீக்கிவிடமுடியாது.

மாதத்துக்கு, வாரத்துக்கு ஒரு நாள் மனு கொடுக்கும் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டான் - அடிமை ஆட்சிமுறையில்தான் மனு கொடுக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் அது தேவையில்லாத ஒன்று. இதைத் தடுப்பதற்காகத்தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதுவும் தற்போது ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது.

மனு கொடுத்தல்
மனு கொடுத்தல்

இந்த நிர்வாக முறையில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என சட்ட ஆணையம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற பதவிகளை நீக்கவேண்டும் எனவும் பலமுறை பேசப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நம் பிரதிநிதிகளை வாக்குச் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், அரசு அதிகாரிகளை அப்படி மாற்றமுடியாது. அதனால்தான் மக்களை மரியாதை இல்லாமல் நடத்துகிறார்கள். ஊழல் செய்து கொழிக்கிறார்கள்.

தற்போது நடைமுறையில் இருக்கும், ஆண்டான் அடிமை நிர்வாக முறையை மாற்றாமல் நாம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது'' என்கிறார் பாடம் நாராயணன்.

நிர்வாகச் சீர்திருத்தம் என்பது என்ன, என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்?

`` மக்களிடம் இருந்து குறைகளைக் கேட்டறிந்து அதைச் சட்டமாக்கி சரிசெய்யும் நிர்வாக முறையாக இல்லாமல் மேலிருந்து வரும் உத்தரவுகளை நிறைவேற்றும் வகையில்தான் இங்கு நிர்வாகம் இருக்கிறது. அதனால்தான், மக்களிடமிருந்து கோரிக்கைகளை கருணையோடு கேட்டுக்கொள்ளும் பண்பு எந்த அரசு அலுவலகங்களிலும் இல்லை. கீழிருந்து மேலான ஒரு நிர்வாகச் சீர்திருத்த முறையைக் கொண்டுவர வேண்டும்.

ஒரு வேலையை, குறிப்பிட்ட கால இடைவெளிக்குள், நிறைவேற்றித்தர வேண்டும், இல்லை என்றால் அதற்கு முறையான மறுமொழி தர வேண்டும் என்கிற விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அது வெறும் வலியுறுத்தலாக மட்டுமே இருக்கிறது. செய்யாமல் விட்டால் தண்டனைகள் என்று ஏதும் இல்லை.

ஜெயபிரகாஷ் நாராயணன்
ஜெயபிரகாஷ் நாராயணன்

குறிப்பிட்ட வேலையைச் சரியான காலத்துக்குள் செய்யாவிட்டால், அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வது, அவர்களின் சர்வீஸில் குறிப்பிட்ட காலத்தைத் தடை செய்வது என்கிற முறையைப் பின்பற்றினால் மட்டுமே இது சரியாகும்.

ஓர் அரசு அதிகாரி, பொதுமக்களிடம் அதிகாரத் தோரணையுடன் நடந்துகொண்டார் என சட்டபூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அவரின் புரமோஷன் பாதிக்கும் என்கிற முறை இருந்தால் மட்டுமே அவர்கள் மக்களை சரியாகக் கையாள்வார்கள். ஆக மொத்தத்தில், அரசு அதிகாரிகள், மக்களுக்கான பணியாளர்கள் என்பதை அவர்களுக்கு வலிமையாகப் புரியவைக்கவேண்டும். '' என்கிறார் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன்.

மக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன? #DoubtOfCommonMan

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!