அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

வளர்கிறாரா... பாதுகாக்கப்படுகிறாரா? - எடப்பாடி பழனிசாமியின் ‘பிளான் நெக்ஸ்ட்’

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

ஓவியம்: சுதிர்

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக மாறி மாறி வரும் நீதிமன்ற அறிவிப்புகளால் ‘இந்த முறை எடப்பாடியின் கை ஓங்குமா, இல்லை பன்னீரின் கை ஓங்குமா’ என்கிற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில், ``விரைவில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆவார் எடப்பாடியார். அவர் வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்” என அவரின் ஆதரவாளர்களும், “எடப்பாடியின் இந்தப் பாதை வளர்ச்சிக்கானது அல்ல” என எதிர்த்தரப்பினரும் மோதிக்கொள்கின்றனர். எடப்பாடியின் எதிர்காலம், அடுத்தகட்ட திட்டங்கள்தான் என்னென்ன?

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமைக்கான யுத்தம் சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அரசியல் களத்தில், மாவட்டம்தோறும் நிர்வாகிகள் நியமனத்தோடு சத்தமில்லாமல் ஒதுங்கிக்கொள்கிறது பன்னீர் தரப்பு. கூடுதலாக, அவ்வப்போது ஆளுங்கட்சிக்கு எதிரான அறிக்கைகளையும் வெளியிட்டு அமைதியாகிறார் ஓ.பி.எஸ். ஆனால், எடப்பாடியோ, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செல்கிறார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தார். ஆளுங்கட்சிக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டங்களையும், பொதுக்கூட்டங்களையும் நடத்திவருகிறார். கூடுதலாக, மூத்த நிர்வாகிகளுடன் தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து ஆளுங்கட்சிக்கு எதிராகப் புகார் மனுவையும் அளித்திருக்கிறார்.

வளர்கிறாரா... பாதுகாக்கப்படுகிறாரா? - எடப்பாடி பழனிசாமியின் ‘பிளான் நெக்ஸ்ட்’

“கட்சியில் மட்டுமல்ல, அரசியல் களத்திலும் வலுவான தலைவராகத் தன்னைக் கட்டமைத்துக்கொள்ள பல்வேறு யூகங்களை வகுத்துவைத்திருக்கிறார் எடப்பாடியார். விரைவில் பல அதிரடிகளைக் காணலாம்’’ எனப் பொடிவைத்துப் பேசுகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

இது குறித்து நம்மிடம் பேசியவர்கள், ``ஜூலை 11 அன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் அமர்வு கொடுத்த தீர்ப்பு சரியாக வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை மட்டும்தான் உச்ச நீதிமன்றம் உற்றுநோக்கும். அந்தவகையில் 100 சதவிகிதம் எங்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும். அதன் பிறகு, தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழுத் தீர்மானங்களுக்கு அங்கீகாரம் பெறுவோம். பின்னர், பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்து, எடப்பாடியாரை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஆக்குவோம். அதோடு, புரட்சித்தலைவரின் பிறந்தநாளன்று திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டம், நிர்வாகிகளுக்கான காலியிடங்களை நிரப்புவது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் என முழுவீச்சில் களத்தில் இறங்கி மக்களைச் சந்திப்பார் எடப்பாடியார்” என்றனர்.

தொடர்ந்து பேசும்போது, “கட்சிரீதியாக மட்டுமல்ல, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவதில் ஏற்பட்ட தொய்வுகளைச் சரிசெய்யவே ஆளுநருடனான சந்திப்பு நடந்திருக்கிறது. மாவட்டம்தோறும் முன்னாள் அமைச்சர்கள் அந்தந்தப் பகுதிப் பிரச்னைகளை முன்வைத்து போராட்டங்களை அறிவித்து வருகிறார்கள். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அது இன்னும் வேகப்படுத்தப்படும். அதுமட்டுமல்ல, ஊரக வளர்ச்சித்துறை, மின்துறை என ஒவ்வொரு துறை சார்ந்து நடைபெறும் முறைகேடுகளையும் கலெக்ட் செய்ய முன்னாள் அமைச்சர்களை முடுக்கிவிட்டிருக்கிறார் இ.பி.எஸ். இதனால், ‘நாங்கள்தான் எதிர்க்கட்சி’ என பா.ஜ.க செய்துவரும் பிரசாரத்தையும் முறியடிக்கலாம் என்பதே எடப்பாடியாரின் திட்டம்.

அதேபோல, பா.ஜ.க-வுடன் சில முரண்கள் இருந்தாலும், அவர்களோடு இணக்கமாகச் செல்லலாம். ஆனால், டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ்-ஸை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதில் மிகவும் கறாராக இருக்கிறார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கில் வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறது சி.பி.ஐ. இன்னும் அடுத்தடுத்து பல அட்டாக்குகள் வரும் என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால், அவை அனைத்தையும் சமாளிப்பதற்கான திட்டங்களுடன்தான் எடப்பாடியார் இருக்கிறார். இனி எதற்கும் அவர் பின்வாங்குவதாக இல்லை. இரட்டை இலைச் சின்னத்தையே முடக்கினாலும்கூட வேறு சின்னத்தில் போட்டியிடுவாரே தவிர, மீண்டும் பழையநிலைக்குச் செல்ல மாட்டார்” என்கிறார்கள் உறுதியாக.

ஆனால், ``எடப்பாடி தனித்து வளர்வதற்கான சூழல் இல்லை, அதற்காக அவர் மெனக்கெடவும் இல்லை. கட்சியாகட்டும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியாகட்டும் அவர் பின்னடைவைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்’’ என்கிறார், மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான எஸ்.பி.லட்சுமணன்.

அவர் நம்மிடம் பேசும்போது, “எடப்பாடி பழனிசாமி பிரபலமானவராக இருக்கிறார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பைக்கூட அவர் பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. தேர்தல்களில் தொடர் தோல்விகளையே சந்தித்துவருகிறார். பணபலத்தால் சட்டரீதியாக கட்சியில் பதவியைப் பெற்றுவிடலாம். ஆனால் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவராக எடப்பாடி உருவாவதற்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை. சட்டமன்றத்திலும் அவர் ஆக்கபூர்வமாகச் செயல்படவில்லை. கள்ளக்குறிச்சி சம்பவம், கோவை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளில் அவர் சரியானவிதத்தில் எதிர்வினையாற்றவில்லை. ஆளுநரைச் சந்தித்து ஊழல் புகாரளிப்பதெல்லாம் ஒரு நாள் கூத்துதான். சொல்லப்போனால், தி.மு.க-வுடன் தொடர்ந்து அனுசரணையாக இருந்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி. 18 மாதங்களாக ஒரு எஃப்.ஐ.ஆர்-கூடப் போடவிடாமல் பழனிசாமியைப் பாதுகாப்பதே முதலமைச்சர் ஸ்டாலின்தான். எடப்பாடி வளர்ந்துவருகிறார் என்பதைவிட அவர் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மைநிலை’’ என்கிறார்.

எஸ்.பி.லட்சுமணன். - சிவசங்கரி
எஸ்.பி.லட்சுமணன். - சிவசங்கரி

இந்த விமர்சனங்களை, அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் முன்வைத்தோம். ``2017-ல் எடப்பாடி பழனிசாமி பதவியேற்கும்போதும் இப்படித்தான் பேசினார்கள். அப்போது அவரிடம் எந்தவித அதிகாரமோ, பணபலமோ கிடையாது. தன்னுடைய உழைப்பால், நிர்வாகத்திறனால் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். நாளுக்கு நாள் எடப்பாடியாருக்கு செல்வாக்கு கூடிக்கொண்டேதான் இருக்கிறது. ஆளுங்கட்சியுடன் அனுசரணையாக இருந்தால் எதற்கு ஆளுநரிடம் புகாரளிக்கப்போகிறோம்... அவர்மீது வழக்கு போட எந்த முகாந்திரமும் இல்லை. அதைவைத்துக்கொண்டு ஆளுங்கட்சியுடன் இணக்கமாகப் போகிறார் என்று சொல்வதெல்லாம் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு’’ என்கிறார் அவர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே எடப்பாடி பழனிசாமியின் பிளான்கள் பூகம்பமா... புஸ்வாணமா என்று தெரியவரும்!