அலசல்
Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

மா.செ-க்கள் இணைந்த கதை!

கடலோரத் தென்மாவட்டத்தை, கிழக்கு - மேற்கு என ஆளுங்கட்சி இரண்டாகப் பிரித்து வைத்திருக்கிறது. ஆளுங்கட்சியின் ஒரு மாவட்டச் செயலாளர் அமைச்சராகிவிட, மற்றொரு மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ ஆக முடியாததால் உடைந்துபோய்விட்டார். ஏற்கெனவே இரண்டு மாவட்டச் செயலாளர்களும் எலியும் பூனையுமாக இருந்தார்கள். ஆனால், அமைச்சர் ஆக முடியாத மாவட்டச் செயலாளர் தலைமையுடன் நெருக்கம். எனவே, அவருடன் சுமுகமாகப் போகவேண்டும் என அமைச்சரான மா.செ-விடம் தலைமை கறாராகச் சொல்லிவிட்டதாம். இதனால் அமைச்சரான மாவட்டச் செயலாளர் இதுவரை முறைத்துக்கொண்டிருந்த பக்கத்து மாவட்டச் செயலாளரிடம் ஏகத்துக்கும் பாசத்தைப் பொழிந்துவருகிறாராம். இதனால், உடன்பிறப்புகள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

‘‘இது எம்.எல்.ஏ-வுக்கு அழகா?’’

கோவையில் தடுப்பூசிக்குக் கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ-வான கே.ஆர்.ஜெயராம், தொகுதியிலுள்ள ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்றுக்குத் தன் ஆதரவாளர்களுடன் ஆய்வுப்பணிக்குச் சென்றிருக்கிறார். மக்கள் அதிகாலை 4 மணி முதல் வரிசையில் காத்திருக்க, ஜெயராமுடன் வந்தவர்களோ வரிசையை மதிக்காமல் சென்று ஊசி போட்டுக்கொண்டுள் ளார்கள். இதனால் வரிசையில் இருந்த தி.மு.க-வினரும் பொதுமக்களும் கொதித்துப்போய் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் எம்.எல்.ஏ-வுடன் வந்தவர்களில் பலரும் ஊசி போட்டுக்கொண்ட பின்னரே சென்றுள்ளார்கள். ஏற்கெனவே, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் செயல்பாடில்லாமல் இருப்பதால் அதிருப்தியில் இருக்கும் கோவை மக்கள், தற்போது எம்.எல்.ஏ-வின் செயலால் கூடுதல் கோபத்தில் இருக்கிறார்கள்.

கரைவேட்டி டாட் காம்

அமைச்சருடன் நெருக்கமான அ.தி.மு.க எம்.எல்.ஏ!

தி.மு.க-வின் கோட்டையாக அறியப்படும் கூடலூர் தொகுதியில் வென்ற பொன்.ஜெயசீலன், எம்.எல்.ஏ-வாகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து மாவட்டத்தில் நடக்கும் அனைத்து அரசு விழாக்களிலும் தவறாமல் ஆஜராகிவிடுகிறார். ஊட்டி, குன்னூர், கூடலூர் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்கும் அத்தனை நிகழ்வுகளிலும் பங்கேற்பதால், எம்.எல்.ஏ-வின் தோள்மீது கைபோட்டுப் பேசும் அளவுக்கு அமைச்சரிடம் நெருக்கமாகிவிட்டார். கலெக்டர் முதல் வி.ஏ.ஓ வரை பங்கேற்கும் அனைத்து நிகழ்வுகளிலும் அ.தி.மு.க கரைவேட்டியுடன் பங்கேற்கும் ஜெயசீலனைப் பார்த்து உடன்பிறப்புகள் செம காண்டில் உள்ளனர். அமைச்சருடன் நெருக்கமாகும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வால், அமைச்சரின் எதிர்க்கோஷ்டியான மாவட்டச் செயலாளர் முபாரக் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூடுதல் கடுப்பில் இருக்கிறார்கள். ஏதேனும் வில்லங்க விவகாரம் சிக்குமா என்று கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துவருகிறார்கள்.