அலசல்
Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

‘‘கண்ணதாசா... ஜேசுதாசா?’’

சட்டமன்றத் தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்தே வெளியில் பெரும்பாலும் தலைகாட்டாமல் இருந்தார். ஜூன் 7-ம் தேதி, திடீரென விழுப்புரம் கட்சி அலுவலகத்துக்கு வந்து முகத்தைக் காட்டியவர், கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா குறித்துக் காட்டமாகப் பேசியவர், ‘எடப்பாடி பழனிசாமி’ என்று கூறுவதற்கு பதிலாக ஒருமுறை ‘எடப்பாடி பன்னீர்செல்வம்’ என்றும், மறுமுறை ‘எடப்பாடி பழனிசெல்வம்’ என்றும் உளறினார். அதன் பிறகுதான் சுதாரித்தார். ‘‘அதுக்குள்ள எடப்பாடி பழனிசாமி பெயரையே மறந்துட்டார்போல’’ என்று சொந்தக் கட்சியினரே கமுக்கமாக கமென்ட் அடித்துச் சிரித்தார்கள்.

கரைவேட்டி டாட் காம்

ஊதிப் பெரிதாக்கும் உடன்பிறப்பு!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தற்காலிகச் செவிலியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்குச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்கூட்டியே வந்துவிட்டார். சுற்றுச்சுழல்துறை அமைச்சர் மெய்யநாதன் வருவதற்கு தாமதமாகியிருக்கிறது. காத்திருந்து காத்திருந்து சோர்ந்துபோன அமைச்சர் ரகுபதி, “அனைவருக்கும் வாழ்த்துகள்... பணி நியமன ஆணையை அமைச்சர் மெய்யநாதன் வழங்குவார்” என மைக்கில் கூறிவிட்டு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே கிளம்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, தி.மு.க தலைமையும் ரகுபதியை சென்னைக்கு அழைத்து விளக்கம் கேட்டது. என்னதான் விஷயம் என்று நாம் விசாரித்தால், “ரகுபதிக்கும் மெய்யநாதனுக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லைங்க. இந்தப் பிரச்னையை ஊதிப் பெருசாக்கி, அதில் குளிர்காயப் பார்ப்பது, அதே மாவட்டத்தைச் சேர்ந்த முத்தான புள்ளி ஒருவர்தான்” என்கிறார்கள் கண்சிமிட்டி.

குடை பிடிச்சது குத்தமாய்யா?

கன்னியாகுமரி எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம், கீரிப்பாறை பகுதியில் பாலம் உடைந்ததைப் பார்வையிடச் சென்றபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த தி.மு.க மாவட்டப் பொருளாளர் கேட்சனும் அங்கு வந்தார். அப்போது மழை தூறியதால், கேட்சன் கையில் கொண்டு வந்திருந்த குடையைப் பிடித்திருக்கிறார். அவரின் குடை பெரிதாக இருந்ததால், குடை இல்லாமல் வந்த தளவாய் சுந்தரத்துக்கும் சேர்த்து குடைபிடித்திருக்கிறார் கேட்சன். இதை ரகசியமாகப் படம்பிடித்த தி.மு.க-வினர் சிலர்,

‘அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு தி.மு.க மாவட்டப் பொருளாளர் குடைபிடிக்கிறார். எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் அனுப்பிவிட்டு நடவடிக்கைக்காகக் காத்திருக்கிறார்களாம்.

கரைவேட்டி டாட் காம்

தடுப்பூசியில் அட்ராசிட்டி!

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள், மாவட்டச் செயலாளர் முபாரக் ஆதரவாளர்கள் எனப் பெரும் பிளவாகப் பிரிந்துகிடக்கும் நீலகிரி தி.மு.க-வில், தற்போது அமைச்சரின் கை ஓங்கியுள்ளது. அதனால், அமைச்சரின் நீண்டகால விசுவாசியான ஊட்டி நகரச் செயலாளர் ஜார்ஜ் கையும் ஓங்கியுள்ளது. தன்னை ஆளுங்கட்சியின் நகரச் செயலாளர் மற்றும் அமைச்சரின் ரைட் ஹேண்ட் எனச் சொல்லிக்கொண்டு, கொரோனா தடுப்பூசி முகாம்களில் இவர் அட்ராசிட்டி செய்வது அனைவரையும் கடுப்பாக்கியுள்ளது. ஊட்டியிலுள்ள பிரபல தனியார் பள்ளி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தப் பள்ளியின் நிர்வாகிகளை அடிக்கடி தொடர்புகொள்ளும் ஜார்ஜ், ‘‘நம்ம ஆளுங்க இருபது பேர் வருவாங்க. க்யூவுல நிறுத்தாம ஊசி போட்டு அனுப்பிடுங்க’’ என உறவினர், கட்சியினரை நாள்தோறும் அனுப்பிவைத்துவிடுகிறார். இவரது அட்ராசிட்டியைத் தாங்க முடியாமல் சுகாதாரத்துறையினர் திணறிவருகிறார்கள்.

எங்கே போனார் ஈரோடு எம்.பி?

“கொரோனா தாண்டவத்தில் மக்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் சாதாரண மனிதர்கள் தொடங்கி தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார்கள். ஆனால், ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி எங்கிருக்கிறார் என்று நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று ஆதங்கப்படுகிறார்கள் ஈரோடுவாசிகள். ‘‘கணேசமூர்த்திக்கு ஏண்டா ஓட்டுக் கேட்டு ஜெயிக்கவெச்சோம்னு இப்போ வருத்தப்படுறோம். ஓட்டு வாங்கி ஜெயிச்சதுக்கு அப்புறம், அவர் மக்களைச் சந்திக்கவே இல்லை. ஓட்டுப் போட்ட மக்களுக்கு இந்த இக்கட்டான சூழல்லகூட அவர் நிக்கலைன்னா எப்படிங்க... அடுத்த எம்.பி எலெக்‌ஷன்ல எந்த மூஞ்சை வெச்சுக்கிட்டு நாங்க மக்கள்கிட்ட ஓட்டுக் கேக்குறது?’’ என்று ஈரோடு உடன்பிறப்புகளும் குமுறுகிறார்கள்.

அரசுப் பொறுப்பு கேட்கும் ஆவுடையப்பன்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த முன்னாள் சபாநாயகரும், தி.மு.க-வின் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பன், அரசு நிகழ்ச்சிகளில் தவறாமல் தலைகாட்டிவருகிறார். எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத அவருக்கு அரசு நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுப்பது, எதிர்க்கட்சியினரிடம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், ‘எனக்கு அரசு பொறுப்பு ஏதாவது கொடுக்க வேண்டும்’ எனக் கட்சித் தலைமையிடம் முறையிட்டிருக்கிறாராம். ‘அது பற்றி பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார். அரசு அமைக்கும் ஏதாவதொரு குழுவில் விரைவில் எனக்கு இடம் கிடைக்கும்’ என ஆதரவாளர்களிடம் மகிழ்ச்சியாகச் சொல்லிவருகிறாராம்.