
- ‘வட்டம்’ பாலா
கைவிடப்பட்ட தொண்டைமான்!
மன்னர் குடும்பத்து வாரிசான கார்த்திக் தொண்டைமானுக்கு, கடந்த 2016 தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க-வில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோது, ‘வெற்றிபெற்றால் அமைச்சராவதற்குக்கூட வாய்ப்பிருக்கிறது’ என்று பேசப்பட்டது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் சுயேச்சையாகக் களமிறங்கி கணிசமான வாக்குகளைப் பெற்றதால், கார்த்திக் தொண்டைமானின் எம்.எல்.ஏ கனவு தகர்ந்துபோனது. அத்துடன், ‘புதுக்கோட்டையில் மற்றவர்களின் கை ஓங்கக் கூடாது என்று கவனமாக இருந்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர்தான் திட்டமிட்டு கார்த்திக்கைத் தோற்கடித்தார்’ என்று அ.தி.மு.க-வினரே புகார் வாசிக்க... அப்போதிலிருந்தே கார்த்திக்கும் விஜயபாஸ்கரும் எதிரும் புதிருமாக மாறினார்கள்.
இந்தநிலையில்தான், 2021 தேர்தலையொட்டி, ஐந்தாண்டு பகையை மறந்து இருவரும் கைகோத்தார்கள். புதுக்கோட்டை தொகுதியில் மீண்டும் கார்த்திக் தொண்டைமான் களமிறங்க... ‘‘வெற்றிபெறவைப்பதற்கான செலவுகள் தொடங்கி, அனைத்தையும் நானே பார்த்துக்கொள்கிறேன். புதுக்கோட்டையில் வீதி வீதியாக உங்களுக்காக வாக்கு கேட்கிறேன்’’ என்றெல்லாம் ஏராளமான வாக்குறுதிகளை விஜயபாஸ்கர் அள்ளி வீசினாராம். ஆனால், தேர்தலின்போது விராலிமலையையே சுற்றிச் சுற்றி வந்த விஜயபாஸ்கர், கார்த்திக்கைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டாராம். ‘‘இந்த முறையும் தன் வேலையைக் காட்டிவிட்டாரே?’’ என்ற கவலையில் இருக்கிறது கார்த்திக் தொண்டைமான் தரப்பு.

தொடர்பு எல்லைக்கு அப்பால்!
சீட் கிடைக்காத கடுப்பில் வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைபார்த்த அ.தி.மு.க நிர்வாகிகள் பலரை மாவட்டவாரியாகக் களையெடுத்துவருகிறது அந்தக் கட்சித் தலைமை. அந்தவகையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும் முக்கிய நிர்வாகிகள் சிலரின் பதவிகள் பறிபோகவிருக்கின்றன என்கிறார்கள். வாணியம்பாடி தொகுதியைச் சேர்ந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், வேலூர் தொகுதியைச் சேர்ந்த மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ஜனனி சதீஷ்குமார், ஆற்காடுத் தொகுதியைச் சேர்ந்த வர்த்தகப் பிரிவு மாவட்டச் செயலாளர் ஏ.வி.சாரதி உள்ளிட்டோர் வகித்துவரும் பதவிகளுக்கும் ஆபத்து காத்திருக்கிறது என்கிறார்கள்.
‘‘இவர்கள் சார்ந்துள்ள தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணிக்கு முதலில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், அதிருப்தியில் இவர்கள் செய்த உள்ளடி வேலைகளால் வேட்பாளர்கள் திக்கித் திணறிப்போய்விட்டார்கள். கடுப்பான வேட்பாளர்கள் பலரும் இவர்களின் உள்ளடி வேலைகள் குறித்து தலைமைக்கு விலாவாரியாகக் கடிதம் அனுப்பியிருக் கிறார்கள். இதையடுத்து, கட்சித் தலைமையிலிருந்து புகாருக்குள்ளான நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டபோது, உரிய பதில் சொல்லாமல் மழுப்பியிருக்கிறார்கள். தொடர்ந்து நேரில் ஆஜராகுமாறு கூறிய பின்னர், செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தொடர்புக்கு அப்பால் போய்விட்டார்கள்.
கடுப்பில் காசிலிங்கம்!
நீலகிரி தி.மு.க மாவட்டச் செயலாளரான முபாரக், குன்னூர் தொகுதியைக் கேட்டு அறிவாலயத்தில் எவ்வளவோ மன்றாடியும் பலனளிக்கவில்லை. பிறகு ஒருவழியாகத் தன் ஆதரவாளரான காசிலிங்கத்துக்குக் கட்சித் தலைமையிடம் அடம்பிடித்து கூடலூரில் சீட் கேட்டு வாங்கியிருக்கிறார். ‘‘செலவு செய்ய பணமில்லை’’ என்று காசிலிங்கம் தயங்கியபோது, ‘‘செலவை நான் பார்த்துக்குறேன். அதைப் பத்தி நீ கவலைப்பட வேண்டாம்’’ என்று கெத்தாகப் பேசினாராம் முபாரக். ஆனால், ‘தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சிகளை கவனிக்கவில்லை... பிரசார வாகனங்களை அதிகம் களமிறக்கவில்லை... வி.ஐ.பி பேச்சாளர்களை அழைத்து பிரசாரம் மேற்கொள்ளவில்லை...’ என்று புலம்பல்கள் கேட்டுக்கொண்டிருக்கிறன. மேலும், ‘‘தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு கணிசமான தொகையைத் தருகிறேன்’’ என்று மாவட்டச் செயலாளர் சொன்னதை நம்பிக் காத்திருந்தவருக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியதாம். “நம்பவைத்து துரோகம் செய்துவிட்டார்” என்று காசிலிங்கம் தரப்பினர் கடுப்பில் இருக்கிறார்களாம்.