அரசியல்
அலசல்
Published:Updated:

பொலிட்டிக்கல் பொடிமாஸ்

பொலிட்டிக்கல் பொடிமாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பொலிட்டிக்கல் பொடிமாஸ்

- ‘பூத்’ பாண்டியன்

பொலிட்டிக்கல் பொடிமாஸ்

“ரசிகர் கூட்ட மோகம் டெபாசிட் தராது!”

பா.ஜ.க அறிவுசார் அணியின் சார்பில் ஒரு கருத்தரங்கம் சென்னை நட்சத்திர விடுதியொன்றில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்றது. இதற்காக, பா.ஜ.க தேசிய இளைஞரணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா சென்னைக்கு வந்திருந்தார். கட்சி சீனியர்கள் பலருக்கும் அழைப்பில்லை. அழைப்பு அனுப்பப்பட்ட சிலரும் வரவில்லை. கருத்தரங்கில் பேசிய பலரும், மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வருகையால்தான் கட்சி உயிர்த்தெழுந்திருப்பதாகப் பேசினர். “அண்ணாமலையை, தமிழ்நாடு முதல்வராக்க நான் தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறேன்” என்றார் தேஜஸ்வி. ஒருசிலர் மட்டுமே, இன்னும் பூத் கமிட்டியே அமைக்காமலிருப்பதை எச்சரிக்கையுடன் கோடிட்டுக் காட்டினார்கள். “சமூக வலைதளத்தைத் தாண்டி, களத்தில் வாக்கு சேகரிக்க ஆட்கள் தேவை. நாம் அதில் இன்னும் கவனம் செலுத்தவில்லை” என அவர்கள் காட்டுக் கத்தலாகக் கத்தியும், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் காதுகளில் விழுந்ததாகத் தெரியவில்லை. அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளத்தான் கூட்டம் அலைமோதியது. “இந்த ரசிகர் மோகத்திலேயே இருந்தால், கட்சி ஓர் இடத்தில்கூட டெபாசிட் வாங்காது” என நொந்துகொண்டு கலைந்தார்கள் அட்வைஸ் செய்தவர்கள்.

பொலிட்டிக்கல் பொடிமாஸ்

ஆதிராஜாராமுக்கு எதிராகப் போட்டிக் கூட்டம்!

அ.தி.மு.க-வில், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளரான ஆதிராஜாராமுக்கு எதிராகக் கட்சிக்குள் ஏகப்பட்ட சர்ச்சைகள் உருள்கின்றன. ‘சீனியர்களை மதிப்பதில்லை, கட்சி நிர்வாகிகளுக்கு மரியாதை கொடுப்பதில்லை’ என அவருக்கு எதிராக, மாநில இலக்கிய அணி இணைச் செயலாளர் ஜெயராஜ், வட்டச் செயலாளர் உமாபதி, மாரி, பகுதிச் செயலாளர் செல்வக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் சின்னையன் (எ) ஆறுமுகம், ஆறுமுகம் எனப் பெரிய பட்டாளமே கிளம்பியிருக்கிறது. இனி, ஆதிராஜாராம் தலைமையிலான ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்களுக்குச் செல்வதில்லை என முடிவெடுத்திருக்கிறது இந்தக் கிளர்ச்சிப்படை. தனியாகப் போட்டிக் கூட்டம் நடத்தவும் முடிவுசெய்து தீவிரமாக வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். வட்டச் செயலாளர் நியமனங்களின்போதே எழுந்த இந்த உட்கட்சி மோதல், இப்போது தீவிரமாகியிருப்பதால், இலைக் கட்சிக்குள் உஷ்ணம் கூடுகிறது!

பொலிட்டிக்கல் பொடிமாஸ்

ஊர் முழுக்க போஸ்டர்... பதிலடிக்குத் தயாராகும் பவன்!

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காததால், ஆளுநர் - ஆளுங்கட்சி இடையேயான மோதல் தீவிரமாகியிருக்கிறது. ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத மசோதாக்களின் பட்டியலை, ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டச் சொல்லியிருக்கிறதாம் அறிவாலயம். முதல் போஸ்டர் கோவையில் முளைத்திருக்கிறது. பொதுமக்கள் கூடும் சில இடங்களில் பிரமாண்ட பேனர்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னை மாவட்ட தி.மு.க-வில், ‘ஆளுநர் மேஜையில் தூங்கும் மசோதாக்கள்’ எனப் பட்டியலிட்டு பிட் நோட்டீஸ் அடித்து, வீட்டுக்கு வீடு வழங்க ஏற்பாடாகிறது. ஆளுநருக்கு எதிராகப் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவும் முடிவெடுத்திருக்கிறதாம் அறிவாலயம். தி.மு.க-வின் தாக்குதல் தீவிரமாகியிருப்பதால், நேரடியாக பதில் சொல்ல முடியாத பவன், கமலாலய ரூட்டில் பதிலடி கொடுக்கத் தயாராகிறது என்கிறார்கள் விவரமறிந்த அதிகாரிகள்.

பொலிட்டிக்கல் பொடிமாஸ்

கமலுடன் இணைந்த அருணாச்சலம்!

மக்கள் நீதி மய்யத்திலிருந்து மனமாச்சர்யங்களால் வெளியேறி, பா.ஜ.க-வுக்குச் சென்றவர் அருணாச்சலம். ம.நீ.ம-வின் பொதுச்செயலாளராக இருந்த அருணாச்சலம், கமலின் வலதுகரமாக கட்சியில் வலம்வந்தவர். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்னதாக, அவர் கட்சி தாவியது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. ம.நீ.ம-விலிருந்த சில தலைவர்களுடன் ஏற்பட்ட மோதலால்தான் அவர் வெளியேறியதாக அப்போது கூறப்பட்டது. அந்தத் தேர்தலில், ம.நீ.ம தோல்வியைத் தழுவிய பிறகு, மய்யத்திலிருந்து பலரும் வெளியேறினர். அதில், அருணாச்சலத்துடன் மோதலில் ஈடுபட்டவர்களும் அடக்கம். அதைத் தொடர்ந்து, ம.நீ.ம-வில் மீண்டும் இணைவதற்குப் பேசிவந்திருக்கிறார் அருணாச்சலம். ஆர்.ஏ.புரத்திலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில், கமலைத் தனியே சந்தித்து மனம்விட்டுப் பேசியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான், டிசம்பர் 10-ம் தேதி அருணாச்சலம் ம.நீ.ம-வில் மீண்டும் இணைந்ததாக ஆழ்வார்பேட்டையிலிருந்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கட்சியின் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை அருணாச்சலத்தை கவனிக்கச் சொல்லியிருக்கிறாராம் கமல்!

பொலிட்டிக்கல் பொடிமாஸ்

“டெல்லில பேசுங்க..!” மைத்ரேயனைக் களமிறக்கும் பன்னீர்!

எடப்பாடி பழனிசாமிக்கு ‘அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர்’ என்கிற அந்தஸ்தை வழங்கியிருக்கிறது மத்திய அரசு. இதனால், ஆற்றாமையின் உச்சத்திலிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடிதமும் எழுதினார். ஆனால், பதில்தான் வரவில்லை. தனக்கும் டெல்லிக்கும் பாலமாகச் செயல்பட்ட ஆந்திரா தொழிலதிபரும் கழன்றுகொண்டதால், டெல்லியைக் கையிலெடுக்க, அ.தி.மு.க முன்னாள் எம்.பி மைத்ரேயனைக் களமிறக்கியிருக்கிறார் பன்னீர். ஜெயலலிதா காலத்திலேயே டெல்லியில் தனக்கென ஒரு லாபியை உருவாக்கிக்கொண்டவர் மைத்ரேயன். பா.ஜ.க மேலிட வட்டாரங்கள், காஞ்சி மடம், சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எனக் கலவையான தொடர்புகளை அவர் வைத்திருப்பதால், டெல்லியில் தனக்குச் சாதக அலையை உருவாக்கித்தரும் பொறுப்பை மைத்ரேயன் வசம் ஒப்படைத்திருக்கிறார் பன்னீர். அதேவேளையில், மூத்த வழக்கறிஞரும், ஆலங்குளம் எம்.எல்.ஏ-வுமான மனோஜ் பாண்டியன் மூலமாகத் தனிக்கட்சி ஆரம்பிக்கும் பணியையும் பன்னீர் தீவிரப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள்!