
- கணியன் பூங்குன்றன்
அண்ணனைப்போலவே தன்னைச் சுற்றியும் அறிவாளிகள் கூட்டத்தை வைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறாராம் தங்கைத் தலைவி. ட்வீட் போட, அறிக்கை எழுத, டைமிங் ஐடியாக்கள் கொடுக்க என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஆள் எடுக்கப் போகிறார்களாம். ஊடகத்துறையில் இருந்த சிலரை வரவழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் அம்மணி. #எதையும் ப்ளான் பண்ணிப் பண்ணணும்...
கட்சிக்குள் இவ்வளவு களேபரங்கள் நடந்தபோதும், எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலை வகித்தவர் பெரிய இடத்து மணக்கும் உதவியாளர். மனதில்பட்ட விஷயங்களை யார் மனமும் நோகாதபடி தன் முகநூலில் எழுதி உணர்த்துவது அவர் வழக்கம். பொறுத்தது போதுமென அவர் வெடித்துக் கிளம்பத் தயாராகிவிட்டதாகச் சொல்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். தொண்டர்களின் உணர்வையும், கட்சியின் போக்கையும் பிரஸ் மீட் வைத்துப் பிரளயம் கிளப்பப்போகிறாராம். #பூ ஒன்று புயலாகுது…

முன்பெல்லாம் கட்சி நிர்வாகிகள் சந்திக்க வந்தால், விஷயத்தைப் பேசி முடித்ததும் அவர்களை விரட்டுவதிலேயே குறியாக இருப்பார் முதன்மையானவர். ஆனால், சமீபகாலமாக என்ன மாற்றமோ… நிர்வாகிகளே கிளம்பினாலும், ‘இருங்க போகலாம்…’ எனச் சொல்லி அன்பாகப் பேசுகிறாராம். சந்தித்துத் திரும்புகிறவர்கள் சந்தோஷத்தில் சிலிர்க்கிறார்கள். #முஸ்தபா... முஸ்தபா...
ஆடியோ அலப்பறைகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கும் சின்னத்தலைவிக்கு செக்வைக்க நினைக்கிறார் துணிவானவர். கட்சி நிர்வாகி ஒருவரைக் கடிதம் எழுதவைத்து, சின்னத்தலைவி போன் பேசும்போது சரமாரியாகக் கேள்வி கேட்க வைத்து, அதைப் பதிவாக்கி, பரபரப்பாக்குகிற திட்டமாம். #குண்டு ஒண்ணு வெச்சுருக்கேன்...
‘‘துரைமுருகனுக்கு அடுத்தபடியா கட்சியில் நான்தான் சீனியர். ஆனால், யார் யாருக்கோ கட்சியில் முக்கியப் பொறுப்புகளைக் கொடுக்கிறவங்க என்னைய கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க” என வெளிப்படையாகவே புலம்பத் தொடங்கிவிட்டார் முருகப் பெருமான் பெயர் கொண்ட டெல்டா தலைவர். “சீனியர் என்பதெல்லாம் உண்மைதான். ஆனா, நெருக்கடியான நேரத்தில் சில உள்ளடி வேலைகளைச் செஞ்சிருக்கக் கூடாதே?” என அவர் குமுறலுக்கு பதிலடிகளும் பறக்கின்றன. #நீ விதைத்த வினையெல்லாம்...
சிபாரிசு, டெண்டர் என யார் வந்தாலும் முதல்வருக்கு நிழலாக இருக்கும் நிலவு செயலாளரைப் போய்ப் பார்க்கச் சொல்கிறாராம் கற்பிக்கும் துறையைக் கையில் வைத்திருக்கும் இளம் அமைச்சர். ‘துறையின் செயலாளரைச் சந்திக்கச் சொல்வதுதானே வழக்கம்’ எனச் சிலர் எடுத்துச் சொல்ல, “அதெல்லாம் எனக்குத் தெரியும். நான் சொல்ற செயலாளரும் ஏற்கெனவே இந்தத் துறையை கவனிச்சவர்தான். அவருக்கு அனுபவம் ஜாஸ்திங்கறதாலதான் தப்பு நடக்காமல் இருக்க அவரைச் சந்திக்கச் சொல்றேன்” என்றாராம். #கற்றாரைக் கற்றாரே...

அணில் அமைச்சரின் சட்டமன்றப் பேச்சுக்கு கிச்சன் கேபினெட்டில் பாராட்டு மழையாம். வார்த்தைக்கு வார்த்தை ‘முதல்வர்... முதல்வர்’ என அணில் அமைச்சர் முழங்கியதைச் சுட்டிக்காட்டிய இல்லத்தரசி ‘‘இந்த அளவுக்கு நன்றி மறக்காமல் இருக்கீங்களே தம்பி…’’ என நெகிழ்ந்தாராம். #பழைய பழக்கம்!
மனு கொடுக்க வந்த தனித் தொகுதி எம்.எல்.ஏ ஒருவரை நிற்கவைத்துக்கொண்டு, இனிஷியல் அமைச்சரும், தழும்பு அமைச்சரும் ஜம்மென அமர்ந்திருந்த புகைப்படங்கள் முதன்மையானவரைக் கொதிக்கவைத்துவிட்டனவாம். ‘ஒரு எம்.எல்.ஏ-வுக்கே இதுதான் மரியாதைன்னா, ஓட்டுப்போட்ட மக்களை எப்படி நடத்துவீங்க?’ என இருவருக்கும் செம டோஸாம். இரு அமைச்சர்களையும் அந்த எம்.எல்.ஏ-விடம் போனில் பேசி ‘சாரி’ கேட்கச் சொல்லி உத்தரவாம். #அடக்கம் அமரருள் உய்க்கும்...