
- கணியன் பூங்குன்றன்
‘ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைப்பேன்’ என்கிற அளவுக்கு ஆவேசமாகப் பேசிய காவிக் கட்சியின் சர்ச்சைத் தலைவர், தனக்கு எதிராகக் கடுமையான கண்டனங்கள் வரும் என நினைத்தார். ஆனால், ஆளும்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்கூட அவருக்கு எதிராக வாய் திறக்கவில்லை. இதில் குழம்பிப்போன சர்ச்சைத் தலைவர், ‘தடாலடியான ஆட்கள் இந்த அளவுக்குத் தன்மையா மாறிட்டாங்களே…’ எனத் தனக்கு நெருக்கமான ஆட்களிடம் சொன்னாராம். அதேநேரம் ஆளும்கட்சிக்கு நெருக்கமான ஆட்களிடம், ‘அந்த பயம் இருக்கணும்’ என மிரட்டலாகச் சொல்கிறாராம். #இரட்டை நாக்கு
லஞ்சக் குற்றச்சாட்டுக்காக முன்னாள் பெண் அமைச்சரைக் கட்சியை விட்டு நீக்கிய துணிவானவரும் பணிவானவரும், நடிகையுடனான சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அமைச்சர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கிநிற்கிறார்கள். சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் முன்னாள் அமைச்சர்மீது கைது நடவடிக்கை பாய்ந்தால், கட்சிக்கு அசிங்கமாகிவிடுமே என சீனியர் நிர்வாகிகள் எச்சரிக்கும் நிலையிலும், அவர்மீது எந்த நடவடிக்கையும் இல்லையாம். கடந்த ஆட்சியில் நடந்த பல தகிடுதத்தங்களை முன்னாள் அமைச்சர் அம்பலப்படுத்திவிட வாய்ப்பிருப்பதாகக் கிளம்பும் யூகங்கள்தான் ‘கப்சிப்’புக்குக் காரணமாம். #மருமகள் உடைச்சா பொன்குடம்… மாமியார் உடைச்சா மண்குடம்!
“மத்தியில் உள்ளவங்களைப் பகைச்சுக்கிட்டு பெரிய அளவுக்கான பணிகளை இங்கே பார்க்க முடியாது. அதனால கொஞ்சம் அனுசரிச்சுப் போகலாம்” என ஆலோசனை சொல்கிறாராம் தேர்தல் வெற்றிக்குக் காரணமான வியூகப் புள்ளி. ‘சம்மதித்தால், மத்திய அமைச்சரவையில் இடம் வாங்கிக் கொடுக்கவும் ரெடி’ என்கிறாராம். முதன்மையானவர் எந்தப் பதிலும் சொல்லாததால், அடுத்தகட்ட முயற்சிகளை எப்படிச் செய்யலாம் என யோசித்துவருகிறார் வியூகப் புள்ளி. #சோழிய உருட்டுங்க...
தினமும் தொகுதி வலம், ஆய்வு, கூட்டம் என வாரிசுத் தலைவர் தீவிரமாக வலம்வருகிறார். கொரோனா நெருக்கடி நேரத்தில் மக்களுக்குப் பக்கபலமாக நின்று பணியாற்றிவிட்டு, அடுத்த பட வேலைகளை முடித்துக் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறாராம். அடுத்த வருடத்துக்குள் ஒப்பந்தமான படங்களை முடிக்கத் திட்டமாம். #மீட்டிங் முடிந்து ஷூட்டிங்…
வாடகை கட்ட வழியில்லாததால், ஹவுஸ் ஓனரின் நெருக்கடிக்கு ஆளான திருவள்ளூர் மாவட்டப் பெண்மணி ஒருவர், மில்க் மினிஸ்டரிடம் போனில் புலம்பினாராம். அடுத்த இரண்டு மணி நேரத்தில், ஹவுஸ் ஓனரிடம் பேசி அந்தப் பிரச்னையை மினிஸ்டர் க்ளீயர் பண்ணிக் கொடுக்க, அருகிலிருந்தவர்களே அசந்துபோனார்களாம். “தலைமையே நாம போன் எடுக்கிறோமா, நடவடிக்கை எடுக்கிறோமான்னு டெஸ்ட் பண்ணுதுப்பா… அதனாலதான் இந்த அலர்ட்டு” என்றாராம் மினிஸ்டர். #தூங்குனாலும் கால ஆட்டிக்கிட்டே இருக்கணும்!
சேனல் நிர்வாகத்தின்மீது மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம் சின்ன தலைவி. சிறையில் இருந்தபோது சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக கோடிக்கணக்கில் வாங்கியவர்கள், அதற்கான வருமானமாக எதையும் காட்டவில்லையாம். இனிஷியல் புள்ளிக்கும் விவேகமான வாரிசுக்கும் இடையே நடக்கும் பனிப்போரும் நிர்வாகக் குளறுபடிகளுக்குக் காரணமாம். சீக்கிரமே சாட்டையைச் சுழற்றப்போகிறாராம் சின்ன தலைவி. #நான் ஆணையிட்டால் பாட்ட டெடிகேட் பண்ணுங்க!

கொரோனா நடவடிக்கைகளுக்காக வெளியூர்ப் பயணத்தை முடித்துவிட்டு வந்த முதன்மையானவர், வீட்டில் எவரையுமே தன் அருகே நெருங்கவிடுவது கிடையாதாம். பேரக் குழந்தைகளைப் பார்க்கவே மறுக்கிறாராம். அந்த அளவுக்குக் குடும்பத்தினர் மீதான பாதுகாப்பில் அக்கறை காட்டுகிறாராம். ‘அப்புறம் ஏன் பி.பி.இ கிட் போட்டுக்கிட்டு, தொற்று பாதித்தவங்களைப் பார்க்கப் போனீங்க?’ என இல்லத்தினர் கேட்க, ‘அது என் கடமை. அவசியம் ஏற்பட்டால் மறுபடியும்கூட அப்படிப் போய்ப் பார்ப்பேன்!’ என்றாராம் அசராமல். #வேலைன்னு வந்துட்டா நான் வேற மாதிரி!

கற்பிக்கும் துறையின் இணைப் பதவிக்கு வர, பல அதிகாரிகள் தகிடுதத்தம் போட்ட நிலையில், தீபத்தின் பெயர் கொண்ட பெண் அதிகாரியை நியமித்து உத்தரவு வந்திருக்கிறது. அதிகாரிகள் வட்டாரத்தில் இந்த நியமனம் ஆச்சர்யத்தை ஏற்படுத்த, ‘உங்கள் திறமைக்குச் சவால்… நிரூபித்துக் காட்டுங்கள்’ எனத் தைரியமும் வாழ்த்தும் சொன்னாராம் முதல்வருக்கு நிழலாக இருக்கும் அதிகாரி. #அதிகாரிகள் நியமனம் அதிரிபுதிரியா இருக்குதே!