அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அமைச்சராகியிருக்கும் சீனியர் புள்ளி, எம்.எல்.ஏ-வாக இருக்கும் தன் மகனுடன் சரிவரப் பேசுவது இல்லையாம். தேர்தலுக்கு முன் சிறு மனவருத்தத்தில் உருவான விரிசல், இப்போது ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்பதில்லை என்கிற அளவுக்குப் பெரிதாகிவிட்டதாம். அப்பாவுக்கும் மகனுக்குமான பூசலைப் பேசித் தீர்க்க வேண்டிய கட்சித் தலைமையோ அப்பாவைப் பற்றிப் போட்டுக்கொடுத்து மகனுக்குக் கொம்புசீவும் வேலையைத் தீவிரமாகச் செய்கிறதாம். ‘விரைவில் நீதான் அமைச்சர்’ என்கிற அளவுக்குத் தலைமை நம்பிக்கை கொடுத்திருக்கிறதாம். சாதாரணத் துறையை ஒதுக்கி சங்கடத்தைக் கொடுத்தவங்க, இப்போ குடும்பத்துக்குள்ளேயும் கும்மி அடிக்கிறாங்களே என நொந்துபோகிறார் அமைச்சர். #கூட்டுறவே நாட்டுயர்வு…“அந்தம்மாவைக் கட்சியில் சேர்த்துக்கிறதுதான் கட்சியைக் காப்பாற்ற ஒரே வழி” எனத் துணிவானவரிடம் நேருக்கு நேர் தைரியமாகச் சொன்னாராம் டெல்டா மாவட்ட ட்ரீட்மென்ட் புள்ளி. “உங்களைவிட அந்தம்மாவுக்கு நான் கடமைப்பட்டிருக்கேன். நீங்கல்லாம் தெய்வத்தை நேர்ல பார்த்திருக்க மாட்டீங்க. எனக்கு அந்தம்மாதான் தெய்வம். ஆனா, அந்தம்மாவைக் கட்சிக்குள்ள கொண்டு வந்தா, இனிஷியல் புள்ளி தொடங்கி மன்னார்குடி புள்ளி வரைக்கும் கட்சியைக் கபளீகரம் பண்ணிடுவாங்க. என் குடும்பத்தை முழுசா ஒதுக்குறேன்னு அந்தம்மாவை இன்னிக்குச் சொல்லச் சொல்லுங்க. நாளைக்கே அவங்களை நானே நேர்ல போய் பார்த்து, `கட்சிக்கு வாங்கம்மா’ன்னு அழைக்கிறேன்” எனத் துணிவானவர் சொல்ல, ட்ரீட்மென்ட் புள்ளியால் பதில் சொல்ல முடியவில்லையாம். #சொந்தக்காரங்களே சோலிய முடிச்சிடுவாங்க போலிருக்கே!

சூரிய நிறுவனம், மாஸான சங்க நாயகனை ஐந்து படங்களுக்கு புக் பண்ணியிருப்பதாகவும், அதற்காக ‘100 சி’ பேசப்பட்டு முன்தொகை கொடுக்கப்பட்டதாகவும் பெரிய பரபரப்பு. சூரிய நிறுவனம் மட்டுமல்ல… வடக்கத்திய பெரிய நிறுவனங்களே சங்க நாயகனைக் கொத்தாக ஃபிக்ஸ் பண்ணி பெரிய லாபம் பார்க்கத் துடிக்கின்றன. “நீங்க கொஞ்சம் கடன்ல இருக்கீங்க… அதனாலதான் இந்த ஆஃபர்” எனப் பேசிய மும்பை நிறுவனங்களிடம்கூட, “என் கடனை அடைக்க எனக்குத் தெரியும். நீங்க போய்க்கிட்டே இருக்கலாம்” எனப் பொளேர் பதில் சொன்னாராம் சங்க நாயகன். அதையும் தாண்டி சூரிய நிறுவனப் பரபரப்பு பெரிதாக, சமூக வலைதளங்களில் பெரிய வைரலானது. ‘வதந்திகளுக்கான ஒரே பதில்… அமைதிதான்!’ என அரசியல்வாதிபோல பதில் சொல்லாமல் அமைதிகாக்கிறார் சங்க நாயகன். #வெல்‘டான்’!

கிசுகிசு

விமர்சனம், கேலி, கிண்டல் என நேற்றுவரை முட்டிமோதிவிட்டு, திடீரென முதல்வரை நேரில் பார்த்த கர்ஜிக்கும் தலைவருக்குக் கட்சிக்குள் ஏக எதிர்ப்பு. பொறுப்பிலிருக்கும் தம்பிகள் சிலர் கட்சியைவிட்டு விலகுகிற அளவுக்குப் பொங்கி எழ, “முதல்வரா இருக்கிறவர் எல்லாருக்கும்தான் முதல்வர். அவரோட கட்சிக்காரங்களுக்கு மட்டும் இல்லை. நம்மோட நியாயமான உரிமைகளைக் கேட்போம். செய்யலைன்னா சட்டையைப் பிடிச்சுக் கேட்போம். மரியாதை நிமித்தமான சந்திப்புக்கு நீங்க இவ்வளவு சங்கடப்படாதீங்க” எனச் சமாதானப்படுத்தினாராம் கர்ஜிக்கும் தலைவர். “பதவியேற்புக்கு உங்களுக்கு அழைப்பு வந்தது. மரியாதை நிமித்தம்னு சொல்ற நீங்க அதுக்கு மட்டும் ஏன் போகலை... நமக்கும்தானே அவர் முதல்வர்?” எனத் தம்பிகள் சீற, கர்ஜிக்கும் தலைவர் கப்சிப். “இந்தப் பயலுகளுக்கு எல்லாப் பயிற்சியையும் நானே கொடுத்துட்டேன். சாணை பிடிச்சவன் சதையிலையே குத்திப் பதம் பார்க்குறானுகளே…” எனக் குடும்பத்தினரிடம் ஆதங்கப்படுகிறாராம். #நான் வளர்த்த ஆமைக்குஞ்சுக... ஏ.கே.74 எடுத்து என்னையே சுடுதுங்க!

கொரோனா பரவல் குறித்த சர்வதேசக் கலந்தாய்வுக் கூட்டங்களில், மைக் நடிகரின் பெயர்கொண்ட தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் எடுத்துவைக்கும் பாயின்ட்டுகள் பெரிய கவனத்தைப் பெற்றிருக்கின்றன. எம்.பி.பி.எஸ் முடித்து லட்சியக்கனவோடு ஐ.ஏ.எஸ் ஆன அந்த அதிகாரி கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள், செயல்திட்டங்கள் எனத் தெளிவான கருத்துகளை முன்வைக்கிறாராம். “இவ்வளவு நுட்பமான பார்வையோடு இருக்கும் இந்த மருத்துவரைச் சுகாதாரத்துறையிலோ, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பிலோ அமர்த்தலாமே…” என்கிறார்கள் இவர் குறித்து அறிந்தவர்கள். ஆனால், அரசோ ஊர் சுற்றிக்காட்டும் துறையில் நியமித்து விளையாடியிருக்கிறது. #முதல்ல அரசுக்குச் சிகிச்சை கொடுங்கப்பா!

“அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களைப் புறக்கணிச்சுட்டாங்க” எனப் பொங்கிக் கிளம்பிய குரல்களின் பின்னணியில், சீனியர் மில்க் பிரமுகரின் திருவிளையாடல்தான் பெரிதாக இருந்ததாம். எம்.எல்.ஏ-வாக இருக்கும் தன் மகனுக்குப் பதவி வாங்கத்தான் இந்த ஆதங்க விளையாட்டை நடத்தினாராம். இதற்கிடையில், புதிதாக அறிவிக்கப்பட்ட குழுவில் மில்க் பிரமுகரின் மகனுக்கும் இடம்கொடுத்தார் முதல்வர். இதில் இடம்பெற்றுவிட்டதால், அமைச்சரவை விரிவாக்கத்தின்போது நிச்சயம் தன் பெயர் பரிசீலிக்கப்பட வாய்ப்பில்லை என மில்க் பிரமுகரோடு மல்லுக்கட்டுக்கிறாராம் வாரிசு. “எந்தக் காயைத் தட்டினா எங்கே விழும்னு பழுத்த அனுபவம் பெற்ற நம்மளையே பஞ்சராக்குறாங்களே…” என மிரண்டு கிடக்கிறார் மில்க். #நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே... இன்னும் பயிற்சி வேண்டுமோ?!