அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

“என் சிபாரிசுகள் எதுவும் நடப்பதில்லை. தயவுபண்ணி என்னைத் தேடி வராதீங்க” என ஆதரவாளர்களிடம் வெளிப்படையாகவே சொல்கிறாராம் மதுரைக்கார அண்ணன். ‘உண்மையாகவே செல்வாக்கு இல்லையா, நம்மைத் தவிர்ப்பதற்காக இப்படிச் சொல்றாரா?’ எனத் புரியாமல் குழம்புகிறார்கள் தென் மண்டல உடன்பிறப்புகள். #பேய் இருக்கா... இல்லியா?

கட்சி நிர்வாகிகளோடு ஜூம் மீட்டிங் நடத்துகிறார் கப்பல் தலைவரின் மனைவி. நிர்வாகிகள் பலரும் கட்சி குறித்துப் பேசாமல் கடன், கஷ்டம் என்றே புலம்ப, மீட்டிங்கையே நிறுத்திவிட்டாராம் அம்மணி. “நாங்க என்ன கடனா கேட்டோம்… ஆறுதல் சொல்லக்கூட அந்தம்மாவால முடியலையா?” என மீண்டும் புலம்புகிறார்கள் நிர்வாகிகள். #சங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டிருக்கு மொமன்ட்!

டாஸ்மாக் திறப்பு விஷயத்தில், முதல்வர் ரொம்பவே தயங்கத்தான் செய்தாராம். துறைரீதியான அமைச்சர்தான் துணிச்சல் கொடுத்தாராம். ஒரு வார வருமானம் மலைக்கவைக்கும் வகையில் இருக்க, அது தன்னால் நிகழ்ந்த சாதனை எனத் தம்பட்டம் அடிக்கிறாராம் அமைச்சர். #எதே சாதனையா..?

கிசுகிசு

வழக்குகளை எய்தும்கூட, கரும்புக் கட்சியின் தம்பிகளைக் கட்டுப்படுத்த முடியாததால், வரிசையாகப் புகார் அனுப்பி அவர்களின் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க ஐடி டீமுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறதாம் ஆளும்தரப்பு. டார்கெட் லிஸ்ட்டில் முதல் ஆளாக இருக்கிறார் ஊர்ப்பெயரை அடையாளமாக வைத்திருக்கும் தீபப்பெயர் கொண்ட தம்பி. #அமுக்கு முடக்கு... டமால் டுமீல்!

லாட்டரி புகழ் புள்ளியின் மருமகனிடம் தேர்தல் செலவுக்காக 2 சி வாங்கினாராம் காவிக்கட்சியின் தியேட்டர் வாரிசு. ‘கடன்’ என்று சொல்லி வாங்கியவர், தேர்தல் முடிந்தும் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. இந்தநிலையில், ‘டெல்லியில் சில அனுமானங்களைச் செய்துகொடுக்கிறேன்’ என மீண்டும் பணம் கேட்கிறாராம் வாரிசு. #கருப்பன் குசும்பன்... கரெக்ட்டு பண்ணச் சொல்றானப்பா!

பணிவானவர் பக்கம் இருந்த சீனியர் கடவுள் புள்ளி, அப்படியே துணிவானவர் பக்கம் ஜம்ப்பானார். கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் துணிவானவருக்குப் பக்கா ஜால்ராவாக மாறிக் கொந்தளித்தாராம். பவரில் இருந்தபோது கடைசி கட்ட நேரத்தில் கைமாறிய குவாரிகள்தான் சீனியரை இந்த அளவு சீறவைக்கிறதாம். #குவாரிய கொடுத்தா வெடிக்கத்தான செய்வாங் சாமி!

வித்தியாச விரும்பியான நடிகர், மிகத் தாமதமாக கொரோனா நிதி கொடுத்தார். தன் உதவி தனித்துத் தெரியவே நடிகர் செய்த யுக்தி எனச் சிலர் விமர்சிக்க, ‘பொருளாதாரரீதியான சிரமம்தான் தாமதத்துக்குக் காரணம்’ என்கிறார்கள் உண்மையான காரணம் அறிந்தவர்கள். #அப்ப... குமுதா ஹேப்பியா இல்லியா?!

கட்சிரீதியான சங்கடங்கள் எங்கே ஏற்பட்டாலும், மத்திய மண்டலத்தின் மீசை மினிஸ்டரையே பஞ்சாயத்துக்கு அனுப்புகிறாராம் முதன்மையானவர். ‘என்னோட பிரச்னைக்கே யார் பஞ்சாயத்து பண்றதுன்னு தெரியலையே…’ என உள்ளுக்குள் குமுறினாலும், அதட்டல், அன்பு எனப் பஞ்சாயத்துகளைப் பக்குவமாக முடிக்கிறாராம் மீசை மினிஸ்டர். #இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல... உன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல!

கிசுகிசு

சின்னத்தலைவியின் தம்பி மகன் காவிக்கட்சியில் ஐக்கியமாக, தேர்தலுக்கு முன்பே விண்ணப்பம் அனுப்பியிருந்தாராம். விண்ணப்பத்தை வெயிட்டிங்கிலேயே போட்டுவிட்டார்களாம். சமீபத்தில், மறுபடியும் டெல்லி போய் காவிக்கட்சியின் தலைவரையே நேரில் சந்தித்தாராம் வாரிசு. #பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?

நடிகை கொடுத்த புகாரால் தலைமறைவாகத் திரியும் மாஜி பெல் பிரமுகர், சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயாரானாராம். அம்மணி தரப்பில் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள் இரு விரல்களைக் காட்டி ‘சி’ கேட்க, மாஜிக்கு மயக்கம் வராத குறையாம். உண்மையாகவே அம்மணிதான் கேட்கிறாரா, இல்லை இடைப்பட்டவர்கள் விளையாடுகிறார்களா எனப் புரியாமல் மண்டை காய்கிறார் மாஜி. #எக்கச்சக்கமாகிப் போச்சு கணக்கு!

இதிகாச நாயகனின் பெயர்கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியைத் தோட்டத்துக்கும் அருங்காட்சியகத்துக்குமாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். 15 நாள்களுக்குள் ஏன் இந்தப் பந்தாட்டம் என்றால், ‘கடந்த ஆட்சியில் காரியங்கள் பல சாதித்துக்கொண்டவர்’ என்கிறார்கள். நியமனத்துக்கு முன் இதைக்கூட உளவுத்துறை விசாரிக்காதா எனச் சிரிக்கிறார்கள் கோட்டையில். #உங்க சோப் என்ன ஸ்லோவா?