அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

இலைக் கட்சியின் பணிவானவரும், சின்ன தலைவியும் போனில் பேசுகிற அளவுக்கு இணக்கமாகிவிட்டார்களாம். பழைய மன வருத்தங்களை மறக்கச் சொல்லி பணிவானவர் சொல்ல, ‘அதையெல்லாம் நான் எப்பவோ மறந்துட்டேன். நாம கட்சியின் அடுத்தகட்டத்தை நோக்கித்தான் இப்போ யோசிக்கணும்” எனச் சொன்னாராம் சின்ன தலைவி. ஆட்சிக் கட்டிலில் இருந்தபோது துணிவானவர், சின்ன தலைவிக்கு எதிராகச் செய்த பல தகிடுதத்தங்களை ஆதாரபூர்வமாக ஒப்பிக்கிறாராம் பணிவானவர். சொத்துகள் குறித்த விவரங்களையும் பட்டியல் போட்டிருக்கிறாராம். விரைவில் சின்ன தலைவியின் வீடு தேடி வந்து பணிவானவர் சந்தித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். #யுத்தம் சபதத்தைச் சந்திக்கப்போகிறது!

கிசுகிசு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் குளறுபடிகள் நடக்க, சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள்தான் காரணமாம். அரசுக்கு நல்லபெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தாமதம் செய்வது, திட்டம் நிறுத்தம் என வதந்தி கிளப்புவது, உள்ளடி வேலைகள் செய்வது எனத் தீவிரமாக இருக்கிறார்களாம். ‘இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை இழுத்தடிக்கக் கூடாது’ எனக் கோட்டையின் உச்ச அதிகாரியே உத்தரவிட்டிருக்கும் நிலையிலும், இவ்வளவு மெத்தனம் காட்டுகிறார்களாம். ‘பல மாணவர்களுக்கு இன்னமும் இலவச சைக்கிள் சென்றடையாத சிக்கலை எதிர்க்கட்சிகள் பூதாகரப்படுத்துவதற்குள் அரசு உஷாரானால் சரி’ என்கிறார்கள் அதே துறையின் நேர்மையான அதிகாரிகள். #சைக்கிள் கேப்பில் சடுகுடு ஆடுறாங்களே!

கிசுகிசு

விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துவிட்டு, ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி, கர்நாடகா மாநில அரசியலில் கால் வைக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். அவர் காவிக் கட்சியைத்தான் குறிவைக்கிறார் எனப் பலரும் அனுமானம் சொல்ல, ஐயா ஸ்கெட்ச் போடுவதோ கதர்க் கட்சிக்காம். சும்மா இல்லை… காவிக் கட்சியின் உயரிய தலைவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாரோ… அங்கு அவரை எதிர்த்து நிற்கவும் தயார் எனச் சொல்லியிருக்கிறாராம். ‘அரசு நிர்வாகத்தில் இப்படி ஒருநாளும் யோசனை பண்ணியதே இல்லை’ எனச் சலித்துக்கொள்கிறார்கள் சக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். #‘மாமன் நான் கதகளி ஆடி நீ பாத்ததில்லையே?’ மொமன்ட்!

கிசுகிசு

மாணவி விவகாரத்தில் மனமுடைந்து போய்விட்டாராம் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர். ‘நடந்த துயரத்துக்குப் பொறுப்பேற்று, நியாயமா நான் ராஜினாமா செய்திருக்கணும்’ என்றாராம் நெருங்கியவர்களிடம். ‘புத்திர சோகத்தைப் புரிந்தவன் நான்’ என்றும் புலம்பினாராம். ஒரு கட்டத்தில் விஷயம் முதன்மையானவர் கவனம் வரை போக, “தவறு செய்தவர்கள்மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுங்கள்… அதுதான் உண்மையான அக்கறை” எனச் சொல்லப்பட்டதாம். சம்பந்தப்பட்ட துறையின் ஆட்கள்மீது அமைச்சர் கடும் பாய்ச்சலைக் காட்டியது அதன் பிறகுதானாம். #இனி இது மாதிரி நடக்காம பார்த்துக்கோங்க!

கிசுகிசு

டெல்லியிலிருந்து வந்தவர்கள் சந்திக்க நேரமோ, உரிய நம்பிக்கையோ கொடுக்காததால், கடுமையான மன வருத்தத்தில் இருக்கிறார் இலைக் கட்சியின் துணிவானவர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணியையே மாற்றிக்கொள்கிற அளவுக்குத் துணிந்தும்விட்டாராம். கட்சி விவகாரம், தேர்தல் ஆணையத்தின் கையிலிருப்பதால் மட்டுமே கொஞ்சம் யோசிக்கிறாராம். சீனியர் மாஜிக்கள் சிலரைத் தொடர்புகொண்டு, ‘சின்னம் போனாலும் நாம் காவிக் கட்சியை எதிர்த்தால் நிச்சயம் ஜெயிக்கலாம்’ எனப் பேசினாராம். ஆனால், அதற்கு உரிய ரெஸ்பான்ஸ் இல்லாததால், சற்றே அமைதி காக்கிறாராம். #வண்டியை ஸ்டார்ட் பண்ணும்போதெல்லாம் ஆஃப் பண்றாய்ங்களே..!