
- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கட்சி தொடங்கி அமைச்சர்கள் வரையிலான ஆதங்கத்தை வெளிப்படையாகக் கொட்டும் ‘பசை’த்துறை அமைச்சர்மீது முதன்மையானவர் பாய்ச்சல் காட்டாமல் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அமைச்சரைக் கண்டித்ததாகப் பத்திரிகைகளில் வரும் செய்திகள் கொஞ்சம்கூட உண்மை இல்லையாம். அதனால், ‘இவரே கொம்பு சீவிவிடுகிறாரோ?’ என்கிற சந்தேகம் அமைச்சரவைக்குள் கிளம்பியிருக்கிறது. “இனியும் வாய்த்துடுக்குக் காட்டினால் பதிலுக்கு நானும் பாய்வேன்…” என்று தென் மாவட்ட சீனியர் அமைச்சர், இல்லத்துக்கு நெருக்கமானவர்களிடம் சீறினாராம். முதன்மையானவர் கவனத்துக்குப் போனாலும் பரவாயில்லை என்கிற அளவுக்குத் துணிந்து விட்டாராம். #அமைச்சர்கள்லாம் கூட்டுறவா இருங்க பாஸ்!

‘மாஸ்டர்’ பிளான் போடும் நடிகர், மன்ற நிர்வாகிகளை அழைத்துப் பேசியபோது, அண்ணன் கட்சித் தலைவர் குறித்து அதிகம் விசாரித்தாராம். கட்சியின் செல்வாக்கு, அண்ணன் தலைவரின் பேச்சுக்கான வரவேற்பு என அடுத்தடுத்து விசாரிக்க, மன்ற நிர்வாகிகளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லையாம். அண்ணன் தலைவருக்கு இது குறித்துச் சொல்லப்பட, “என்னையப் பத்தி எல்லார்கிட்டயும் பேசுற ஆள், என்கிட்ட பேச மாட்டேங்கிறாரே…” என ஆதங்கப்பட்டாராம். பட விவகாரத்தில் வலியப் போய் ஆதரித்துப் பேசியதற்குக்கூட மாஸ்டர் நடிகர், அண்ணன் தலைவருக்கு நன்றி சொல்லவில்லையாம். #ஏங்ணா... ஒரு போன் போட்டுப் பேசுங்களேங்ணா!

கார்டன் அம்மாவுக்கு உதவியாளராக இருந்த மலர் பிரமுகர், அடிக்கடி முகநூல் பக்கங்களில் தன் மனக் கருத்தை எழுதுவது வழக்கம். கடந்த வாரம் அப்படி எழுதியவர், காவிக் கட்சி தமிழகத்தில் வளர்ந்துவருவதாகவும், இலைக் கட்சி தேய்ந்து வருவதாகவும் வெளிப்படையாக எழுதினார். இதைவைத்து மலர் பிரமுகரைக் காவிக் கட்சி பக்கம் அழைக்க நினைத்தாராம் மாஜி காக்கி தலைவர். அது குறித்துப் பேச்சுவார்த்தை தொடங்கியபோதே பதறிப்போய் மறுத்தாராம் மலர் பிரமுகர். ‘காவிக் கட்சியில் பதவியே கொடுத்தாலும் அம்மாவின் இயக்கத்தைவிட்டுப் போக மாட்டேன்’ என கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டாராம். #ரொம்ம்ப நல்லவரா இருப்பாரோ..?!

ஆளும் வாரிசின் போனை யார் யாரோ எடுத்து யூஸ் பண்ணுகிறார்களாம். ‘நட்புக்கு மரியாதை கொடுக்கிறேன்…’ என வாரிசு பெருந்தன்மை காட்ட, அந்த அவகாசத்தில் தங்களுக்குத் தேவையான விஷயங்களை அவருடைய போன் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்கிறார்களாம் அருகிலிருப்பவர்கள். இத்தனைக்கும் சிபாரிசு, உதவி என எதற்குமே போனைப் பயன்படுத்துவது கிடையாதாம் வாரிசு. உரிய அமைச்சர்கள் ரூட்டில், உரிய ஆட்கள் மூலமாகத்தான் சொல்வாராம். ஆனால், நண்பர்கள்தான் போன் மூலம் பலரையும் ஆட்டிப் படைக்கிறார்களாம். #இடுக்கண் தருவதாம் நட்பு!

பிற்படுத்தப்பட்டவர்களை மேம்படுத்தும் துறையில், எட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். இதை டம்மியான துறையாக நினைக்கும் இவர்களில் சிலர், இங்கிருந்து எப்படியாவது டிரான்ஸ்ஃபர் வாங்கிவிடத் துடிக்கிறார்களாம். இதற்காகவே எவ்விதப் பணியையும் செய்யாமல் இழுத்தடிப்பு, மெத்தனம், மேம்போக்கு என அநியாய சுணக்கம் காட்டுகிறார்களாம். ‘யாராவது புகார் அனுப்பிப் பந்தாட வைத்தாலும் பரவாயில்லை’ என்கிற அளவுக்குத் துணிந்துவிட்டார்களாம். இன்னும் சிலரோ, இந்தத் துறைக்குள்ளும் ஏதாவது லாபம் பார்த்துவிட முடியாதா என அரிசி, பருப்பு விநியோகம் வரை ஆராய்கிறார்களாம். ‘அமைச்சரின் கவனத்துக்கு யாராவது சொல்லுங்கப்பா…’ எனக் கதறுகிறார்கள் அதே துறையின் அக்கறையான அதிகாரிகள். #துறையைப் பிற்படுத்துறதுக்குள்ள கவனிங்க பாஸ்!