அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

சின்ன தலைவிக்கும், இனிஷியல் புள்ளிக்கும் இடையே மௌன யுத்தம் நடக்கிறது. காவிக் கட்சியோடு தான் நேரடியாகப் பேசுவதால், சின்ன தலைவியின் தயவு தேவையில்லை என முடிவெடுத்துவிட்டாராம் இனிஷியல் புள்ளி. சின்ன தலைவி சிறையில் இருந்தபோது, கட்சியை வளர்க்கக் கொடுக்கப்பட்ட பசைப் பரிவர்த்தனைகள் யாவும் உதவியாளர் பெயரில் சொத்துகளாக மாறிவிட்டனவாம். அதனால், இனி சொந்த பந்தம் என எவ்வித இணக்கமும் காட்ட வேண்டியதில்லை எனத் தீர்மானம் செய்துவிட்டாராம் இனிஷியல் புள்ளி. காவிக் கட்சியின் தலைமைக்கும் சின்ன தலைவி குறித்து குறைவான மதிப்பீட்டைப் பரப்புகிறாராம். ‘இந்த அளவுக்கு மாறுவார்னு நினைக்கலை’ எனச் சமீபத்தில் சந்தித்த உறவுக்காரர் ஒருவரிடம் மனம்விட்டுப் புலம்பியிருக்கிறார் சின்ன தலைவி. #கிளிக்கு றெக்க முளைச்சுடுத்து... ஆத்தவிட்டே பறந்து போயிடுத்து!

கிசுகிசு

தமிழ்நாடு கதர்க் கட்சியின் தலைவரை மாற்ற, டெல்லி வரை கிளம்பிப்போனார்கள் உள்ளடிப் புள்ளிகள். புகார்களை மட்டும் வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டார் டெல்லியின் புதிய தலைவர். தமிழகத்தில் ஆளுங்கட்சியை அனுசரித்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தற்போதைய தலைவர்தான் சரிப்படுவார் என உறுதியாக நம்புகிறதாம் டெல்லி தலைமை. இது குறித்து முதன்மையானவருக்கு நெருக்கமான ஆள் மூலமாகவும் தகவல் அனுப்பியிருக்கிறதாம். அதனால், தலைவர் மாற்றம் சாத்தியமே இல்லை என்கிறார்கள் கதர் புள்ளிகள். #சின்ராச இனி கையில புடிக்க முடியாதே!

ஆளும் அரசின் அமைச்சரவையிலிருந்து, பவன் புள்ளியிடம் மூன்று பேர் அடிக்கடிப் பேசிவருகிறார்களாம். நேரடியாகப் பேசாமல் தங்கள் ஆட்களை அனுப்பிவைத்து உரிய தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்களாம். இந்த அளவுக்கு எப்படி தைரியம் வந்தது எனத் தீவிர விசாரணை நடத்தச் சொல்லியிருக்கிறார் முதன்மையானவர். துறைரீதியான விஷயங்களைக் கையில் வைத்துக்கொண்டு துருவி எடுத்துவிடக் கூடாது என்கிற அச்சத்திலேயே ஆளும் புள்ளிகள் சரண்டர் அஸ்திரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்களாம். #பவனைச் சரணடந்தேன் கண்ணம்மா... பயத்தில் சரணடந்தேன்ன்ன்!

கிசுகிசு

இலைக் கட்சி ரெண்டுபட்டுக் கிடக்கும் நிலையில், அண்ணன் தலைவரின் ஆதரவு யாருக்கு எனக் கேள்வி கிளம்பியது. அடுத்த கட்சி என்றும் பாராமல், பிரஸ்மீட்டில் வாய்க்கு வந்ததைப் பேசும் வழக்கம்கொண்டவர் அண்ணன் தலைவர் என்பதால், கட்சிக்காரர்களுக்கு இந்தக் குழப்பம் நீடித்தது. இந்த நிலையில், அண்ணன் தலைவரைச் சந்தித்துப் பேச ஆள் அனுப்பினாராம் இலைக் கட்சியின் பணிவானவர். இரவு வரை நீண்ட பேச்சுவார்த்தையில், அண்ணன் தலைவர் பணிவானவருக்கு ஆதரவாக ரொம்பவே பாசம் காட்டினாராம். கடந்த தேர்தலில் பசை ஏற்பாடுகளைச் செய்வதாகச் சொல்லி, துணிவானவர் ஏமாற்றிவிட்டதாகவும் புலம்பினாராம். சீக்கிரமே துணிவானவருக்கு எதிராக, போகிறபோக்கில் பொங்கவும் திட்டமிட்டிருக்கிறாராம். #ஆக... பழுவேட்டரையர் தலைமையில் ரகசியச் சந்திப்பு நடந்திருக்கிறது!

“காவிக் கட்சியின் மிச்சமிருக்கும் மானத்தையும் கப்பலேற்றும்விதமாக, இன்னும் மூன்று வீடியோக்கள் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன” என்கிறார்கள். காக்கி மாஜிக்குக் குடைச்சலைக் கொடுக்க, வீடியோ மீடியாப் புள்ளிகள் சிலரைக் கையில் வைத்துக்கொண்டு, உள்ளடிப் புள்ளிகள் வீடியோ, ஆடியோ என விளையாடுகிறார்களாம். கட்சிக்காரர்கள் பேசிக்கொள்வதுபோல் சமீபத்தில் பரப்பப்பட்ட ஆடியோவும் உள்ளடி ஆட்களால் உருவாக்கப்பட்டதுதானாம். மொத்தமாக இந்தப் பிரச்னைகளுக்கு முடிவு காண, ஆன்லைன் ஆட்களோடு விடிய விடிய விவாதம் நடத்தினாராம் காக்கி மாஜி. இறுதியில் உள்ளடி ஆட்களை அழைத்துப் பேசி அமைதியாக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். #‘இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா’ மொமன்ட்!