
- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்
சீனியர் அமைச்சர்களை இஷ்டத்துக்கு இயங்கும்படி உத்தரவு கொடுத்துவிட்டாராம் முதன்மையானவர். இனி முக்கிய விஷயங்கள் தவிர்த்து, மற்றவற்றுக்கு முதன்மையானவரிடமோ, இல்லத்து ஆட்களிடமோ சீனியர் அமைச்சர்கள் ஒப்புதல் கேட்கவேண்டியது கிடையாதாம். சீனியர் அமைச்சர்கள் பலரும் அதிருப்தி மனநிலையில் இருக்கும் தகவலை, உளவுத்துறை எடுத்துச் சொன்ன பின்னணியில் இந்தக் கட்டவிழ்ப்பு நடந்திருக்கிறதாம். இதனால், மூத்த அமைச்சர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியிருக்கிறார்கள். #சும்மாவே ஆடுவாங்க... இதுல சலங்கைய வேற கட்டிவிடுங்க!

அக்கா மகனா, தம்பியா என்கிற குழப்பத்திலிருந்து இன்னமும் மீள முடியாமல் தவிக்கிறார் சின்ன தலைவி. அக்கா மகனான இனிஷியல் புள்ளி இப்போதெல்லாம் வீட்டுக்கு வருவதோ, சந்திப்பதோ கிடையாதாம். கட்சி விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிப்பதுகூட இல்லையாம். தம்பிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இனிஷியல் புள்ளியை இந்த அளவுக்குக் கோபமாக்கியிருக்கிறதாம். இந்த இடைவெளியைச் சரி செய்திருக்கவேண்டிய தம்பி, இருவரும் நிரந்தரமாகப் பிரிந்தால் சரி என எண்ணி அதற்கான வியூகங்களைச் செய்யத் தொடங்கிவிட்டாராம். சின்ன தலைவிக்கு நெருக்கமான அத்தனை புள்ளிகளையும் நகர்த்திவிட்டு, தான் மட்டுமே உற்ற துணையாக இருக்க தம்பியானவர் நினைக்கிறாராம். இந்த பாலிட்டிக்ஸைச் சமாளிக்கவே சின்ன தலைவிக்கு நேரம் சரியாக இருக்கும் என்கிறார்கள் இல்லத்தினர். #அப்ப... அந்த சபதம்... அவ்வளவுதானா?
ஆளுங்கட்சியின் நியமனப் பதவிகளுக்கு வாரிசுகளும், புதிதாக வந்த சிலரும் நியமிக்கப்பட்டதில் கட்சிக்குள்ளேயே கலகக்குரல் கிளம்பியிருக்கிறது. பல மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர், மந்திரி உள்ளிட்டவர்களுக்கு ஆகாத ஆட்கள் முக்கியப் பொறுப்புகளுக்குக் கொண்டுவரப் பட்டிருக்கிறார்களாம். அது குறித்த ஆலோசனைகூட கட்சி நிர்வாகிகளிடம் கேட்கப்படவில்லையாம். ‘எந்த ரூட்டில் இந்த நியமனங்கள் நடக்கின்றன?’ என மண்டைகாய்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். சில நியமனங்களில் பசை விளையாட்டு நடந்திருப்பதாகவும் `பகீர்’ கிளம்பியிருக்கிறது. #ஒண்ணும் புரியலை... சொல்லத் தெரியலை!

இலைக் கட்சியில், இணைப்பு விழாவுக்குச் சாத்தியமே இல்லை என்பதில் மிக உறுதியாக இருக்கிறாராம் துணிவானவர். வழக்கமான டெல்லி தூதர்கள் இப்போது விலகி நிற்பதால், புதிய ரூட்டில் தன் நிலைப்பாட்டைப் புரியவைத்தாராம் துணிவானவர். ஆனால், ‘ஒன்றுபட்ட இயக்கத்தால் மட்டுமே ஆளுங்கட்சியைத் தோற்கடிக்க முடியும்’ என மத்திய உளவு அமைப்புகள் சொல்லியிருக்கும் தகவலைத் துணிவானவருக்குப் புரியும்படிச் சொல்லச் சொன்னார்களாம். கூடவே, தலைமேல் கத்தியாகக் காத்திருக்கும் வழக்குகளையும் அவர்கள் சுட்டிக்காட்ட, ‘ஜெயிலுக்கு இல்லை.. செத்தே போனாலும்கூட இணைப்பு என்பது கிடையாது’ எனத் தூது வந்தவர்களிடம் இன்னமும் அழுத்தமாகச் சொல்லி அனுப்பினாராம் துணிவானவர். ‘எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது?’ என எச்சில் விழுங்கியிருக்கிறார்கள் டெல்லி ஆட்கள். #‘ஏ... சூப்பர்ப்பா... இப்பிடில்லாம் நீ பேசிப் பார்த்ததில்லப்பா!’ மொமன்ட்!
பொங்கல் நாளில் ரிலீஸாகவிருக்கும் தன் படத்துக்கு, அரசுத் தரப்பில் திட்டமிட்டுச் சிக்கல் ஏதாவது செய்யப் பார்க்கிறார்களா என விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம் மெர்சலான நடிகர். யானைகளை அனுமதி வாங்காமல் பயன்படுத்தியது, கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது என அடுத்தடுத்து நடக்கும் குழப்பங்கள் யதேச்சையானதா, இல்லை திட்டமிட்டுச் செய்யப்படுவதா என மெர்சலான நடிகருக்குப் புரியவில்லையாம். ரிலீஸ் நேரத்தில் அதிக தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் வந்தால், அப்போதைக்கு அரசு நிலைப்பாட்டைச் சமாளிக்க முடியாது என்றும் நினைக்கிறாராம். ‘வாரிசுப் புள்ளியிடம் கலந்து பேசி தீர்வு காணுங்கள்’ என்கிறார்களாம் அருகிலிருக்கும் அட்வைஸர்கள். #ரத்தத்தின் ரத்தமே... என் இனிய உடன்பிறப்பே!