
- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் முக்கியப் பதவிக்கு முட்டி மோதிய ஜாம்பவான்களுக்கு மத்தியில், அசால்ட்டாக அந்த இருக்கையில் வந்து அமர்ந்தார் நான்கெழுத்து காக்கி அதிகாரி. சிட்டியில் முக்கியத்துவத்தோடு இருக்கும் இரு அதிகாரிகளை இந்த நியமனம் எச்சில் விழுங்கவைத்ததாம். ‘எந்த ரூட்டில் இல்லத்தை அணுகினார்?’ என விசாரித்துக்கொண்டே இருக்கிறார்களாம். உண்மையில் நான்கெழுத்து அதிகாரி அந்தப் பதவிக்கு பெரிய அளவில் ரூட் எடுக்கவே இல்லையாம். ‘அரசியல் செய்ய மாட்டார். சட்டம்-ஒழுங்கைக் கவனிப்பதில் கைதேர்ந்தவர்’ என அதிகார வட்டாரத்தில் பரவிய செய்தியைவைத்து முதன்மையானவரே அவரை நியமித்ததாகச் சொல்கிறார்கள். #ஓஹோ... ஒன்பது கிரகங்களிலும் உச்சம்பெற்ற ஒருவரா?

இனியும் இலைக் கட்சியில் நீடிக்க வேண்டாம் என நினைக்கிறாராம் மாஜி குட்கா அமைச்சர். தற்போதைய ஆளுங்கட்சியில் ஐக்கியமாக, பல ரூட்டுகளில் மெனக்கெட்டார். ஆனால், ‘அவருக்கு மன்னிப்பே கிடையாது’ என முதன்மையானவர் கறார் காட்டியதால், வாரிசு ரூட்டில் அணுகிப் பார்த்தார். அப்படியும் ஆளும் தரப்பு மசியவில்லை. சமீபத்தில் டெல்லிப் பக்கம் போய் வந்தவர், காவிக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரை அணுகி ஐடியா கேட்டாராம். ‘பெரிய தொகையோடு எங்க கட்சிக்கு வந்துடுங்க’ என வெளிப்படை யாகவே வேண்டுகோள் வைத்தார்களாம். அப்போதைக்கு மறுத்தாலும், நடவடிக்கைகளுக்கு பயந்து காவிக் கட்சியில் கலக்கவே நினைக்கிறாராம் மாஜி குட்கா அமைச்சர். விரைவில் அதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப் போகிறாராம். #முகேஷை எங்களால காப்பாத்த முடியல!

டெல்டா மாவட்டத்தில், விவசாய நிலங்களை அழித்து நடக்கிற சாலைப் பணியைக் கண்டித்துப் போராட்டங்கள் தீவிரமாகிவருகின்றன. கடந்த ஆட்சியில் கோலோச்சிய மாஜி ஒருவர், பினாமி பெயரில் அந்தப் பகுதியில் பெரிய அளவுக்கு நிலம் வாங்கிப்போட்டாராம். சாலை வருவதால் பாதிப்பு எனப் பதறியவர், இப்போது ‘சாலை வந்தால் லாபம், நில மதிப்பு அதிகமாகும்’ எனக் கணக்கு போடுகிறாராம். அதனால் போராடுபவர்களை அமைதியாக்க ஆட்களை அனுப்பிப் பேச்சுவார்த்தை நடத்துகிறாராம். #ஓஹோ... அப்பிடிப் போகுதா கதை!

‘நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது?’ என அரசியல் ஆலோசகர்களை வீட்டுக்கு அழைத்து ஒரு நாள் முழுக்க உரையாடினாராம் அண்ணன் தலைவர். அரசியல் புள்ளிவிவரங்களை விரல்நுனியில் வைத்திருக்கும் சீனியர் விவாதப் புள்ளியின் ஆலோசனை, அண்ணன் தலைவருக்கு ரொம்பவே உற்சாகத்தைக் கொடுக்க, தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டதாம். ‘அடுத்து நீங்கதான்’ என அநியாயத்துக்கு உசுப்பேற்றினாராம் அந்த சீனியர் ஆலோசனைப் புள்ளி. கூடவே, ‘கூட்டணியே கூடாது’ என்றும் கோடாங்கி அடித்துவிட்டு வந்தாராம். அண்ணன் தலைவரும் அதை ஆமோதித்து, ஏற்றுக்கொண்டாராம். #இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணமாக் கிடக்கு!

கப்பல் தலைவரின் கட்சி நாளுக்கு நாள் தேய்ந்த வண்ணமாக இருப்பது, நிர்வாகிகளை நிறையவே வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். தங்களுக்குள் கூடிப் பேசிய நிர்வாகிகள், ஒருகட்டத்தில் கப்பல் தலைவரின் மனைவியை போனில் தொடர்புகொண்டும் பேசினார்களாம். மொத்த ஆதங்கத்தையும் பொறுமையாகக் கேட்டவர், “வரும் தேர்தலில் நிச்சயம் வலிமையான கூட்டணியில் நாம் இடம்பெறுவோம். நல்ல விஷயங்கள் நடக்கப்போகிற காலத்தில் கெட்ட முடிவுகளை எடுக்காதீர்கள்” எனச் சொன்னாராம் அம்மணி. ஆதங்க ஆட்கள் இப்போதைக்கு அமைதியாகியிருக்கிறார்கள். #‘ஆனி போய் ஆவணி வந்தா... டாப்பா வருவ’ மொமன்ட்!