
ஓவியங்கள்: சுதிர்
வழக்குகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கடுமையாகப் போராடிய குட்கா மாஜி, ஒருகட்டத்தில் ஆளுங்கட்சியோடு ஐக்கியமாகவும் திட்டமிட்டார். காவிக் கட்சிப் பக்கமும் காய்நகர்த்திப் பார்த்தார். எதுவும் வொர்க்அவுட் ஆகாததால், சொந்த ஊர்ப் பக்கம் வந்து கட்சிக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னாராம். கடந்த வாரம் சொந்த மாவட்டத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில், ஆளுங்கட்சியை வெளுத்தெடுத்துவிட்டாராம். “போன மாசம் வரைக்கும் கட்சி தாவ ரெடியா இருந்த ஆளு இப்போ இந்தப் போடு போடுறாரே…” எனத் திகைத்துப்போனார்களாம் மீடியேட்டர்கள். #ச்ச்சீ... இந்தப் பழம் புளிக்கும்!
பட்டாபிஷேகம் நடத்தப்பட்ட வாரிசு, பவன்காரரின் அன்பில் சொக்கிப்போய்விட்டாராம். பதவியேற்பு முடிந்து, பவன்காரருக்கு நெருக்கமான ஆட்களை அழைத்துப் பேசினாராம். தன் தாத்தா காலத்தில் பவன் புள்ளிக்கும் அரசுக்கும் இருந்த நெருக்கத்தை நினைவூட்டியவர், அந்த அளவுக்கு இப்போதைய பவன் புள்ளியிடம் பாசம் பாராட்ட, தான் தயாராக இருப்பதைச் சொன்னாராம். விஷயம் பவன் வட்டாரத்துக்குப் போக, ‘மனதில்பட்டதைப் பேசுகிறேனே தவிர, நான் உங்களுக்கு எதிரானவன் அல்ல’ என அவரும் இறங்கிவந்தாராம். இந்த அளவுக்கு இரு தரப்பும் நெருங்கும் என அதிகாரிகள் வட்டாரம்கூட நினைக்கவில்லையாம். #வெளியே வம்பு... உள்ளே அன்பு... விளங்க முடியா மர்மம் நான்!

காவிக் கட்சியின் சார்பாகத் தமிழகத்தில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு வருகை தந்தார் மத்திய அமைச்சராக இருக்கும் முன்னாள் சினிமாப் பெண் புள்ளி. வாரிசு அரசியல் தொடங்கி ஊழல் வரையிலான குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டுப் பேசி வெளுத்தெடுத்த அமைச்சர், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அடிக்கடி தன்னை அழைத்து, கட்சி விழாக்களை நடத்தச் சொல்லியிருக்கிறாராம். அவருடைய தடாலடிப் பேச்சுக்கு செம ரெஸ்பான்ஸ் இருப்பதால், டெல்லியும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாம். ஆரம்பத்தில் தமிழகத்தின் ஆளுங்கட்சி ஆட்களோடு இணக்கமாக இருந்த இந்த அமைச்சர், இடையில் ஏதோ மனவருத்தத்துக்கு ஆளானாராம். அதனால்தான் ஆளும் அரசுக்கு எதிராக இந்த அளவுக்குக் களமிறங்கத் தயாராகிறாராம். #ஆளுந்தரப்பை விடுங்க... படகோட்டி இந்நேரம் அவருக்கு ஸ்கெட்ச் போட்டிருப்பாரே!
அமைச்சரவை மாற்றத்தில் சீனியர்கள் பலருக்கும் உடன்பாடு இல்லையாம். முக்கியத் துறைகளை ஒதுக்கித் தருகிறேன் என உத்தரவாதம் கொடுத்திருந்த முதன்மையானவர், பெயரளவுக்கு மட்டுமே மாற்றிக்கொடுத்ததாக நினைக்கிறாராம் தென் மாவட்ட சீனியர். எம்.ஜி.ஆர் காலத்து சீனியர், தன் துறையிலிருந்து பிடுங்கப்பட்ட துணைத் துறையை எண்ணி ரொம்பவே கவலைப்படுகிறாராம். வாரிசுக்காகத் தன் துறைகளைத் தியாகம் செய்த இளைய புள்ளிக்கும் டம்மியான துறைகளையே கொடுத்ததில் கடும் வருத்தமாம். இதையெல்லாம்விட பெரும் துயரம், டெல்லி மில்க் புள்ளியின் வாரிசுக்கு இந்த முறை அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எண்ணி ஏமாந்ததுதானாம். #நானொரு ராசியில்லா ராஜா..!

கதர்க் கட்சியின் தமிழகத் தலைவர் பதவியைக் குறிவைத்து, பலரும் டெல்லி பக்கம் படையெடுத்து வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு இணக்கம் காட்டுவதில் வல்லவராக விளங்கும் தற்போதைய தலைவரை வைத்தே நாடாளுமன்றத் தேர்தல் வரை எதிர்கொண்டுவிட நினைக்கிறது டெல்லி தலைமை. அதேநேரம் அதிருப்திக் குரல்கள் அதிகமாவதையும் குறைக்க நினைக்கிறது. அதனால், செயல் தலைவர்கள் பதவியைக் கொண்டுவந்து அதிருப்தி ஆட்களை அவற்றில் உட்காரவைக்க நினைக்கிறது டெல்லி தலைமை. கதர்க் கட்சியின் தற்போதைய தமிழகத் தலைவரை இதற்குச் சம்மதிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. #ஆளுக்கொரு நாற்காலி... ஆட்டம் போடு சேக்காளி!