சமூகம்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

வாட்ச் விஷயத்தை வைத்து, மாஜி காக்கியை சமூக வலைதளங்களின் மூலமாக எவ்வளவோ சீண்டிப்பார்த்தார் அணில் அமைச்சர். எப்போதுமே வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மாஜி காக்கி, அணில் அமைச்சருக்கு பதிலடியாக எந்தக் கருத்தையும் பதிவிடவில்லை. தனது ஆன்லைன் டீமிடம் சொல்லி, அணில் அமைச்சருக்கு எதிரான வசைபாடல்களைப் பொதுவான கருத்தாகப் பரப்பிவிடச் சொன்னாராம். அணில் அமைச்சரின் பதிவுகளுக்கு, அவரையே காலிசெய்யும்விதமான கருத்துகள் கிளம்பிய பின்னணி இதுதானாம். சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தாக்குதல் நடத்தவும் பல நூறு கணக்குகள் தொடங்க, தன் டீமுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் மாஜி காக்கி. எந்த அளவுக்கும் இறங்கி பதிலடி கொடுக்கும் வேலைகளை இந்தக் ‘கணக்குகள்’ சீக்கிரமே செய்யத் தொடங்குமாம். #வாட்ச்சும் சரியில்ல... நேரமும் சரியில்ல!

கிசுகிசு

‘சினிமா வேறு அரசியல் வேறு’ என்பதில் பதவிக்கு வந்திருக்கும் வாரிசுப் புள்ளி தெளிவாக இருக்கிறாராம். சினிமா நண்பர்கள் அரசியல் குறித்த சிபாரிசோ, உதவியோ கேட்டால் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ள மறுக்கிறாராம் வாரிசுப் புள்ளி. அதேநேரம் சினிமா குறித்து என்ன கேட்டாலும், தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துகொடுக்கிறாராம். அரசியல் நண்பர்கள் சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளைச் சொல்லும்போது அதைக் கொஞ்சமும் ரசிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொள்கிறாராம். வரம்பு மீறும் நட்பு வட்டத்தை அடுத்த கணமே பிளாக் லிஸ்ட்டில் போட்டுவிடுகிறாராம். #இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக் கூடாது... நானும் வர மாட்டேன்!

கிசுகிசு

காவிக் கட்சியைக் கழற்றிவிடவும் தயார் மூடுக்கு வந்துவிட்டார் இலைக் கட்சியின் துணிவானவர். அதேநேரம் சின்ன தலைவி, இனிஷியல் புள்ளி, பணிவானவர் என அனைவரையும் பகைத்துக்கொண்டால் முக்குலத்து வாக்குகள் வாய்க்காமல் போய்விடுமே என யோசித்தவர், அந்தச் சமூகத்தின் பெயரில் இயங்கும் சிறு கட்சிகளை ஒருங்கிணைத்து, தங்கள் பக்கம் இழுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறாராம். டெல்டா மாவட்ட மாஜி, குட்கா மாஜி இருவரிடமும் இது குறித்த அசைன்மென்டைக் கொடுத்திருக்கிறாராம். சிதம்பரம் புள்ளி தொடங்கி மீன்சுருட்டி புள்ளி வரை பேச்சுவார்த்தை தீவிரமாக நடக்கிறது என்கிறார்கள். #ஒரு தாய் மக்கள் நாம் என்போம்... ஓட்டுக்காக வா என்போம்!

கிசுகிசு

‘இவருக்கு மட்டும் எப்படித்தான் இவ்வளவு யோகம் அடிக்கிறதோ?’ என மாடு புகழ் ஆளுங்கட்சிப் புள்ளியைப் பார்த்து வியந்துபோகிறார்கள் உடன்பிறப்புகள். கட்சிக்குள் வந்ததுமே சட்டமன்றத் தேர்தலில் சீட், தேர்தலில் தோற்றுப்போனாலும் மாநில அளவிலான பதவி என ஏற்கெனவே பலரையும் பொறாமைப்படவைத்த மாடு புகழ் புள்ளிக்கு, இப்போது வாரியப் பதவியும் வழங்கப்பட, பலருக்கும் மயக்கம் வராத குறையாம். “காலங்காலமா கட்சியில கஷ்டப்படுறவங்களைப் புறக்கணிச்சுட்டு... புதுசா வந்தவங்களுக்கு இத்தனை பதவிகளைக் கொடுக்கலாமா?” எனக் குமுறிக்கிடக்கிறார்கள் சீனியர்கள் சிலர். #முன்னால பாயுது லேட்டஸ்ட் காளை... பின்னால கதறுது சீனியர் காளை!

கிசுகிசு

ஃபயர் துறைக்குள் நடக்கும் பாலிடிக்ஸ், முதன்மையானவர் கவனம் வரை போயிருக்கிறதாம். உச்ச பதவியில் இருப்பவரையே வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கிற அளவுக்கு என்ன நடந்தது என, காக்கி வட்டாரத்துக்குள்ளும் பரபரப்பு பற்றி எரிகிறது. காக்கி அதிகாரிகளுக்குள் நடக்கும் ஈகோ யுத்தம்தான் ஃபயர் துறைக்குள் இவ்வளவு அமளி துமளி நடக்கக் காரணமாம். ‘இவர் அவருடைய ஆள்’, ‘அவர் இவருடைய ஆள்’ என ஆளாளுக்கு நடக்கும் கோஷ்டிப்பூசலை விசாரித்த முதன்மையானவருக்குத் தலை கிறுகிறுத்துப் போய்விட்டதாம். #நெருப்புடா... கோஷ்டிப்பூசல் வெறுப்புடா..!