அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

பொங்கல் பரிசில் கரும்பு வழங்கச் சொல்லி, ஆளும் தரப்புப் புள்ளிகளே ஆரம்பத்தில் முதன்மையானவரிடம் வற்புறுத்தினார்களாம். ‘கரும்பு வழங்கினால் நல்ல வேட்டை நடத்தலாம்’ என்பதுதான் கணக்காம். இந்த நெளிவு சுளிவு விஷயம் முதன்மையானவர் கவனத்துக்குப் போக, கரும்பைப் பொங்கல் பரிசில் சேர்க்காமல் அறிவிக்கச் சொன்னாராம். இதில், உ.பி-க்களுக்கு செம ஷாக். எதிர்க்கட்சிகள் கரும்பு வழங்கச் சொல்லிப் போராட, அதற்கு இசைந்து கரும்பையும் பொங்கல் பரிசில் அறிவித்தார் முதன்மையானவர். `ஒரு கரும்பு 33 ரூபாய் விலைக்குக் கொள்முதல் செய்யப்படும்’ என அரசு அறிவித்திருக்கும் நிலையில், அடிமாட்டு விலைக்கு வாங்கி ஆளும் ஆட்கள் ஏரியாவாரியாகப் புகுந்து விளையாடுகிறார்கள். எதிர்க்கட்சிகளைப் போராடவைத்து, ஆளும் ஆட்களைக் குளிரவைத்த முதன்மையானவரின் அரசியல் சாதுர்யத்தை சீனியர் அமைச்சர்களே வியந்து பாராட்டுகிறார்களாம். #ராஜதந்திரங்களைச் சக்கையாகப் பிழிந்து குடித்திருக்கிறாரே?

கிசுகிசு

உச்ச நடிகரின் படத்தை இயக்கும் துணிவான இயக்குநருக்கு, சமீபத்தில் போன் செய்தாராம் அண்ணன் தலைவர். பொங்கல் ரிலீஸ் பரபரப்பில் இருந்த இயக்குநரால் போனை எடுக்க முடியவில்லையாம். உடனே இயக்குநருக்கு நெருக்கமான ஆட்களுக்கு போன் செய்த அண்ணன் தலைவர், “இயக்குநர் ஏன் ஆங்கிலத்தில் முன் எழுத்து (இனிஷியல்) போடுகிறார்... பொங்கலுக்கு வெளியாகும் படத்தில் அவருடைய முன் எழுத்து தமிழில்தான் இருக்க வேண்டும். இதை எச்சரிக்கையாகவே சொல்லிவிடுங்கள்” என்றாராம். இயக்குநர் கவனத்துக்கு இதைச் சொல்வதா, வேண்டாமா எனக் குழம்பிக்கிடக்கிறார்கள் நெருக்கமானவர்கள். #ஏண்ணே... அவ்வளவு ஃப்ரீயாவா இருக்கீங்க?

கிசுகிசு

தங்கையின் பிறந்தநாளுக்காக சென்னை முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்கள், முதன்மையானவரைத் திகைக்கவைத்தனவாம். ‘அவர்களாக ஒட்டினார்களா… இல்லை யாருடைய ஒருங்கிணைப்பிலாவது இப்படி நடக்கிறதா?’ என விசாரிக்கச் சொன்னாராம். சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க போஸ்டர் அடித்தவர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து அனுப்பியிருக்கிறார்கள் இருவருக்குமான இடைவெளியை அதிகரிக்க நினைப்பவர்கள். #‘பயப்படுறியா குமாரு?’ மொமன்ட்!

கிசுகிசு

பம்பரக் கட்சியில் நடக்கும் உள்ளடி மோதல்களுக்கு, யார்தான் காரணம் என விசாரிக்கச் சொன்னாராம் புயல் தலைவர். “எந்த இக்கட்டிலும் கைவிடாமல் நீங்கள் யாரை உயர்த்திப் பிடித்தீர்களோ… அவரின் வேலையாகத்தான் தெரிகிறது” என நெருக்கமானவர்கள் சொல்ல, அதை நம்ப முடியாமல் திகைத்துப்போனாராம் புயல் தலைவர். “அவரையே அழைத்து நேரில் பேசிவிடுங்களேன்…” என இல்லத் தரப்பில் சொல்ல, “நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். இனி அழைத்துப் பேசிப் பலனில்லை” எனச் சொல்லி அமைதியாகிவிட்டாராம். “எவரையும் சட்டை செய்யாமல் இயங்கு…” என வாரிசுத் தலைவரை உத்வேகப்படுத் தியிருக்கிறாராம். #`யூ டூ புரூட்டஸ்?’ மொமன்ட்!

கிசுகிசு

ஜல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடந்த மெரினாவைப் போற்றும்விதத்திலும், பெருநகர மக்களுக்கு ஜல்லிக்கட்டு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டார் நடுநிலைத் தலைவர். அனுமதி கொடுக்கப்பட வாய்ப்பில்லை என்கிற நிலையில், ‘இந்த அட்டகாசமான யோசனையை நாம் எப்படிச் சிந்திக்காமல் விட்டோம்?’ என ரொம்பவே வருத்தப்பட்டாராம் வாரிசு அமைச்சர். சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்தி, கட்சிக்கான இமேஜையும் பெரிதாக உயர்த்தியிருக்கலாம் என்பது அவர் எண்ணமாம். ஆனாலும், ஒருவரின் ஐடியாவை காப்பி அடித்ததுபோலாகிவிடும் என்பதால், ‘இந்த வருடம் வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டாராம். #என்னா ஒரு வில்லத்தனம்!