அரசியல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

கோட்டையின் உச்ச அதிகாரி, வரும் ஜூன் மாதம் ஓய்வுபெறவிருக்கிறார். எந்தப் புகார்களுமற்ற, முதல்வரின் தனிச் செயலாளர்கள் உட்பட அனைவருடனும் சரியான இணக்கத்தைக் கடைப்பிடிக்கும் அவரது இடத்துக்கு, அவரையொத்த ஒருவரையே கொண்டுவர நினைக்கிறாராம் முதன்மையானவர். ஆனால், உச்ச அதிகாரிக்கு எதிராக மறைமுக மௌன யுத்தம் நடத்திய வடக்கத்திய அதிகாரிகள், இப்போதும் லாபி வேலைகளைத் தீவிரமாக்கிவிட்டார்களாம். எந்த ஆட்சியிலும் செல்வாக்காகத் திகழும் ‘வர்ம’ வித்தைகள் தெரிந்த அதிகாரியை, உச்ச பதவிக்குக் கொண்டுவர வியூகங்கள் தீவிரமாக நடக்கின்றனவாம். அதனால், ‘யாரைக் கொண்டுவரலாம்’ என்கிற ஆலோசனையைத் தற்போதைய உச்ச அதிகாரியிடமே கேட்கிற ஐடியாவில் இருக்கிறாராம் முதன்மையானவர். #தேவாவே சொல்லட்டும்!

கிசுகிசு

நியாயமாகக் கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதிக்குத்தான் இடைத்தேர்தல் வரப்போகிறது. ஆனால் இலைக் கட்சியின் துணிவுப் புள்ளி, தொகுதியைக் கூட்டணிக்குக் கொடுக்காமல் தங்கள் தரப்பு ஆளையே நிறுத்த நினைக்கிறாராம். பசைக் கணக்குகளைப் பக்காவாக வகுத்து வெற்றிபெறுகிற அளவுக்கு வியூகங்களைச் செய்யச் சொல்கிறாராம். இதில் வெறுப்பாகிப்போன கூட்டணிக் கட்சியின் ‘நறுமண’ தலைவர், விஷயத்தை டெல்லியின் கவனம் வரை கொண்டுபோனாராம். ‘இதெல்லாம் நீங்களே பேசி முடிவெடுக்கவேண்டிய விஷயம்’ என டெல்லி பின்வாங்கிக்கொள்ள, தொகுதி கிடைக்காவிட்டால் கூட்டணியே வேண்டாம் என்கிற அளவுக்கு நறநறக்கிறாராம் நறுமணத் தலைவர். #அந்த சைக்கிளை பஞ்சராக்குறதே எல்லாருக்கும் வேலையாப் போச்சு!

கிசுகிசு

‘இரண்டாம் கட்டத் தலைவர்களே இருக்கக் கூடாது’ என்பதில் மிக கவனமாகக் காய்நகர்த்துபவர் அண்ணன் தலைவர். அந்தக் கடுப்பிலேயே நன்கு பரிச்சயமான பல நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு அணி மாறிவிட்டார்கள். மிச்சமிருக்கும் ஒன்றிரண்டு நிர்வாகிகளும் சவுண்டைக் குறைத்து சைலன்ட் மோடுக்குப் போய்விட்டார்கள். அதனால், ‘ஒன் மேன் ஆர்மி’யாகக் கட்சியை நடத்திவருகிறார் அண்ணன் தலைவர். அதை உடைத்து, உட்கட்சிக்குள் குழப்பத்தைக் கொண்டுவர உளவுத் தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். ‘சீக்கிரமே கட்சி கலகலக்கும்’ என்கிறார்கள். #அண்ணனே நல்லா ஃபர்னிச்சர் உடைப்பாரே... எதுக்கு உளவுத்துறை?!

கிசுகிசு

ஜல்லிக்கட்டுக்காக மதுரைப் பக்கம் போன வாரிசு அமைச்சர், ஆதங்கத்தில் இருக்கும் பெரியப்பாவை நேரில் சந்தித்து நெக்குருகினாராம். ‘எது குறித்த உதவி என்றாலும் என்னை அணுகுங்கள்… இது உங்க ஆட்சி’ என்கிற அளவுக்கு வாரிசு உத்தரவாதம் கொடுத்ததில், மூத்தவருக்கு ரொம்பவே நிம்மதியாம். ஆனாலும், இதுகாலம் வரை சொல்லி அனுப்பிய எந்த விஷயமும் நடக்காத வேதனையை வாரிசு அமைச்சரிடம் வேதனையோடு பகிர்ந்துகொண்டாராம் மூத்தவர். ‘அன்பு, பாசம் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மூத்தவர் முரண்டு பிடித்துவிடக் கூடாது’ என்பதற்காக வாரிசு அமைச்சர் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தகவல். #‘அமைதிப்படை’ படத்த நாங்கல்லாம் அம்பது வாட்டி பார்த்துட்டோம்!

கிசுகிசு

பவன்காரருக்கும் முதன்மையானவருக்கும் இடையே இந்த அளவுக்கு முட்டல் மோதல்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், பவனின் பொங்கல் விழாவுக்கு தைரியமாகப் போய்வந்திருக்கிறார்கள் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். அரசுத் தரப்பின் கவனத்துக்குத் தகவல் தெரிவிக்காமல், அவர்கள் இப்படி நடந்துகொண்டது முதன்மையானவரை ரொம்பவே ஆத்திரப்படுத்தியிருக்கிறது. கலந்துகொண்டவர்கள் குறித்த விவரங்களையும் காரணங்களையும் விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம் முதன்மையானவர். பந்தாடுகிற அளவுக்குப் பாய்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள். #நீங்க ரொம்ப லேட்டு பாஸ்!