அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

சொந்த ஊர்ப் பக்கம் போன சின்ன தலைவியை, அவருடைய சகோதரர் ரொம்பவே பாசம் பொங்கப் பார்த்துக்கொண்டாராம். இனிஷியல் புள்ளிக்கு எதிராகச் சகலவிதமான காரியங்களையும் செய்த அந்தச் சகோதரர், இருவருக்குமான பேச்சுவார்த்தையையும் கட் செய்கிற அளவுக்கு இந்தப் பயணத்தில் பல விஷயங்களைப் போட்டுக்கொடுத்தாராம். சின்ன தலைவியின் கன்ட்ரோலில் இருக்கும் பல நிர்வாகங்கள் சீக்கிரமே சகோதரரின் ஆதரவாளர்களுக்கு மாற்றப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். #குக்கர்ல ஒண்ணுமே வேக மாட்டேங்குதே?!

கிசுகிசு

ஆளுங்கட்சியின் கூட்டணியிலும் சின்னத்திலும் நின்று வென்ற எம்.பி., மொத்தமாகக் காவிக் கட்சியின் ஆதரவாளராகிவிட்டார். மறைமுகமாக காவி ஆதரவு என்றிருந்தவர், வெளிப்படையாகப் பேட்டி கொடுக்கவும் தொடங்கினார். இடைத்தேர்தலில் காவிக் கட்சியை ஆதரிக்கப்போவதாகவும் அறிவித்தார். இதில் கொதித்துப்போயிருக்கும் முதன்மையானவர், அவருடைய எம்.பி பதவிக்கே சிக்கலை உருவாக்க முடியுமா எனச் சட்ட ஆலோசனை நடத்தச் சொல்லியிருக்கிறாராம். ‘எது வந்தாலும் சந்திக்கத் தயார்’ என்கிற மனநிலையில் இருக்கும் அந்த எம்.பி., வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காவிக் கட்சியின் கூட்டணியில் சீட் வாங்கப் பேசி முடித்துவிட்டாராம். #இவர் முல்லைக்கொடி மேலேயே தேரை ஏத்துவார்போலயே!

கிசுகிசு

தேசத்தையே தலைகுனிய வைத்திருக்கும் வாட்டர் டேங்க் விஷயத்தைப் பிசுபிசுக்கவைத்ததில் உளவுத்துறை பெரிய அளவுக்கு வேலை செய்திருக்கிறதாம். கூட்டணிக் கட்சியினரை `கப்சிப்’ ஆக்கியதிலும் உளவுத்துறையின் பங்களிப்பு பெரிதாம். எம்.பி தேர்தல் நெருங்கும் நேரத்தில், வாட்டர் டேங்க் விவகாரம் பெரிதாகி வாக்குகளைச் சிதைத்துவிடக் கூடாது என்பதில் உளவுத்துறைக்கு அவ்வளவு அக்கறையாம். அதனால், சி.பி.சி.ஐ.டி விசாரணையின் வேகத்தையும் குறைக்கச் சொல்லியிருக்கிறதாம் உளவுத்துறை. #மனிதன் மகத்தான சல்லிப்பயல்!

கிசுகிசு

கூட்டணி பலம், குடும்பத்தின் மீதான சிம்பதி உள்ளிட்ட விஷயங்களால், இடைத்தேர்தலில் கதர்க் கட்சி வேட்பாளர் வாகை சூடுவார் என முதற்கட்ட கணிப்பு விவரம் ஆளும் தரப்புக்குச் சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆனாலும், “பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை அடைய வேண்டும்” என அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் முதன்மையானவர். ‘கூட்டணிக் கணக்கைப் பார்க்காமல், கைக்காசைச் செலவழியுங்கள்’ எனவும் அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். ‘கதர்க் கட்சி வேட்பாளர்மீது இந்த அளவுக்கு மரியாதையா?’ என வியந்துபோகிறார்கள் ஆளும் புள்ளிகள். #அதானே... வழக்கமா உள்ளடி வேலைதானே பார்ப்போம்?!

கிசுகிசு

இடைத்தேர்தல் வந்தாலே அண்ணன் தலைவர் குஷியாகிவிடுகிறாராம். “கட்டுத் தொகையைக்கூடக் கட்ட முடியாமல் அண்ணன் சிரமப்படுறேன்… நீங்க ஏதும் உதவக் கூடாதா?” என நெருக்கமானவர்களுக்கு போன் போட்டு, நிதி கேட்கிறாராம். சில நிறுவனங்களை நோக்கியும் அண்ணனின் கோரிக்கைக் குரல்கள் நீளத் தொடங்கியிருக்கின்றனவாம். “தேர்தல் அறிவிப்பு வந்தாலே அண்ணனைக் கையில பிடிக்க முடியாது…” எனத் தம்பிகளே கலாய்த்துத் தள்ளுகிறார்கள். #தெரிஞ்சு போச்சா... எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா?!