
- கணியன் பூங்குன்றன்
வேலான கல்வி நிறுவனத்தின் திருமண விழாவை, கடந்த ஆட்சியில் இலைக் கட்சியின் முக்கியஸ்தர்களைவைத்து பிரமாண்டமாக நடத்தினார்கள். ஆட்சி மாறிய நிலையில், அதே திருமணத்துக்கு `வரவேற்பு விழா’ என அழைப்பிதழ் அடித்து, முதன்மையானவர் தொடங்கி அமைச்சர்கள் வரையிலான ஆளுங்கட்சியினரை அழைத்திருக்கிறார்கள். ஆட்சிக்குத் தக்கபடி நிறுவனத்தை நிலைநிறுத்தவே இந்த ஐடியாவாம். ‘கல்வி நிறுவனம் நடத்துறவங்க எப்படியெல்லாம் அரசியலைக் கத்துக்கொடுக்குறாங்க?’ என வியக்கிறார்கள் விவரமறிந்தவர்கள். #தென்ன மரத்துல ஒரு குத்து… ஏணில ஒரு குத்து!
சென்னையை மூன்றாகப் பிரித்து காவல்துறையின் அதிகார மையங்கள் அமைக்கப்படப்போவதால், முக்கியப் பதவிகளைப் பிடிக்கக் கடுமையான போட்டி. உளவுத்துறையில் கோலோச்சிய முன்னாள் நிலவு அதிகாரியை காக்கா பிடிக்க முக்கிய அதிகாரிகள் பலரும் வரிசைகட்டுகிறார்களாம். ‘நான் சொன்னா நடக்காதுய்யா… என் மனைவி கட்சியில் பொறுப்பில் இருக்கிறதால, நான் தலைவர் வீட்டுக்குப் போயிட்டு வாரேன். அவ்வளவுதான்’ என நிலவு அதிகாரி கழன்றுகொண்டாலும், ‘அவர் சொன்னால்தான் நடக்கும்’ என அடித்துச் சொல்கிறார்களாம் மீடியேட்டர்கள். #பேக்கரிய டெவலப் பண்ணதும் போதும்... பன்னு வேணும், வெண்ண வேணும்னு உசுர வாங்குறானுங்க!“
அமைச்சர் பதவியே போனாலும் பரவாயில்லை. நான் யாருக்கும் வளைந்து கொடுத்துப் போக மாட்டேன்” எனத் தெனாவட்டாகச் சொல்கிறாராம் வாய்த்துடுக்கு அமைச்சர். அவரை அமைதிப்படுத்தும்விதமாகப் பேசிய நிர்வாகிகளை, “என்னைய கண்டிக்க முதல்வருக்கு மட்டும்தான் அதிகாரம். மத்தவங்க எனக்கு புத்தி சொல்ல வேண்டியதில்லை” என மூக்குடைத்து அனுப்பினாராம். #கொஞ்சம் ஓவராத்தான் போறமோ..? போவோம்!
ஆளுங்கட்சிக்குள் நடக்கும் வாரிசு அரசியலை வறுத்தெடுக்கச் சொல்லி, கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அசைன்மென்ட் கொடுத்திருக்கிறாராம் துணிவானவர். சொன்னதோடு மட்டுமல்லாமல் சமீபத்திய கூட்டத்தில் முதன்மையானவரையும் வாரிசுப் புள்ளியையும் சகட்டுமேனிக்குத் தாக்கிப் பேசவும் செய்தார். ‘என் பேச்சை சில சீனியர் அமைச்சர்களே பாராட்டிப் பேசினாங்க…’ என நெருங்கியவர்களிடம் சொல்லிச் சிலிர்த்தாராம் துணிவானவர். #ஹய்யோ... ஹய்யோ...
அரண்மனைக்குப் பேர்போன பகுதியிலேயே ஆக்டிவ்வாகச் செயல்பட்ட இளம் அதிகாரியை, சமீபத்தில் சென்னை பெருநகர நிர்வாகப் பொறுப்புக்குத் தூக்கியடித்தார்கள். ‘இவரை ஏம்ப்பா எனக்குத் தலைவலியா கொண்டுவந்து போட்டாங்க?’ என மாநகரத்தின் உயரிய பொறுப்பில் இருக்கும் முண்டாசுக்காரருக்குக் கடுமையான கோபமாம். ஏதாவது காரணம் சொல்லி இளம் அதிகாரியை வேறு இடத்துக்கு மாற்ற பல வியூகங்கள் நடக்கின்றனவாம். #பயப்படுறியா குமாரு?‘

அறிவிக்கப்படாத ஆலோசகர்’ என்கிற அளவுக்கு அனைத்துத் துறை சம்பந்தமான ஒப்பந்தப் பணிகளிலும் தலையிடுகிறாராம் ரெய்டு புகழ் புள்ளி. தனக்கு நெருக்கமான நிறுவனங்களைக் குறிப்பிட்டு, அவர்களோடு கலந்து பேசச் சொல்கிறாராம். ‘முதன்மையானவருக்குத் தெரிந்துதான் இதெல்லாம் நடக்கின்றனவா?’ எனக் குமுறுகிறது கோட்டை வட்டாரம். #விஷயமில்லாமலா மச்சான் வேட்டிய ஏத்திக் கட்டுவான்?!“
அமைச்சரவையில் ஏதாவது அதிரடி மாற்றம் பண்ணுங்க. அப்போதான் ஜெயலலிதாவைப் பார்த்து பயந்த மாதிரி உங்களைப் பார்த்தும் கட்சிக்காரங்க பயப்படுவாங்க” எனக் குடும்பரீதியான சிலர் முதன்மையானவரை அநியாயத்துக்கு உசுப்பேற்று கிறார்களாம். தங்களுக்கு நெருக்கமானவர்களை அமைச்ச ரவையில் சேர்க்கத்தான் இப்படி வியூகம் வகுக்கப்படுகிறதாம். இது தெரிந்தோ தெரியாமலோ, ‘ஓராண்டு முடியட்டும்’ என முதன்மையானவர் சொல்ல, குடும்பரீதியான ஆட்களுக்குக் குப்பென வியர்த்துவிட்டதாம். மறுபடியும் மனதை அசைக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்களாம். #ராஜதந்திரங்களைக் கரைச்சு லிட்டர் லிட்டரா குடிச்சிருப்பாய்ங்கபோலயே!