அரசியல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மூத்த அமைச்சர், தனக்கு முக்கியத் துறை கிடைக்கும் என நினைத்தார். ஆனால், சாதாரண துறையை ஒதுக்கி அவரை டம்மியாக்கினார்கள். ‘ஏன் இந்த அவமானம்?’ எனப் போர்க்கொடி உயர்த்தியவர், ‘நிச்சயம் என் இலாகா மாறும்’ என நம்பிக்கையோடு காத்திருக்கிறாராம். அதனால், தற்போதைய துறைரீதியான நடவடிக்கைகளைக் கண்டுகொள்வதே கிடையாதாம். அதிகாரிகள் எது குறித்துப் பேச வந்தாலும், “இந்தத் துறைக்குச் சீக்கிரமே வேற அமைச்சர் வந்துடுவார். நான் வேற துறைக்கு அமைச்சராகிடுவேன். அதனால உங்களுக்குச் சரின்னு படுறதைப் பண்ணுங்க” என்கிறாராம். அப்புறமென்ன, அதிகாரிகள் வைப்பதுதான் சட்டமாம். #ஐயா சாமி... இதெல்லாம் நியாயமா?

கிசுகிசு

சூப்பர் நடிகரைச் சந்தித்து ஆச்சர்யப்படுத்திய சின்ன தலைவி, அடுத்து சந்திக்கப்போவது யாரைத் தெரியுமா? அதிகாரம்மிக்க பவன் புள்ளியையாம். ‘மரியாதை நிமித்தமாகச் சந்திக்கலாமா?’ என பவன் புள்ளிக்குத் தகவல் அனுப்பிப் பார்த்தார்களாம். “தமிழகத்தின் முன்னாள் முதல்வருக்குத் தோழியாக இருந்த நீங்கள், தமிழக அரசியலில் தொடர்ந்து நீடிப்பவர். அதனால், தாராளமாகச் சந்திக்கலாம்” என பதில் வந்திருக்கிறதாம். இதற்கிடையில், ‘தவறியும் இந்தச் சந்திப்பு நடந்துவிடக் கூடாது’ என பவன் புள்ளிக்கு நெருக்கமான நெட்வொர்க்கிடம் கெஞ்சினாராம் இலைக் கட்சியின் துணிவானவர். “ஏற்கெனவே உட்கட்சி மோதல்களைப் படாதபாடுபட்டு கட்டுப்படுத்திவெச்சுருக்கேன். அந்தம்மாவால் எதுவும் செய்ய முடியாதுன்னு நம்பவெச்சுருக்கேன். இந்த நேரத்துல இப்படியொரு சந்திப்பு நடந்தால், ரொம்ப சிக்கலாகிடும்” என டெல்லி சோர்ஸ்களிடமும் நிலைமையைச் சொல்லிக் கலங்குகிறாராம் துணிவானவர். #பங்களா... பவன்-னு... பில்டிங்லேயே இவருக்குக் கண்டமா இருக்கே!

கிசுகிசு

காவிக் கட்சியில் புதிய பொறுப்பாளர்களை நியமிக்க, மாஜி காக்கி அதிகாரி ரெடி செய்து கொடுத்த பட்டியலை, பல காலமாக டெல்லி தலைமை கிடப்பில் போட்டிருக்கிறதாம். ‘புதிய நிர்வாகிகளை நியமித்தால்தான் கட்சிக்குப் புதுத் தெம்பூட்ட முடியும்’ எனப் பல ரூட்டில் நினைவூட்டியும் பலன் இல்லையாம். “உ.பி தேர்தல் முடிந்த பிறகுதான் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்ப்பாங்க” என சீனியர்கள் சொல்ல, அதுவரை தன் ஆதரவாளர்களை அமைதிகாக்கச் சொல்லியிருக்கிறாராம் மாஜி காக்கி. # ‘தம்பி... டீ இன்னும் வரல’ மொமன்ட்!

கிசுகிசு

மாஜி மில்க் மினிஸ்டரை தமிழக போலீஸ் சல்லடை போட்டுத் தேட, தூக்கிவாரிப்போடுவதுபோல் ஒரு புகைப்படம் அவர்களின் கவனத்துக்கு வந்ததாம். மாஜி மினிஸ்டர் படு கேஷுவலாக அமர்ந்து டீ சாப்பிடுவது போன்ற அந்தப் புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது என அட்மாஸ்பியர் ஆராய்ச்சி நடக்க, அது ரஷ்யா எனத் தெரிந்ததாம். ‘ரஷ்யாவுக்குத் தப்பிவிட்டாரா?’ என அதிர்ந்த போலீஸ், இலைக் கட்சி நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்திருக்கிறது. ‘சில வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம்’ என அவர்கள் சொன்ன பிறகுதான் ஆசுவாசமானதாம் போலீஸ். #ஷாக்கை குறைங்க பாஸ்!

கிசுகிசு

சாதிரீதியான பாசம் காட்டுவதில் பசுமை அமைச்சரை அடித்துக்கொள்ள ஆளே இல்லையாம். தன்னைச் சுற்றி நிற்பவர்கள் தொடங்கி, அதிகாரிகள் வரை அனைவரும் தன்னுடைய சாதிக்காரர்களாகவே இருக்க வேண்டும் என நினைக்கிறாராம். அநியாய ‘சாதிப்பாசம்’ இப்போது முதன்மையானவர் கவனம் வரை போயிருக்கிறதாம். #நச்சை ‘விதைக்கிறது’ நல்லால்ல மினிஸ்டர்!

கிசுகிசு

புயல் தலைவரின் வாரிசைக் கட்சியில் முன்னிறுத்த, ஆரம்பத்தில் உறுதுணையாக இருந்தவர் கொங்கு மண்டல சீனியர் புள்ளி. ஆனால், கட்சிக்குள் கிளம்பும் எதிர்ப்புக் குரல்கள் நாளுக்கு நாள் பெரிதாக, அந்த சீனியர் புள்ளியும் சைலன்ட்டாகிவிட்டாராம். தனக்கு நெருக்கமான நிர்வாகிகளைக்கூட அவர் அமைதிப்படுத்துவது இல்லையாம். இதில், புயல் தலைவருக்குத் தாங்க முடியாத வருத்தமாம். ‘நீங்களே நேரில் அழைத்துப் பேசுங்களேன்…’ என இல்லத் தரப்பில் சொல்லப்பட, கண்கலங்கி அமைதிகாத்தாராம் புயல். #வேணாம்... அழுதுருவேன்!

கிசுகிசு

அன்பான அமைச்சருக்கும் தடாலடியான மன்னர் எம்.எல்.ஏ-வுக்குமான மோதல், நாளுக்கு நாள் பெரிதாகிறதாம். எம்.எல்.ஏ-வால் ஓரங்கட்டப்பட்ட ஆட்களைக் கொண்டுவந்து கட்சியை வலுவாக்க நினைக்கிறார் அன்பான அமைச்சர். ‘என்னை ஒழித்துக்கட்ட அமைச்சர் செய்கிற சதி’ எனக் கூப்பாடு போடுகிறார் எம்.எல்.ஏ. மோதல் அறிவாலயம் வரை போயிருக்கிறது. #இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?!