அரசியல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

ஆன்மிக ஆர்வத்தில், யாராலும் அடித்துக்கொள்ள முடியாத ஆளாக இருக்கிறாராம் கற்பிக்கும் துறையின் அமைச்சர். இதனால் பெரிய இடத்து இல்லத்து மரியாதையை, `போதும்... போதும்’ என்கிற அளவுக்குப் பெற்றிருக்கிறாராம். அமைச்சர் போக முடியாத சூழலிலும், சம்பந்தப்பட்ட கோயில்களிலிருந்து பிரசாதம் வரவழைக்கப்பட்டு, இல்லத்துக்கும் எடுத்துச் செல்லப்படுகிறதாம். #மக்களுக்கு விபூதி அடிக்காம இருந்தா சரி!

ஆளுங்கட்சியின் ஆன்லைன் துறைக்கு, வளர்ந்த வாரிசைக் கொண்டுவந்ததில் பலருக்கும் வருத்தம். ஏற்கெனவே இந்தத் துறையை வகித்த அமைச்சருக்கும், இந்தப் புதிய நியமனத்தில் திருப்தி இல்லையாம். “எத்தனையோ திறமையான இளைஞர்கள் இருக்கும்போது, எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஒருவருக்கு மேலும் மேலும் வெளிச்சம் தருவது நியாயமா?” என்கிறார்கள் பழைய நிர்வாகியின் கீழ் பணியாற்றியவர்கள். இதற்கிடையில், “இன்னும் ஒரு மாசத்துக்குள் ஆன்லைன் டீமை எப்படி மாற்றுகிறேன் எனப் பாருங்கள்” எனச் சவால்விட்டிருக்கிறாராம் வளர்ந்த வாரிசு. #ராங்கா போகாம இருந்தா சரி!

கிசுகிசு

தவறியும் தன் பக்கம் ரெய்டோ, குற்றச்சாட்டோ வந்துவிடாத அளவுக்கு, ஆளுங்கட்சியோடு பக்கா டீலிங்கில் இருக்கிறார் மாஜி மன்னர் மந்திரி. இணக்கமான பேச்சுவார்த்தையில் இருந்தாலும், ஆளுங்கட்சியில் ஐக்கியமாகிற எண்ணம் மட்டும் இல்லையாம். ‘அடிக்கடி கட்சித் தாவி, ரொம்ப கெட்ட பெயராகிடுச்சு…’ எனத் தயக்கத்துக்கு அவர் சொல்லும் காரணம்தான் ஆளும் தரப்பை ரொம்பவே சிரிக்கவைக்கிறதாம். #பின்ன சிரிக்காம...? ஹாஹா!

‘தொகுதிப் பணிகளில் கவனிக்கத்தக்க அளவுக்கு ஜொலிப்பார்’ எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் அந்தப் பெண் எம்.பி. அந்த அளவுக்கு இயல்பிலேயே சமூக அக்கறைகொண்டவர், கொரோனா நேரத்தில்கூட பெரிதாக மக்கள் பணியாற்றாததுதான் ஆச்சர்யம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரிடம், ஆன்லைன் வாயிலாகக் குறைகளைச் சொன்னாலும், அதற்கும் ஆக்‌ஷன் எடுக்கப்படுவதில்லையாம். ‘சாதனை எம்.பி-யாகப் பெயர் எடுப்பார்’ எனப் பலராலும் கணிக்கப்பட்டவர், இப்படி கப்சிப் காப்பது ஏன் என்பதுதான் பலருக்கும் புரியாத கேள்வி. #செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே… சேவை செய்ய தயங்குறியே!

பொங்கல் பரிசு போதிய அளவுக்கு சக்சஸாக அமையாததால், உள்ளாட்சித் தேர்தலில் நூறு சதவிகித வெற்றி சாத்தியம் இல்லை என நோட் வைத்திருக்கிறதாம் உளவுத்துறை. ஆனால், முதன்மையானவரோ, ‘மக்கள் அதையெல்லாம் சட்டை செய்ய மாட்டார்கள்’ என உறுதியாகச் சொல்கிறாராம். சீனியர் அமைச்சர்கள் சிலரிடமும் இதே வார்த்தைகளை முதன்மையானவர் சொல்ல, அவர்களிடமிருந்து ஒப்புதலான பதில் வரவில்லையாம். ‘நமக்கு ஏற்ற நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதே சாதுர்யம்’ என்கிறார்களாம். #பயங்காட்டுறாய்ங்க பரமா..!

கிசுகிசு

‘வி.ஐ.பி-கள் சம்பந்தப்பட்ட சொத்துப் பரிமாற்றம் எதுவாக இருந்தாலும், தன் கவனத்துக்குத் தகவல் சொல்லப்பட்ட பிறகே நடக்க வேண்டும்’ எனக் கறார் உத்தரவு போட்டிருக்கிறாராம் சம்பந்தப்பட்ட துறையின் கீர்த்தியான அமைச்சர். அதனால், சிபாரிசு என யார் வந்தாலும், ‘சார், அமைச்சரிடம் ஒரு வார்த்தை சொல்லிடுங்க’ என்கிறார்களாம் அதிகாரிகள். தன் கவனத்துக்கு வரும் வி.ஐ.பி-கள் விவகாரத்தில் தலையிட்டு, தானே முடித்துக்கொடுத்ததுபோல கெத்துக்காட்டி சிரிப்பதில் அமைச்சருக்குத் தனி உற்சாகமாம். #ஹலோ... யாரு... தன்ராஜா... ஆமாமா... நான் ராமசாமி பேசுறேன்!

பல வருடங்களாக வாடகை வீட்டில் இருந்த அண்ணன் தலைவர், ஒருவழியாக அந்த வீட்டைவிட்டுக் கிளம்புகிறார். ‘சொந்த வீட்டுக்குக்கூட வழியில்லாமல் அண்ணன் அல்லாடுவதாகச் சொல்லப்படுவதெல்லாம் பொய்’ எனப் பரப்பியவர்களே கலங்குகிற அளவுக்கு வீடு விஷயத்தில் ரொம்பவே அல்லாடுகிறார். வீட்டு உரிமையாளர் கொடுக்கும் நெருக்கடியால், வாடகைக்கு வேறு வீடு பார்த்திருப்பவர், தான் வளர்த்த கோழி, வாத்து, நாய், குருவிகளைக் கூட்டிக்கொண்டு புது வீட்டுக்கு எப்படிப் போவது எனத் தெரியாமல் திண்டாடுகிறாராம். காரணம், புதிய வீடு மிகச் சிறியதாம். #என்னம்மா... தேவி ஜக்கம்மா... இது நியாயமா?