அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

கற்பிக்கும் துறையின் அமைச்சர், சட்டமன்றத்தில் துண்டுச்சீட்டைக்கூடப் பார்க்காமல் பேசிய நிகழ்வு, முதன்மையானவரை வியக்கவைத்துவிட்டதாம். வீட்டுக்கே அழைத்து அமைச்சரை மனதாரப் பாராட்டிய முதன்மையானவர், ‘தம்பிக்கும் கத்துக்கொடுப்பா’ எனச் சொல்லி வாரிசைக் கைகாட்டினாராம். சீக்கிரமே மாண்புமிகுவாக மகுடம் சூடவிருக்கும் வாரிசுக்கு உரிய வழிகாட்டுதலைச் செய்ய, தனிக்குழுவையே உருவாக்கப்போகிறார்களாம். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துக்கொள்ளச் சொல்லியும் வாரிசுக்கு உத்தரவாம். #குழு உருவாக்குறதுல கின்னஸ் ரெக்கார்ட் பண்ணுவாங்கபோலயே!

கிசுகிசு

இலைக் கட்சியில் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ட்ரீட்மென்ட் புள்ளியின் நடவடிக்கைகள், மிகுந்த மர்மமாக இருக்கின்றனவாம். பணிவானவர், துணிவானவர் என இரு பக்கமும் சாயாமல் நடுநிலை காக்கிறாராம் இவர். தன் சமூகத்து பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து, ‘கட்சிக்கு எதிர்காலம் வேண்டுமென்றால் அந்தம்மாவை இணைத்தால்தான் உண்டு’ என்கிறாராம் ஆணித்தரமாக. அதேநேரம் சின்ன தலைவி பலமுறை போனில் ட்ரீட்மென்ட் புள்ளியுடன் பேச முயல, அவருக்கும் பிடிகொடுக்காமல் புறக்கணிக்கிறாராம். “நான் கட்சிக்காக மட்டும்தான் பேசுவேன். யாரையும் இந்தக் கட்சி இழக்கக் கூடாது. அவ்வளவுதான்” என்கிறாராம் உறுதியாக. பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் இவர் பேச்சுக்குத் தலையாட்டுவதுதான் இலைக் கட்சியின் துணிவானவரைத் தூங்கவிடாமல் செய்கிறதாம். #தூங்காத கண்ணென்று ரெண்டு... துடிக்கின்ற மனமென்று ரெண்டு!

கிசுகிசு

சென்னை கே.கே.நகர் காமராஜர் சாலைப் பகுதியில், சாலையின் நடைபாதையை ஆக்கிரமித்து மணல், ஜல்லிகளைக் குவித்துவைத்திருக்கிறது கதர்க் கட்சிப் புள்ளியின் மணக்கும் நிறுவனம் ஒன்று. ஆளுங்கட்சியின் பெண் எம்.பி-யிடம் இது குறித்துப் பலமுறை புகார் சொல்லியும், அவர் கண்டும் காணாமல் இருந்துவிட்டாராம். ‘நடைபாதை நடப்பதற்கே’ என போர்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்திலேயே மணலைக் குவித்துவைத்திருக்கும் மணக்கும் நிறுவனம், ‘மாநகராட்சியின் நேர்மையான அதிகாரியே எங்கள் முதலாளிக்கு நெருக்கம்’ என்கிறார்களாம் புகார் சொல்லிப் போராடுகிறவர்களிடம். #மக்களின் பாதையில் குறுக்கே நிற்பதில் எல்லாக் கட்சியும் ஒன்றுதான்!

கிசுகிசு

சொந்த வீடு இல்லாமல் அல்லாடும் அண்ணன் தலைவர், சமீபத்தில் மயக்கமாகிக் கீழே விழுந்தார். “ஒரு மாதம் முழுதாக ஓய்வெடுங்கள்” என மருத்துவர்கள் சொன்னதால், வாடகை வீட்டைக் காலிசெய்ய அவகாசம் கேட்டிருந்தாராம். ஆனால், ‘அவகாசம் கொடுக்க முடியாது. அள்ளிக்கொண்டு கிளம்பாவிட்டால் போலீஸில் புகார் கொடுப்போம்’ என்கிற அளவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாம். வேறு வழியில்லாமல், புறநகர் சென்னையில் புது வாடகை வீடு பார்த்து, அவசரகதியில் குடிபோனாராம் அண்ணன் தலைவர். மாத வாடகைத் தொகை மலைக்கவைக்கிறது என்கிறார்கள். #மறுபடியும் மயங்கவைக்காம இருந்தா சரி!

கிசுகிசு

இலைக் கட்சி வழக்கு சின்ன தலைவிக்கு எதிராகத் திரும்பியதில் பணிவானவர், துணிவானவரைவிட அதிகம் மகிழ்ந்தவர் இனிஷியல் தலைவர்தானாம். தன்னை ஓரங்கட்டி சின்ன தலைவி ஆக்டிவாகச் செயல்பட்டதில், இனிஷியல் தலைவருக்கு மிகுந்த வருத்தமாம். சுற்றுப்பயணங்கள் குறித்த விஷயங்களைக்கூட சின்ன தலைவி அவரிடம் விவாதிக்கவில்லையாம். கட்சிரீதியான கணக்கு வழக்குகளையும் சின்ன தலைவி கேட்டதால், குடும்பத்துக்குள் பனிப்போர் நிலவிவந்ததாம். இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பு சின்ன தலைவிக்கு எதிராக வர, ‘இஷ்டத்துக்குச் செயல்பட்டால் இப்படித்தான் நடக்கும்’ என்றாராம் இனிஷியல் தலைவர். #விட்டா, ஆயிரத்தியோரு தேங்கா உடைப்பார்போல!

கிசுகிசு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கட்சிக் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்பட்டவர்கள்மீது ரகசிய விசாரணை நடத்திவருகிறது ஆளுங்கட்சி. திருவாரூர் மாவட்டத்தில் நடந்த குளறுபடிகளுக்கு, மாவட்டப்புள்ளிதான் காரணம் எனக் கூட்டணிக் கட்சியினரே வெளிப்படையாகச் சொல்லி விட்டார்களாம். தனக்கு ஆகாத நிர்வாகிகளைப் பொறுப்புக்கு வரவிடாமல் செய்வதற்காக, கூட்டணிக் கட்சிகள் கேட்காத இடங்களையெல்லாம் பழிவாங்கும்விதமாக மாவட்டப்புள்ளி ஒதுக்கி உள்ளடி வேலை செய்தாராம். ரகசிய விசாரணை விவரங்கள் தலைமை வரை போயிருப்பதால், சீக்கிரமே மாவட்டப்புள்ளி மீது நடவடிக்கை பாயும் என்கிறார்கள். #அப்ப, திருவாரூர்ல திருவிழானு சொல்லுங்க!